இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: நெஞ்சில் துணிவிருந்தால்

செய்திப்பிரிவு

வி

க்ராந்த், சந்தீப் கிஷன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். சந்தீப்பின் தங்கை ஷாதிகாவுக்கும் விக்ராந்த்துக்கும் காதல். ஒரு பெரிய டீலிங்குக்காக விக்ராந்த்தைக் கொல்லத் திட்டமிடுகிறது ஹரிஷ் உத்தமன் கும்பல். ஆள்மாறாட்டத்தால், அவருக்கு பதிலாக நண்பன் சந்தீப்புக்கு குறிவைக்கின்றனர். அதில் இருந்து தப்பிய சந்தீப், இந்த சதி பற்றி போலீஸ் நண்பரின் உதவியுடன் புலனாய்வு செய்கிறார். வில்லன் கும்பலின் உண்மையான இலக்கு தன் நண்பனல்ல; தன் தங்கை என்பது அப்போதுதான் தெரிகிறது. நண்பனையும், தங்கையையும் நாயகன் காப்பாற்றினாரா? கும்பலின் கொடூர செயல்களுக்கு முடிவு கட்டப்பட்டதா என்பதே மீதிக்கதை.

இயக்குனர் சுசீந்திரன், முக்கியமான சமூகப் பிரச்சினைகளை சுவாரசியமாக, விறுவிறுப்பாக சொல்லக்கூடியவர். மருத்துவக் கல்லூரி சீட்டுக்காக கொலை என்ற பிரச்சினையை இந்தப் படத்தில் ஒன்லைனாக எடுத்திருக்கிறார். ஆனால், அதற்கு பலம் சேர்க்கும் காட்சிகள் படத்தில் இல்லை. பல இடங்களில் அவரது முந்தைய பட சாயல். பல இடங்களில் லாஜிக் மீறல்.

நாயகன் சந்தீப் கிஷன் அம்சமாக இருக்கிறார். ஆக்சனும் வருகிறது. ஆனால், மொத்தக் கதையும் அவரைச் சுற்றியே நகர்கிறது. படம் முடிந்த பிறகும், அவருக்கு வேலை காத்திருப்பதுபோல காட்சி வைத்திருப்பது ரொம்ப ஓவர்! குருவி தலையில் பனம்பழம் போல, பாரம் சுமக்க முடியாமல் தவிக்கிறார். டைட்டானிக் பட நாயகியின் ‘துப்பும் திறன்’ போல, இவரது 'கிடுக்குப்பிடி’ திறன் சுவாரசியமாக இருக்கிறது.

விக்ராந்த்துக்கு, பாண்டியநாடு தொடங்கி அவர் தொடர்ந்து செய்துவரும் அதே கதாபாத்திரம்தான். தவறு எங்கே நடந்தாலும், தட்டிக் கேட்கும் கோபமான இளைஞர். நன்கு மெலிந்து, உடலை உறுதியாக்கி ‘ஸ்மார்ட்’ ஆகியிருக்கிறார். ஆனால், கதாநாயகனுக்கு முக்கியத்துவம் தருவதற்காக இடைவேளைக்குப் பிறகு இவரை ஓரங்கட்டிவிட்டார்கள்.

ஹன்சிகா சாயலில் இருக்கிறார் நாயகி மெஹ்ரீன். மற்றபடி அவரைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. ஷாதிகாவின் கதாபாத்திரம் படத்தில் திடீர் திருப்பத்துக்கு உதவுகிறது. உண்மையில் இவர்தான் படத்தின் முதல்நாயகி. ஆனால், காதல் காட்சி உட்பட எதிலும் அவரது நடிப்பு சொல்லும்படி இல்லை. வழக்கமான இரட்டை அர்த்த வசனங்கள் என்றாலும், பரோட்டா சூரியின் நகைச்சுவை நன்றாகவே எடுபட்டிருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் வில்லன் கதாபாத்திரம். காவல்துறையின் புலனாய்வைவிட ஒரு படி மேலே சிந்திக்கும் வில்லனாக அசத்துகிறார் ஹரீஷ் உத்தமன். படத்தின் மொத்த சுவாரசியமும் இவரிடம்தான் இருக்கிறது. குரலும், உடல்மொழியும் கதாபாத்திரத்துக்குப் பலம் சேர்க்கிறது. அண்ணனைத் தீர்த்துக்கட்ட தம்பியிடம் பணம் வாங்கிவிட்டு, தம்பியைக் கொல்ல அண்ணனிடமும் பணம் வாங்கும் காட்சியில் பட்டயக் கிளப்புகிறார். மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு சந்தேகம் வராதபடி பார்த்துக்கொள்ளும் காட்சியில் மிரட்டியிருக்கிறார்.

டி.இமான் இசையில் 3 பாடல்கள். அதில், ‘‘திட்டாதப்பா பொண்ண அவ என்ன செஞ்சா உன்ன’’ பாடல் வரிகள் ரசிக்க வைக்கின்றன. மற்ற பாடல்கள் எதுவும் படத்துடன் ஒட்டவில்லை. பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம். ஜே.லட்சுமணனின் ஒளிப்பதிவு சிறப்பு. வெயிலும் நிழலும் மாறிமாறி விழுகிற சாலையில் விக்ராந்த் தன் காதலியுடன் பைக்கில் செல்லும் காட்சி படமாக்கப்பட்ட விதம் அருமை.

பழைய நகைச்சுவை, காட்சிகளை தூசி தட்டித் தந்ததில் தவறில்லை. அதில் சற்று புதுமையைப் புகுத்தியிருந்தால் படம் கம்பீரமாக வலம் வந்திருக்கும்.

(படத்தின் வேகம் கருதி கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள், படத்தில் தற்போது நீக்கப்பட்டுள்ளன. விமர்சனக் குழு பார்த்தது - அதற்கு முந்தைய பிரதியை.)

SCROLL FOR NEXT