சினிமாவின் எஜமானர்கள் அன்றும் இன்றும் கதாநாயகர்கள்தான். ஆவணப்படமாகத் தோன்றிய சினிமாவில் கதை நுழைந்த பிறகு, கதாநாயகர்கள் அதில் முதலிடம் பிடித்துக்கொண்டார்கள். நாயகனைச் சிறப்பிக்கவும் அவனது வீர தீரப் பிரதாபங்களை நிலைநாட்டவும் துணைக் கதாபாத்திரங்கள் தேவைப்பட்டன. கதாநாயகர்களைக் காதல் மன்னன்களாகச் சித்தரிக்க கதாநாயகிகள் தேவைப்பட்டனர். எம்.கே. தியாகராஜ பாகவதர் நட்சத்திர நடிகராகப் பிம்பம் பெற்ற காலம் தொடங்கி, தமிழ் சினிமாவில் இதுதான் நிலை. “நாதா… ஸ்வாமி… அத்தான்…அன்பரே…மிஸ்டர்...ஹலோ..பிரதர்” என்பதுவரை நாயகனை அழைக்கும் நாயகியின் தோரணையும் சொற்களும் மாறினவே தவிர, நாயகனே தன்னை வாழ்விக்க வந்த தெய்வம் எனக் கதாநாயக வழிபாடு செய்வதில் இன்றும் கதாநாயகியே ஆகச் சிறந்தவளாக இருக்கிறாள்.
ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கதாநாயகிகளை அல்லது பெண்களை முதன்மைப்படுத்தும் திரைப்படங்கள் ஆரம்பம் முதலே வந்துகொண்டிருப்பது ஆறுதலானதே. அதிர்ஷ்டவசமாகச் சில கதாநாயகிகளுக்குப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் அமைந்துவிடுவதுண்டு. அவர்களின் மிகக் குறுகிய திரைவாழ்க்கையில் கிடைக்கும் அத்தகைய கதாபாத்திரங்களில் அவர்கள் ஜொலிப்பதும் உண்டு. 50-களின் தமிழ் சினிமாவில் அப்படி ஜொலித்த இருவர் பானுமதியும் மாதுரி தேவியும். பானுமதியின் திரைப் பயணம் மகாநதி என்றால் மாதுரி தேவியுடையது மிக அழகிய, ஆனால் சீற்றத்துடன் பாய்ந்தோடிய சிற்றோடை எனலாம்.
பகலில் அரண்மனை ராஜகுருவின் மகன் பார்த்திபன், இரவில் கொள்ளையர்களின் தலைவன். கொள்ளையுடன் கொலைகளையும் கலைபோல் செய்து ரசிக்கும் அவன், பெண்களைக் கவர்ந்து செல்லும் காமக் கள்வன் என்பதறியாது அவனைக் காதலிக்கிறாள் மந்திரியுடைய மகளான அமுதவல்லி. பார்த்திபனின் முகத்திரை விலகிய பிறகும் அவனைக் காப்பாற்றித் திருத்த முயன்று தோற்றுப்போகிறாள்.
முடிவில் மனைவி என்றும் பாராமல் தன்னை மலை உச்சியிலிருந்து தள்ளி கொன்றுவிடச் சதிசெய்தவனை, அமுதவல்லியே அங்கிருந்து தள்ளிக் கொன்று, தேசத்தைக் காக்கும் வீராங்கனை ஆகிறாள். காதலுக்காக உருகி, கலங்கி, போராடும் அப்பாவிப் பெண்ணாக ஒரு பரிமாணம். தன் காதலே தேசத்தின் பாதுகாப்பைப் பலி கேட்கும் கூரிய கட்டாரியாக மாறும்போது அதைத் துணிவுடன் எதிர்கொண்டு, கூடாக் காதலின் களப்பலியாக மாறி, நாட்டைக் காக்கும் வீரப் பெண்ணாக இன்னொரு பரிமாணம் என, அமுதவல்லி கதாபாத்திரத்தில் மாதுரி தேவி வாழ்ந்து காட்டிய படம் ‘மந்திரிகுமாரி’.
60 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இப்படம், இன்றும் மறக்க முடியாத ‘மந்திரிகுமாரி’யாக வட சென்னையின் முருகன் உள்ளிட்ட பழம்பெரும் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெறுகிறது. டி.ஆர்.சுந்தரம், எல்லிஸ் ஆர்.டங்கன், கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் அதில் பங்குபெற்றிருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே இந்த வரவேற்பு அல்ல. மந்திரிகுமாரி அமுதவல்லியாக முதன்மை வேடத்தில் தோன்றி, பகல் வேடப் பார்த்திபனாக நடித்த எஸ்.ஏ.நடராஜனுடன் இணைந்து ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ ஆகிய அழியாப் புகழ்பெற்ற பாடல்களில் காதல் ரசம் சொட்டும் நடிப்பை மாதுரி தேவி வழங்கினார்.
மிக முக்கியமாக, மு.கருணாநிதியின் அனல் தெறிக்கும் வசனங்களைக் கம்பீரமான உடல்மொழியுடன் கணீர்க் குரலில் பேசி நடித்த மாதுரி தேவியின் அபாரமான ஆற்றலுக்காகவுமே இந்தப் படம் கொண்டாடப்பட்டது. கலைஞர்.மு.கருணாநிதிக்குச் சிறந்த கதை வசனகர்த்தா என்ற அந்தஸ்தை நிலைநாட்டிய படமாகவும் எம்.ஜி.ராமச்சந்தர், எம்.ஜி.ஆராக உயர வழிவகுத்ததும் எம்.என்.நம்பியார் எனும் பார்த்ததுமே பயமூட்டக்கூடிய வில்லன் நடிகரைத் தமிழ்த் திரைக்கு அடையாளம் காட்டியதுமான இந்தப் படம்தான், மாதுரி தேவியைப் பன்முகக் கதாபாத்திரங்களில் ஜொலிக்கும் முன்மாதிரிக் கதாநாயகியாக உயர்வடையச் செய்தது.
