இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் அடுத்து...

செய்திப்பிரிவு

ட்லி இயக்கி, விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்து வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்துவரும் தனுஷ், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இருவரில் ஒருவர்

‘கத்தி’, ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் இணைந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் -விஜய் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. ‘அங்கமாலி டைரிஸ்’ மலையாளப் படத்தின் ஒளிப்பதிவுக்காகப் பாராட்டப்பட்ட கிரிஸ் கங்காதரனை இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் முருகதாஸ். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். அந்த இருவரில் ஒருவர் ‘தோனி’ இந்திப் படத்தில் நாயகி கியாரா அத்வானி. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

வேகம் காட்டும் சமந்தா

திருமணத்துக்குப் பின் முன்பைவிடவும் படு சுறுசுறுப்பாக நடித்துவருகிறார் சமந்தா. தெலுங்கில் ராம் சரணுடன் ‘ரங்காஸ்தலம்’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது சிவகார்த்திகேயன்-பொன்ராம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து விஷாலின் ‘இரும்புத்திரை’, விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களில் நடிக்கிறார். இந்தப் படங்களுக்குப் பின் மேலும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கன்னடத்தில் வெற்றிபெற்ற பவன்குமாரின் ‘யூ-டர்ன்’ படம் தமிழில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது. நாயகியை மையமாகக் கொண்ட இந்தப் படத்துக்கு 30 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

75 வயது மாதவன்

27 வயதில் தொடங்கி 75 வயதுவரையான விண்வெளி வீரராக நடிக்க இருக்கிறார் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாகக் கூறப்பட்டுவரும் இந்திப் படத்தில்தான் மாதவனுக்கு இந்த வேடம். ‘சண்டா மாமா டோர் கே’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தைத் தமிழ், தெலுங்கில் மொழிமாற்றம் செய்ய இருக்கிறார்களாம். ‘தோனி’ பட நாயகன் சுஷாந்த் சக விண்வெளி வீரராக மாதவனுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது மாதவன், சுஷாந்த் இருவருமே இந்தப் படத்துக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவில் பயிற்சி எடுக்க இருக்கிறார்கள்.

பிரபுதேவாவுக்கு ஜோடி

னுஷுடன் ‘வடசென்னை’ , விக்ரமுடன் ‘துருவநட்சத்திரம்’, மணி ரத்னத்தின் மல்டி ஸ்டாரர் படம் என பிஸியாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்துக்கு, தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் ‘லட்சுமி’ குறும்படத்தின் தலைப்பைச் சூட்டும் முடிவுடன் அதைப் பதிவு செய்திருக்கிறாராம் இயக்குநர் விஜய்.

SCROLL FOR NEXT