இந்து டாக்கீஸ்

வசூல் களம்: மெர்சலுக்கு முன்… மெர்சலுக்குப் பின்…

கா.இசக்கி முத்து

தமிழக அரசு 2006-ம் ஆண்டுக்குப் பிறகு சினிமா டிக்கெட் கட்டணத்தைச் சமீபத்தில் உயர்த்தியது. இந்தக் கட்டண உயர்வைத் தொடர்ந்து, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் கூட்டம் கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. ஆனால், விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்துக்குக் கூட்டம் கட்டண உயர்வால் குறையவில்லை.

இது தொடர்பாகத் திரையரங்கு உரிமையாளர் ஒருவரிடம் பேசிய போது, “டிக்கெட் விலை உயர்வைத் தொடர்ந்து வெளியான ‘மெர்சல்’ திரைப்படம், பெரிய அளவில் வசூலித்தது. டிக்கெட் விலை உயர்வு என்பது எந்தவொரு விதத்திலுமே இப்படத்தைப் பாதிக்கவில்லை. டிக்கெட் விலை குறைவாக இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக வசூலித்திருக்கக் கூட வாய்ப்பு இருந்திருக்கும் ” என்றார்.

மற்றொரு திரையரங்க உரிமையாளர் , “ ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘அவள்’, ‘அறம்’ மற்றும் ‘தீரன்’ ஆகியவை தலா ஒருவார இடைவெளியில் வெளியாயின. இதில் வசூல்ரீதியாக ‘அவள்’ மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், ‘அறம்’ மற்றும் ‘தீரன்’ படங்களுக்கு விமர்சனரீதியாக இருந்த வரவேற்பு, வசூல்ரீதியில் இல்லை என்பதே உண்மை” என்று தெரிவித்தார்.

சிறு படங்களுக்கு டிக்கெட் விலையை மாற்றியமைத்துக் கொள்ளும் முறை பேச்சளவிலேயே உள்ளது, இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மாதத்துக்கு ஒரு முறை குடும்பத்தோடு (4 பேர் கொண்டவர்கள்) திரையரங்கு வந்துவிட்டால் சுமார் 1,000 ரூபாய் வரை செலவாகிறது. ஒரே மாதத்தில் இரண்டாம்முறை திரையரங்குக்கு வருவது என்பது சென்னையில் சாத்தியம் என்றாலும், சென்னையைத் தாண்டி சாத்தியமில்லை என்ற நிலைமை கட்டண உயர்வால் உருவாகிவிட்டது என்று திரையரங்க வட்டாரத்தில் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

“படம் நன்றாக இருந்தாலும், இவ்வளவு டிக்கெட் விலையா என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டதும் ஒரு காரணம். பொதுமக்கள் மத்தியில் டிக்கெட் விலை உயர்வு அவர்களைத் திகைப்படைய வைத்திருக்கிறது. படம் வெற்றி என்றாலும், தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய பங்குத் தொகை என்பது குறைவாக உள்ளது. முன்பைவிடத் தற்போது கூட்டம் கொஞ்சம் குறைந்திருப்பதை மறுக்க முடியாது” என்றார் சென்னையின் பிரபலத் திரையரங்கக் குழும மேலாளர் ஒருவர்.

கட்டண உயர்வு பற்றித் தயாரிப்பாளர்கள் தரப்பில் என்ன நினைக்கிறார்கள், “ஒட்டுமொத்தமாக எந்தவொரு புதிய மாற்றம் வந்தாலும் முதலில் பாதிக்கத்தான் செய்யும். ஹோட்டலுக்கான ஜி.எஸ்.டியை மாற்றியவுடன், உணவு வகைகளின் விலையிலே சிலர் மாற்றம் செய்துள்ளார்கள். அந்த மாதிரி தமிழ் சினிமாவில் செய்ய முடியாது. ஹோட்டலுக்கான விலையைப் பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் சாப்பாடு இல்லாமல் வாழ முடியாது. ஆனால், சினிமா பார்க்காமல் இருந்துவிட முடியும்.

திரையரங்க டிக்கெட் விலை மாற்றம் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள சில காலம் ஆகலாம். அடுத்தாண்டு கண்டிப்பாக இப்பிரச்சினைகள் எல்லாம் இருக்காது என நினைக்கிறேன்” என்று தனது கடந்த கால, கட்டண உயர்வு அனுபவங்களிலிருந்து கருத்துத் தெரிவித்தார் ‘பிரபல தயாரிப்பாளர் ஒருவர்’.

தொடக்கம் முதலே கட்டண உயர்வு முறைப்படுத்தல், திரையரங்க கேண்டீன் விலையை ஒழுங்குபடுத்துதல் என்று ஆர்வம் காட்டிவரும் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளரும் ‘தீரன்’ படத்தின் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசியபோது, ‘வசூல் குறையவில்லை’ என்று திடமாகக் கூறினார். “ வசூல் குறைந்த மாதிரி தெரியவில்லை. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் என்ன கட்டணம் என்றாலும் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், 150 ரூபாய் கட்டணம் என்பது அதிகம்தான். டிக்கெட் விலை என்பது பிரச்சினையில்லை. கேண்டீன் மற்றும் பார்க்கிங் விலை என்பதுதான் பிரச்சினை. ஏனென்றால், டிக்கெட் விலையைவிட அதற்கே பணம் அதிகமாகச் செலவாகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் இணையம் மூலம் டிக்கெட் விற்பனை நடக்கும் வரை தமிழ்த் திரையுலகம் உருப்படாது” என்றார் காட்டமாக.

SCROLL FOR NEXT