அ
றிவியல் புனைவுப் படங்களின் திரைப்பட வரிசையில் மாபெரும் சாதனை என்று புகழப்படுவது ‘ஸ்டார் வார்ஸ்’. அதன் முதல் படம் 1977-ல் வெளியானது. தற்போது 40-வது வருடத்தில் 8-வது படமாக டிசம்பர் 15 அன்று வெளியாகிறது ‘ஸ்டார் வார்ஸ்: த லாஸ்ட் ஜேடி’’ (Star Wars: The last Jedi).
ஸ்டார் வார்ஸ் திரைப்பட வரிசைக்கு உலகமெங்கும் தலைமுறைகளைத் தாண்டிய ரசிகர்கள் உண்டு. மும்மூன்று படங்களாக வெளியாகும் பிரதான பட வரிசையில், முதலிரண்டு முத்தொகுப்புகளுக்குப் பின்னர், புதிய முத்தொகுப்பின் முதல் படமாக ‘ஸ்டார் வார்ஸ்: த ஃபோர்ஸ் அவேகன்ஸ்’ 2015-ல் வெளியானது. தற்போது இத்தொகுப்பின் 2-வது படமாகவும், எபிசோட் கணக்கில் 8-வது படமாகவும் ‘த லாஸ்ட் ஜேடி’ வெளியாகிறது. முத்தொகுப்பின் படங்களுக்கு இடையே 3 ஆண்டுகளாக இருந்த இடைவெளி புதிய தொகுப்பிலிருந்து 2 ஆண்டாக மாற்றப்பட்டதன் அடிப்படையில், தொகுப்பின் இறுதிப் படமான 9-வது எபிசோட் எதிர்வரும் 2019 டிசம்பரில் வெளியாக உள்ளது.
இந்தக் கணக்கு மட்டுமல்ல; அண்டவெளியின் கற்பனைக் கிரகங்களில் விரியும் அறிவியல் புனைவின் கிளைக் கதைகள், எந்திரன்களை உள்ளடக்கிய கதை மாந்தர்கள், அவர்களுக்கு இடையேயான உறவு முறைகள், நட்பு, முன்விரோதம் என அனைத்தும் ஸ்டார் வார்ஸ் ரசிகர்களுக்கு அத்துப்படி. அவர்களை நம்பி புதிய பாத்திரங்கள் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களுடன், ஸ்டார் வார்ஸ் வரிசையின் நீளமான படம் என்ற பெருமையுடனும் ‘த லாஸ்ட் ஜேடி’ (Star Wars: The last Jedi) வருகிறது.
முந்தைய எபிசோடான ‘த ஃபோர்ஸ் அவேகன்ஸ்’ முடிந்த இடத்திலிருந்து தொடங்கும் கதையில், ஜேடி மாஸ்டரான லூக் ஸ்கைவாக்கரைக் கண்டடையும் ரே, அவரது லேசர் வாளை லூக்கிடம் அளிக்கிறார். இருவருக்கும் இடையிலான உறவு, அடுத்த ஜேடியின் அதிரடி ஆகிய கேள்விகளுக்கு விடை தேடும் கதையில் ஃபின், போ உள்ளிட்டோர் கைகோக்க புதிய சாகசங்களின் பின்னணியில் பழைய ரகசியங்கள் பலவும் வெளிப்படுகின்றன.
ரியான் ஜான்ஸன் இயக்கியுள்ள இப்படத்தில் மார்க் ஹாமில், கேரி ஃபிஷர், டெய்சி ரிட்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முந்தைய எபிசோடுகளுக்கு இசையமைத்த ஜான் வில்லியம்ஸ் இப்படத்திலும் தொடர்கிறார்.