இந்து டாக்கீஸ்

பாட்டிகள்தான் நம்ம வரலாறு! - சசிகுமார் பேட்டி

செய்திப்பிரிவு

கொடுவாள் மீசை, கோபப் பார்வை, அளவற்ற பாசம் காட்டும் அண்ணன், ஊரே கொண்டாடும் வீரன் எனக் கிராமத்துக் களத்தில் மீண்டும் ஒரு புதிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் ‘கொடிவீரன்’ சசிகுமார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

‘கொடிவீர’னில் அண்ணன், தங்கைப் பாசம்தான் கதையா?

இது அண்ணன்கள், தங்கைங்களோட கதை. படத்துல மூன்று அண்ணன்கள், மூன்று தங்கைகள். நெருப்பு, நீர், நிழல் மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம். ‘உன்னோட பாசம் பெரிதா, என்னோட பாசம் பெரிதா’ன்னு நம்ம வீட்டுல போட்டி இருக்குமே அதுதாங்க ‘கொடிவீரன்’ படத்தோட அடிப்படை. அதுல காதலும் வீரமும் கலந்திருக்கும்.

உங்களின் ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தைத் தொடர்ந்து வரும் படம் இது. வெற்றி கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்களா?

ஒவ்வொரு படமும் நல்லா வரணும்னுதான் வேலை பார்க்கிறேன். நானும் முத்தையாவும் சேர்ந்து இதுக்கு முன்னே ‘குட்டிபுலி’ கொடுத்திருக்கோம். சின்னவங்க, பெரியவங்கன்னு எல்லாரும் சேர்ந்து தியேட்டருக்கு வரணும்னு எப்பவும் விரும்புவேன். நம்மளச் சுத்தி நடக்குற வாழ்க்கையக் கடந்து இங்கே எதையும் புதுசா சொல்லிட முடியாது. இந்தப் படமும் அப்படித்தான்.

இயக்குநர் முத்தையா படங்களில் குறிப்பிட்ட ‘சமூகம்’ சார்ந்த காட்சிகள், வசனங்கள் அதிகம் வெளிப்படுவதாக ஒரு விமர்சனம் இருக்கிறதே?

இந்தப் படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்க. இந்தச் ‘சமூகம்’, அந்தச் ‘சமூகம்’னு எப்பவுமே நான் பிரிச்சுப் பார்க்குற ஆள் இல்லை. இந்த மண்ணுல வாழ்ற எல்லாரும் அண்ணனும் தம்பியும் தாயும் பிள்ளையுமாத்தானே வாழ்றோம். முன்னபின்ன அறிமுகம் இல்லாதவங்ககூட உறவுமுறைச் சொல்லித்தானே கூப்பிடுறோம். இவ்வளவு பிணைப்பா இருக்கும்போது இதுல சமூகம் எங்க வந்துச்சு? கதை சொல்ல வரும்போதும், ‘நீங்க எந்தச் சமூகம்’னு நான் யாரையும் கேட்டதுமில்லை. எனக்கு அது தேவையும் இல்லை. இயக்குநர்கள் அவங்களோட வாழ்க்கை அனுபவத்தை வைச்சுக் கதையை உருவாக்குறாங்க. அதை மாத்துங்கன்னு நான் சொல்ல முடியாது. நான் எல்லா விதமான படங்களிலும்தான் நடிக்கிறேன்.

உங்களோட எல்லாப் படங்களிலும் ஒரு பாட்டி கதாபாத்திரம் இடம்பிடித்து விடுகிறதே?

