கல்லூரி மாணவியான கயல் ஆனந்தியைக் காதலிப்பதற்காக அவரது பின்னால் பல இளைஞர்கள் சுற்றுகின்றனர். அவர்களில் ஒருவர் தமிழ். ஒருநாள் ஆனந்தி அவசரமாகப் பேருந்தில் ஏறும்போது, அவரது காலணி கீழே விழுந்துவிடுகிறது. அதை அவர் எடுப்பதற்குள் பேருந்து புறப்பட்டுவிடுகிறது. அதே பேருந்தில் இருக்கும் தமிழ், அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, தவறிவிழுந்த காலணியை எடுத்துவர ஓடுகிறார். ஆனால், அந்த இடத்தில் காலணியைக் காணோம். அதே நாளில், சிரியாவில் வேலை செய்யும் ஆனந்தியின் அப்பாவான ஜெயப்பிரகாஷ், தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். இதைக் கேள்விப்பட்டு, ஆனந்தியும் அவரது தாயும், குறிகேட்பதற்காகச் செல்கின்றனர். ‘தவறி விழுந்த காலணி கிடைத்தால், தந்தையும் கிடைப்பார்’ என்று குறிபார்க்கும் பெண் சொல்கிறார். இதைக் கேட்ட நாயகன் தமிழ், அந்தக் காலணி மட்டுமல்லாது, ஆனந்தி பேருந்திலேயே விட்டுச் சென்ற இன்னொரு காலணியையும் தேடி அலைகிறார். அவற்றைக் கண்டுபிடித்தாரா? தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜெயப்பிரகாஷ் விடுவிக்கப்பட்டாரா? என்பது மீதிக் கதை.
நம்ப முடியாத ஒரு கதைக் களத்தை, ஆங்காங்கே சிதறடிக்கப்பட்டுள்ள நகைச்சுவைகளை மட்டுமே நம்பி களமாடியுள்ளார் இயக்குநர் ஜெகன்நாத். கயல் ஆனந்தியை ஒரு தேவதைபோல சித்தரிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ் காணாமல்போனது தெரிந்து, வீட்டுக்கு செய்தியாளர்கள் வருகிற காட்சியில், பின்னால் இருப்பவர் தலைசீவுவது, பேட்டி கொடுக்க பக்கத்து வீட்டுப் பெண் ஆர்வம் காட்டுவது போன்ற காட்சிகள் எதார்த்தம்.
பாண்டி, இப்படத்துக்காக தமிழ் என பெயரை மாற்றியுள்ளார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே விபத்து ஏற்பட்டு கையில் கட்டுடனேயே படம் முழுவதும் வரும் அவர் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளார். நாயகி ஆனந்தியும் வழக்கம்போல அழகாக மிளிர்கிறார். ரெமோ ரவியாக வரும் யோகி பாபு, பிரதான நகைச்சுவைக் கதாபாத்திரம் ஏற்று, நாயகனைப் பின்னுக்குத் தள்ளும்விதமாக படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். அவர் வசனம் பேசுவதற்கு முன்பே ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். நகைச்சுவையில் பாலசரவணனும் முக்கிய பங்களிப்பை அளித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் அரசியல்வாதியாக வந்து சிரிக்க வைக்கிறார். அதிலும் செருப்பு வீசப்பட்டு மீடியாக்களில் பிரபலமானதாக சிலாகிப்பது நச்! சூசையாக வரும் சிங்கம்புலி, பஷீர் பாயாக வரும் லிவிங்ஸ்டன் ஆகியோர் ஒருசில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைத்துவிடுகின்றனர்.
சுகசெல்வன் ஒளிப்பதிவும், இஷான் தேவ் இசையும், சிம்பு குரலும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. முகத்தை சுளிக்கவைக்கும் சித்தரிப்புகளோ, வசனங்களோ இல்லாதது படத்துக்கு வலு சேர்த்திருக் கிறது.
புகழ்பெற்ற இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் வெளியான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படம், சின்னஞ்சிறிய தன் தங்கைக்காக காலணியைத் தேடிப் புறப்படும் சிறுவனின் உலகை விரித்துக் காட்டியது. அந்தப் படம் தனது கலாபூர்வத் தன்மையால் இன்றளவும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு காவியம் என்றால், காலணியை மையமாகக் கொண்டு சுழலும் இந்தப் படம், உள்ளூர் சினிமாவின் கலர்ஃபுல் காதல் நகைச்சுவைப் பண்டம். ஆனால் உணர்வுப்பூர்வமாக ஈர்த்திருக்க வேண்டிய இக்கதை, வெறும் டைம்பாஸ் நகைச்சுவையாகத் தேங்கி நின்று விடுகிறது. மனித உணர்வுகளை இன்னும் அழுத்தமாய் பதிவேற்றியிருந்தால் ‘செருப்பக் காணோம்’ சிறப்பு பெற்றிருக்கும்!