இ
ரண்டாம் உலகப் போர் மூண்டபோது இங்கிலாந்தின் பிரதமராக பதவிவகித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். அப்போரின் முடிவையும் அதன் பின்னரான உலக வரலாற்றையும் அவர் மாற்றியதன் சுவாரசியப் பக்கங்களை அலசுகிறது ‘டார்க்கஸ்ட் ஹவர்’ திரைப்படம்.
ஹிட்லரின் நாஜிப் படைகள் பிரான்ஸை வீழ்த்தி, சோவியத் ரஷ்யாவை முற்றுகையிட்டிருக்கின்றன. ஹிட்லரின் குண்டு மழை விமானங்களுக்காக இங்கிலாந்து மக்கள் இரவெல்லாம் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள். இவற்றுடன் சொந்தக் கட்சியின் எதிர்ப்பாளர்கள், ஆதரவளிக்கும் எதிர்க்கட்சியின் நெருக்கடிகள், மன்னன் நான்காம் ஜார்ஜின் அவநம்பிக்கை, டன்க்ரிக் கடற்கரையில் மரணத்தின் விளிம்பில் பரிதவிக்கும் 3 லட்சம் இங்கிலாந்து வீரர்கள் என இக்கட்டான சூழலின் மத்தியில் நாட்டின் பிரதமராக சர்ச்சில் களமாடுவதை நெருக்கமாக நின்று பதிவுசெய்திருக்கிறது ‘டார்க்கஸ்ட் ஹவர்’.
ஹிட்லரின் மிரட்டலுக்கு மண்டியிட மறுத்து, தனது நெஞ்சுறுதி மிக்க வியூகத்தாலும் உணர்ச்சிகரமான உரையாலும் மக்களின் ஆதரவைக் கவரும் சர்ச்சில், போர் மேகங்களைத் தனது சுருட்டுப் புகையின் ஊடே ஊதித் தள்ளுகிறார். இரண்டாம் உலகப்போரின் இருண்ட கணங்களை வின்ஸ்டன் சர்ச்சில் என்ற விடிவெள்ளி உதவியுடன் இங்கிலாந்து எதிர்கொண்டதை விறுவிறுப்பான திரைக்கதையில் அணுகியிருக்கும் இப்படம் நவம்பர் 22 அன்று திரைக்கு வருகிறது.
சர்ச்சிலின் கனமான கதாபாத்திரத்தில் கரைந்திருக்கும் கேரி ஓல்ட்மேன், திரைவிழா விமர்சகர்களால் ஆஸ்கர் விருதுக்கான ஆருடப் பட்டியலில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். படத்தின் இயக்குநரான ஜோ ரைட் தனது ‘அடோன்மெண்ட்’ படத்தின் இசைக்காக ஆஸ்கர் வென்ற டாரியோ மரியனெல்லியுடன் இப்படத்திலும் கைகோத்திருக்கிறார். சில மாதங்கள் முன்பு வெளியான கிறிஸ்டோபர் நோலனின் ‘டன்க்ரிக்’ கதையின் இன்னொரு பக்கத்தை, இங்கிலாந்திலிருந்து அணுகிய திரைக்கதைக்காக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறது ‘டார்க்கஸ்ட் ஹவர்’.