நி
ஜ வாழ்க்கையில் நடப்பதைத்தான் பல நேரங்களில் திரையில் கொண்டு வருகிறேன். ஆனால், நிஜத்தில் இருந்து கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்வேன். அதனாலேயே என் படங்களின் காதல் காட்சி கள் கொஞ்சம் தனித்துவமாக இருக்கும் என்று பேசத் தொடங்கினார் இயக்குநர் சுகுமார். தெலுங்கு திரையுலகில்‘ஆர்யா’, ‘100% லவ்’, ‘நானாக்கு ப்ரேமதோ’ என பல வெற்றிப் படங்களை இயக்கியவர். நாக சைதன்யா - தமன்னா நடிப்பில் வெளியான தனது ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘100% காதல்’ படத்தை தற்போது தயாரித்து வருகிறார். அவரிடம் பேசியதில் இருந்து..
உங்கள் திரைக்கதை பெரும்பாலும் முன்னும் பின்னுமாகச் சொல்லும் ‘நான்லீனியர்’ முறையில் இருக்கின்றன. ரசிகர் கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்காதா?
தமிழ், தெலுங்கில் சூப்பர்ஹிட்டான நான்லீனியர் படங்கள் நிறைய உள்ளன. சொல்வதை ஒழுங்காகச் சொன்னால் போதும், மக்களுக்குப் புரிந்துவிடும். சொல்லும் முறையில் தவறு செய்துவிட்டு, ரசிகர்கள் மீது பழி போடக்கூடாது. ரசிகர்களுக்குப் புரியவில்லை என்றால் என் திரைக்கதையில் தவறு இருக்கிறது என்று அர்த்தம். அது என் பொறுப்புதான்.
மகேஷ்பாபுவின் ‘நேனொக்கடினே’ படத்திலும் அப்படித்தான் நடந்ததா? விமர்சனரீதியாக கிடைத்த வரவேற்பு, வசூலில் இல்லையே?
அது அற்புதமான திரைக்கதை என்ற பாராட்டு கிடைத்தது. ஆனால் அது ரசிகர்களைப் போய்ச் சேரவில்லை. எனவே, ஒரு கதாசிரியனாக அது என் தோல்வியே.
‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்குக்கு ஜி.வி.பிரகாஷ்தான் நாயகன் என எப்படி முடிவு செய்தீர்கள்?
இந்த யோசனை வந்ததில் இருந்தே பலரிடமும் ஜி.வி.பிரகாஷ் பெயரைத்தான் முன்வைத்தேன். அவரது கண்கள், தோற்றம் இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது. தவிர, தமிழில் பல கதாநாயகர்களை எனக்கு தெரியாது. சுற்றி இருப்பவர்கள் வேறு சிலரது பெயரைச் சொன்னாலும், ஜி.வி.தான் சரியாக இருப்பார் என்று எனக்கு தோன்றியது. அவரது இசையும் எனக்கு பிடிக்கும்.
உணர்ச்சிகள் சார்ந்த சில விஷயங்களை மாற்றியுள்ளேன். நகைச்சுவையும் சற்று கூடுதலாக இருக்கும். தமிழில் சில உணர்ச்சிகரமான படங்கள் தெலுங்கு பதிப்புகளில் வெற்றி பெற்றுள்ளன. என் பெயரைப் பார்த்து, நான் தமிழ் என்று நினைத்து பலரும் என்னிடம் தமிழில் பேசுவார்கள். நான் தெலுங்கு என்று அறிமுகம் செய்து கொள்வேன். மேலும், வழக்கமான தெலுங்கு படங்களில் இருந்து என் படங்கள் வித்தியாசமாக இருப்பதாலும் என்னை தமிழன் என்று நினைத்துவிட்டார்கள். அதுதான், என் திரைக்கதையும் தமிழுக்கு சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது. ‘நேனொக்கடினே’ படம்கூட தமிழில் எடுக்கப்பட்டால் சூப்பர் ஹிட் ஆகும் என்கின்றனர்.
தற்போது ராம்சரணை வைத்து இயக்கிவரும் ‘ரங்கஸ்தலம்’ படம் பற்றி..
கண்டிப்பாக தெலுங்கு ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கும். ராம் சரண் - சமந்தா இருவருக்குமே வித்தியாசமான படமாக இருக்கும். இருவருமே செய்யாத கதாபாத்திரம் அது. இதுவரை நான் எடுத்த படங்களில் இதுதான் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.
தேவிஸ்ரீ பிரசாத்தை நாயகனாக அறிமுகம் செய்து இயக்கப் போகிறீர்களாமே..
2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் இருந்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவரை அறிமுகம் செய்யலாம் என்று இருந்தேன். வேலை அதிகம் இருந்ததால் அப்போது நடக்கவில்லை. விரைவில் நடக்கும்.
இயக்குவதற்கு முன்பு, திரைக்கதை எழுதுவதே பிடிக்கும் என்று ஒரு பேட்டியில் சொன்னீர்களே, ஏன்?
திரைக்கதை எழுதுவது படைப்பாற்றல் சம்பந்தப்பட்டது. ஒரு இடத்தில் குழுவுடன் உட்கார்ந்து பேசி, கலந்துரையாடி, கலாட்டா, அரட்டை என்று சிரித்துக்கொண்டே எளிதாகப் போய்விடும். அதில் உற்சாகமும் அதிகம். இயக்கம் அப்படியல்ல. உடல் உழைப்பு தேவைப்படும் கடினமான வேலை. நாம் யோசித்தது சரியாக வருமா, வராதா என்ற சந்தேகம் இருக்கும். நினைத்ததை அப்படியே திரைக்கு கொண்டுவர முடியுமா என்ற பயமும் இருந்துகொண்டே இருக்கும்.
தெலுங்கில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டீர்கள். தமிழில் எப்போது?
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழியில் படம் எடுக்குமாறு சிலர் கேட்கின்றனர். நான் மிக மெதுவாக, பொறுமையாக வேலை செய்பவன். நிதானமாக யோசித்து 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் எடுப்பவன். அதனால் அது எப்போது நடக்கும் என தெரியவில்லை.