பாட்டிங்கதான் நம்ம வரலாறு. எங்கே ஷூட்டிங் போனாலும், ‘எம் பேராண்டி சசி வந்துட்டானா’ன்னு கேட்டு, யாரோ ஒரு பாட்டி தேடி வந்துடுறாங்க. ஏன், இப்போ ‘கொடிவீரன்’ படப்பிடிப்பு நடக்கும்போதுகூட, ‘உம் படந்தேன் ராசா… எனக்குப் பிடிச்சிருக்கு’ன்னு ஒரு பாட்டி பணியாரம் சுட்டு எடுத்துக்கிட்டு வந்துடுச்சு. இந்த அன்பைவிட வேற என்ன வேணும்? சின்ன வயசுல படிப்புக்காக வெளியூர் போனதால என்னால பாட்டிகூட அதிகம் இருக்க முடியாம போச்சு. இப்பவும் அந்த ஆதங்கம் இருக்கு. நாம பல பேர் வயசுல பெரியவங்களைப் பெரிசா எடுத்துக்கிறதே இல்லை. அவங்களைவிட அனுபவசாலி யாரும் இல்லை. அதுக்காகத்தான் படத்துல இதெல்லாம் வைக்கிறோம்.

நட்பு, பாசம், அன்பு, அடிதடியைத் தாண்டிய ஒரு கதையில் உங்களைப் பார்க்க முடியாதா?

படம் பார்க்க வரும் ரசிகர்கள், அவர்களில் ஒருவனாகத்தான் என்னைப் பார்க்கிறாங்க. எங்கிட்ட கதை சொல்ல வரும் இயக்குநர்களும் அதையே மனசுல வைச்சு எழுதுறாங்க. நானும் ஒவ்வொரு முறை கதை கேட்கும்போது அந்த மாதிரி எதுவும் இல்லாமல் சொல்வாங்களான்னு எதிர்பார்ப்பேன். ஆனா, இங்கே இன்னொரு விஷயமும் தோணுது. நட்பு, காதல், குடும்ப உறவுகளின் பாசம் மாதிரியான உணர்வுகள் எப்பவும் நம்மை விட்டு அழிக்க முடியாத ஒண்ணு. அந்தப் பண்புகள் என் கதைகள்ல இருக்கிறது தப்பில்லையே!

‘கொடிவீரன்’ வெளியீட்டுக்கு முன்பே அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டீர்களே?

ஆமாம். இயக்குநர் மருதுபாண்டியன் படம். இது ஆக்‌ஷன் திரில்லர் கதை. திண்டுக்கல், கொடைக்கானல் பகுதியில படப்பிடிப்பு நடக்குது. கதாநாயகி உட்படப் பல புதுமுகங்கள் இதில நடிக்கிறாங்க. படத் தலைப்பைக் ‘கொடிவீரன்’ வெளியீட்டுக்குப் பிறகு அறிவிக்கிறதா இருக்கேன்.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தின்போது ‘நாம எல்லோரும்தான் குற்றவாளிங்க!’ என்றீர்களே, எப்படி?

முத்துக்குமார், செங்கொடி, மன்னார்குடி விக்னேஷ் தற்கொலைகள் நாம யாரும் எதிர்பார்க்காம நடந்தவை. அவங்க அதை நோக்கிப் போவாங்கன்னு நமக்குத் தெரியாது. ஆனா, அனிதாவோட இழப்பு நமக்குத் தெரிஞ்சே நடந்தது. உச்ச நீதிமன்றம் வரைக்கும் போய் நீதி கிடைக்கலைன்னதும், ‘ஏன் இனிமே வாழணும்’ங்கிற விரக்தியில எடுத்த முடிவுதான் அது. அனிதாவின் இழப்பு பற்றி இப்போ நாம பேசுறோம். அப்பவே அவங்ககிட்ட போன்லயோ இல்லைன்னா நேர்லயோ போய் அவங்களுக்கு உறுதுணையா இருப்போம்ன்னு சொல்லி ஆதரவு தந்திருக்கலாமே. அது அவங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையா இருந்திருக்கும். இழந்ததுக்கு அப்பறம் அழுவோமே தவிர, ஒரு சாவைத் தடுக்கணும்கிற எண்ணம் நமக்கு ஏன் வரல?

SCROLL FOR NEXT