இன்று வட சென்னை என்றாலே இடறலாக நோக்கும் மனப்பான்மை பலரிடமிருக்கிறது. ஆனால், அன்று வெள்ளையர்கள் நேசித்த பகுதி அது. சென்னை, ராயபுரத்தில் சூசை – மனோரஞ்சிதம் தம்பதியின் மகளாக 1927-ல் பிறந்த கிளாரா மேரிதான் பின்னர் திரைப்படத்துக்காக மாதுரி தேவி எனப் பெயர் சூட்டிக்கொண்டார். வசதியான குடும்பம், செயின்ட் ஆன்டனி ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயின்றபோது, அப்பகுதியின் பங்கு தேவாலயம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘பாஸ்கா’ நாடகத்தை நடத்திவந்தது. அதில் மன்னன் ஏரோதுடைய மகளாக மேடையில் பாடியபடி நடனமாடினார். அதே நாடகத்தில் இயேசுவைப் போற்றும் லாசருவின் சகோதரி மார்த்தாளாகவும் மற்றொரு காட்சியில் இயேசுவின் பாதங்களை பரிமளத் தைலம் கொண்டு பூசும் ஒதுக்கப்பட்ட பெண்ணாகவும் சிறப்பாக நடித்தார்.
கிளாராவின் ‘பாஸ்கா’ நடிப்பின் புகழ் நாடக வட்டாரத்திலும் பரவியது. பல நாடகக் குழுக்களிலிருந்து கிளாராவுக்கு அழைப்புகள் வந்தன. அனைத்தையும் மறுத்துவிட்டார் அப்பா சூசை. பாஸ்கா நாடகத்தில் மூன்று வேடங்களில் சிறுவயதிலேயே நடித்த அதிர்ஷ்டம், பின்னாளில் திரையில் அவர் புகழ்பெற்றபோது இரட்டைக் கதாபாத்திரங்கள் அவரைத் தேடி வர ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
1939-ல் வெளியான ‘பாண்டுரங்கன்’ படத்தில் துணை வேடமேற்றுத் தனது திரைப் பயணத்தை தொடங்கிய மாதுரி தேவிக்கு, கதாநாயகி வாய்ப்பு அமைந்தது 1947-ல். போமன் இரானி இயக்கத்தில் வெளிவந்த ‘லட்சுமி விஜயம்’ படத்தில் அமுதா, குமுதா என்ற இரட்டை வேடத்தில் நடித்தார். அதன்பின் டி.ஆர்.சுந்தரம் கண்களில்பட்ட மாதுரி தேவி, மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான நாயகிபோல் ஆனார். ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ (1947), ஜுபிடர் பிக்சர்ஸின் ‘மோகினி’ (1948) எனப் படங்களின் எண்ணிக்கை பெருகியது. அடுத்து கே.ராம்நாத் தயாரித்து இயக்கிய ‘கன்னியின் காதலி’மாதுரி தேவியின் பன்முக நடிப்புப் பரிமாணங்களை முழுமையாக வெளிக்கொணர்ந்தது. அந்தப் படத்தில் ஆதித்தன், கலைமணி, சந்திரிகா ஆகிய மூன்று வேடங்களில் வியக்கவைக்கும் வேறுபாடுகளைக் காட்டி நடித்தபோது மாதுரிக்கு வயது 20. இவற்றில் ஆதித்தன் என்பது இளைஞன் வேடம். இதன் பின்னர் தமிழ் சினிமாவைப் புரட்டிப்போட்ட மாடர்ன் தியேட்டஸின் ‘பொன்முடி’ (1950) மாதுரி தேவியின் சாதனை எனலாம். அந்நாளின் அத்தனை தயக்கங்களையும் உடைத்து, அந்தப் படத்தின் நாயகன் பி. வி. நரசிம்ம பாரதியுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துத் துணிவின் மறுபெயர் மாதுரி தேவி எனப் பெயர்பெற்றார்.
தொடக்கத்தில் நகைச்சுவை வேடங்கள், நடனம், நாயகி, இரட்டை வேடம், வில்லி வேடம் என எதையும் விட்டுவைக்காத மாதுரி தேவியின் நடிப்பில் வெளியான மொத்தப் படங்கள் 39. வில்லைப் போல் நீண்டு வளைந்த புருவங்கள், வில்லிலிருந்து புறப்படும் நாணைப் போன்ற கூறிய நாசி, காந்தமாய் உள்ளிழுக்கும் உருண்டைக் கண்கள், வாய் திறந்து சிரித்தால் மயக்கும் வசீகரம் எனச் சிறந்த தோற்றம் கொண்ட, கனவு நட்சத்திரமாக உயர்ந்த இவர், நளினமாக நடனமாடுவதிலும் பெயர்பெற்று விளங்கினார். எஸ்.முகர்ஜி என்பவரை மணந்துகொண்டு சில படங்களையும் சொந்தமாகத் தயாரித்துப் பொருள் இழப்பைச் சந்தித்த பின் 1962-க்குப் பிறகு திரையுலகிலிருந்து முற்றாக விலகி வாழ்ந்தவர், 1990-ல் மறைந்தார். அந்நாளைய நாயகிகள் ஏற்கத் தயங்கியவை அவர் ஏற்ற வேடங்கள். அவரது புகழை அவை என்றும் மனத்திரையில் ஒளிரச் செய்யும்.
படங்கள் உதவி: ஞானம்