பிஸியான நடிகராக வலம்வரும் தம்பி ராமையா தனது நடிப்பு வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, தன் மகன் உமாபதியை இயக்குகிறார். ‘உலகம் விலைக்கு வருது’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், ஃபகத் பாசிலுக்குக் கதாநாயகியாக நடித்த மிருதுளா முரளி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஒய்.ஜி. மகேந்திரன், சிங்கம்புலி எனப் பலர் நடிக்கிறார்கள். புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்கப்படும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார் தம்பி ராமையா.
ஒலி வாங்கும் கலைஞன்
ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். பிரசாத் பிரபாகரன் இயக்கும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். கேரளத்தின் கலாச்சார நகரம் என்று வர்ணிக்கப்படும் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவுசெய்ய விரும்பும் கனவோடு அதற்கு வரும் ஒரு சவுண்ட் டிசைனராகவே இந்தப் படத்தில் நடித்துவருகிறார் ரசூல் பூக்குட்டி.
படம் தந்த அதிர்ஷ்டம்
சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மேயாத மான்’. இதில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ப்ரியா பவானி சங்கர். படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துவிட்டதால் ப்ரியா பவானி சங்கருக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி வர ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில் முதலாவதாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. கோகுல் இயக்கும் ‘ஜுங்கா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, இன்னொரு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம் ப்ரியா பவானி சங்கர்.
10 மாதத்தில் ஒரு படம்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் 36-வது படத்தை இயக்குகிறார் செல்வராகவன். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம். படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டாலும், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரியில் தொடங்கி 10 மாதங்களில் முடித்து 2018 தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டு வருகிறதாம் படத்தைத் தயாரிக்கும் ‘ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம். இதற்காகப் படக்குழுவைத் தேர்வு செய்யும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுவருகிறார்கள் இயக்குநரும் தயாரிப்பாளரும்.