இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: அறம்

செய்திப்பிரிவு

இஸ்ரோவின் ராக்கெட் ஏவு தளமான ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் உப்பங்கழி ஏரிப்பகுதியை ஒட்டிய கிராமம் காட்டூர். குடிநீர் ஆதாரத்தை இழந்து அதற்காகப் போராடி வருகிறது. அங்கே வாழும் ஏழைக் குடும்பங்களில் சுனு லட்சுமியின் குடும்பமும் ஒன்று. கருவேலமுள் வெட்டும் வேலைக்குச் செல்லும்போது, தன் மகன், மகளை அழைத்துச் செல்கிறாள். எதிர்பாராதவிதமாக, அந்தப் பகுதியில் தோண்டப்பட்டு, மூடாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடுகிறாள் சிறுமி. பெற்றோரும், ஊரும் கதற, ஊடகங்கள் ஓடிவர, குழந்தையை மீட்கும் பணியில் நேரடியாக களத்துக்கு வருகிறார் மாவட்ட ஆட்சியரான நயன்தாரா. அதிகாரவர்க்கம், ஊடகங்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் அழுத்தங்களை எதிர்கொண்டு, அவரால் குழந்தையை மீட்க முடிந்ததா, இல்லையா என்பது கதை.

இதை தமிழ்த் திரைப்பட உலகத்துக்கே உரிய எந்த ஒரு சிறு ‘கமர்ஷியல்’ சமரசமும் செய்துகொள்ளாமல் கச்சிதமான திரைக்கதையுடன் திரையில் கொண்டுவந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கோபி நயினார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒவ்வொரு முறை ராக்கெட் விண்ணில் சீறிப்பாயும்போதும், அந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு அடிப்படைத் தேவையான தண்ணீரைக்கூட வழங்காமல் இருக்கும் அரசு நிர்வாகத்தின் முகத்திரையை பட்டவர்த்தனமாகக் கிழித்திருக்கிறது இந்தப் படம். விண்ணுக்கு ராக்கெட்களை ஏவிக்கொண்டிருக்கும் நாட்டில், குழிக்குள் விழும் குழந்தைகளை மீட்க உருப்படியான கருவிகள் இல்லையே என்ற வேதனையை அறச்சீற்றத்தோடு கூறுகிறது. குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததுமே, ‘புறக்கணிக்கப்பட்ட மக்களின் இந்தியா இதுதான்’ என்று பொட்டில் அறைந்து முன்வைக்கிறது. பெரும்பான்மை மக்களால் உருவாவதுதான் உண்மையான ஜனநாயகம், அரசாங்கம். ஆனால், அதிகார வர்க்கம் முன்னிறுத்தும் ஜனநாயகத்துக்கு கீழ்தான் ஒரு உயர் அதிகாரி ஏவல் செய்யவேண்டி இருக்கிறது என்பதை, ஆட்சியரின் களப்போராட்டம் வழியாகக் காட்டுகிறது.

‘கலெக்டர் மதிவதனி’ என்ற கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகில் வேறு எவரையும் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்கு தன் நடிப்பில் நியாயம் செய்திருக்கிறார் நயன்தாரா. கூரிய பார்வை, கம்பீர நடை, பக்குவ நடிப்பு, நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் கனிவு என மதிவதனியாகவே மாறி இருக்கிறார். முழு திரைப்படத்துக்கும் சேர்த்து இரண்டே இரண்டு புடவைகளை மட்டுமே அணிந்து நடித்திருக்கும் நயன்தாராவுக்கு, மிகச்சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும், அவரது வாழ்நாளின் மிக முக்கிய கதாபாத்திரமாக மாறிவிடுகிறது ‘மதிவதனி’.

‘நான் ஒரு ஜனநாயகவாதி’, ‘எனக்கு பவர் பாலிடிக்ஸ் தெரியாது’, ‘என்னால் மக்களைக் குறைசொல்ல முடியாது’, ‘ஓர் அடிமையால் இன்னொரு அடிமைக்கு சேவை செய்ய முடியாது’ என மதிவதனி பேசும் வசனங்கள், இயக்குநரின் தெளிவான அறம் சார்ந்த அரசி யல் பார்வையை வெளிப்படுத்து கின்றன.

சுமதியாக நடித்துள்ள சுனு லட்சுமி, குழந்தை தன்ஷிகாவாக வரும் குழந்தை நட்சத்திரம் மகாலட்சுமி ஆகியோரும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றனர். சிறுமியின் தந்தையாக நடித்துள்ள ராமச்சந்திரன் துரைராஜ், ‘காக்கா முட்டை’ ரமேஷ், விக்னேஷ், பழநி பட்டாளம் என மற்ற கதாபாத்திரங்களும் தனித்து நிற்கின்றன.

குடிநீர் இல்லாத நிலப்பகுதி, அங்குள்ள வாழ்க்கை, குழந்தை மீட்புக்களம் ஆகியவற்றை மிக நம்பகமாக முன்னிறுத்துகிறது ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு. ஏழைகளின் பரிதவிப்பு, பதற்றத்தை நமக்குள்ளும் கடத்துகிறது ஜிப்ரானின் பின்னணி இசை. கு.உமாதேவியின் பாடல் வரிகள் எளிய மக்களின் போர்க்குணத்தை பிரதிபலிக் கின்றன.

படத்தில் இடைச்செருகலாக வரும் தொலைக்காட்சி விவாதங்கள், சிறுமியை மீட்கும் காட்சிகளால் பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி அழுத்தத்தை மட்டுப்படுத்த உதவுகின்றன. சாமானிய மக்களின் அரசியலை அழுத்தமாகப் பேசியிருக்கும் ‘அறம்’ திரைப்படத்தைக் கொண்டாட வேண்டியதும் அறம்தான்!

SCROLL FOR NEXT