இந்து டாக்கீஸ்

18 வருடங்களுக்குப் பிறகு… ராஜீவ் மேனன் நேர்காணல்

கா.இசக்கி முத்து

ணி ரத்னத்தின் ‘பம்பாய்’, ‘குரு’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு, விளம்பரப் படங்கள், இயக்கம் என்பதைத் தாண்டி ‘மைண்ட் ஸ்கிரீன்’ என்ற திரைப்படப் பள்ளியொன்றைத் தொடங்கி, பல வருடங்களாக நடத்திவருகிறார் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் படம் இயக்கத் தயாராகிவிட்ட அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

தொடக்கத்திலிருந்து விளம்பரப் படங்களுக்கு மட்டுமே அதிகமாக ஒளிப்பதிவு செய்துள்ளீர்கள். என்ன காரணம்?

இயக்குநராகிவிட்டதால், ஒளிப்பதிவுக்குத் திரையுலகிலிருந்து மணி ரத்னம் மட்டுமே அழைக்கிறார். அவருடன் மூன்று படங்கள் வேலை செய்திருக்கிறேன். இவர் பெரிய ஒளிப்பதிவாளர் என்று நினைத்து என்னை அழைக்காமல் இருக்கலாம். சில நேரம் வாய்ப்புகள் நமக்காக உருவாக்கப்படுவதில்லை. வழக்கமான கமர்ஷியல் படங்கள் செய்வதற்கு ஆர்வமுமில்லை. கதையில் ஏதாவது புதிதாக நான் கற்றுக்கொள்வது போலிருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன். எனினும், தொடர்ச்சியாகப் பல்வேறு நிறுவனங்களில் விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறேன்.

சில படங்களில் மட்டுமே நடித்தீர்கள். அதற்குப் பிறகு அதையும் நிறுத்திவிட்டீர்களே...

நடிப்பில் எனக்கு ஆர்வம் கிடையாது. ‘மின்சாரக் கனவு’ கதாபாத்திரமே அந்த நேரத்தில் அதற்கு யாருமே நடிக்கக் கிடைக்காததால் நடித்தது. இயக்குநர் பாசில் சார் நீண்ட நாட்களாகக் கேட்டுக்கொண்டதால் ஒரு படத்தில் நடித்தேன். அதிலும் இரண்டாவது ஷாட்டில் இறந்துவிடுவேன். வெள்ளை நிறமாக இருக்கிறேன் என்பதற்காக நான் நடிகனாகிவிட முடியாது.

மணி ரத்னத்துடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறீர்கள். இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து…

அவரோடு பணிபுரிவதற்கு முன்பாக, அவருடைய நட்பு வட்டத்தில் உள்ள மகேஷ் உள்ளிட்ட சிலரை எனக்குத் தெரியும். ‘ஆழ்வார்பேட்டை கேங்’ என்று சொல்வார்கள். வயதில் நான் சிறியவனாக இருந்தாலும், அதிகமாகப் பேசமாட்டார். எப்போதுமே படப்பிடிப்பு தளத்தில் இளைஞனைப் போல் பணிபுரிவார். அவருடைய சிந்தனைகள் ஆழமானவை. ‘பம்பாய்’ படத்துக்குப் புதிய வண்ணம் ஒன்றைக் கொண்டுவந்தேன். அதைப் பார்த்து “உனக்குள் ஓர் இயக்குநர் இருக்கிறான், அவனை வெளிக்கொண்டு வா ” என்று என்னை முதலில் ஊக்குவித்தவர் அவர்தான். ‘குரு’ படத்தில் ஒரு மனிதனுடைய வாழ்க்கையைக் கூறினார். அப்படத்தில் பணிபுரிந்தது மறக்க முடியாதது. அது போன்றதொரு வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

ஒரு ஒளிப்பதிவாளராக ‘கடல்’ படத்தின் தோல்வி பற்றி...

எல்லாப் படங்களும் வெற்றியடைய வேண்டும் என்றுதான் எடுக்கிறோம். சில படங்கள் மக்களிடையே போய்ச் சேரும், பல படங்கள் சேராது. நான் பணியாற்றிய ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு குழந்தைதான். தனக்குப் பிறந்த குழந்தைகளில், ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் அதன் மீது அதிக பாசம் செலுத்துவார் அம்மா. அப்படித்தான் எனக்கு ‘கடல்’. சினிமாவில் பாராட்டு கிடைக்கும்போது ஏற்றுக்கொள்வதைப் போல், திட்டு வாங்குவதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

18 வருடங்கள் கழித்து ‘சர்வம் தாளமயம்’ படத்தை இயக்கவுள்ளீர்கள். படம் பற்றிக் கூறுங்கள்...

டாக்குமெண்டரி பண்ணும்போது தோன்றிய கதை. அதைத் திரையில் சொல்லியே ஆக வேண்டும் என்று மனது துடிக்கிறது. 18 வருடங்கள் கழித்து இயக்கம் என்பதையெல்லாம் யோசிக்கவே இல்லை. அதற்காக வித்தியாசமாக முயற்சி செய்யப்போகிறேன் என்று சொல்ல முடியாது. மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஒளிப்பதிவைக் கற்றுத் தருவதற்கெனத் தொடங்கிய உங்கள் திரைப்படப் பள்ளியில் தற்போது நடிப்புப் பயிற்சி தொடங்க என்ன காரணம்?

சினிமா நிறைய மாறிவிட்டது. சினிமாவில் நுழைய வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் உடற்பயிற்சிக் கூடத்தில்தான் சேர்கிறார்கள். நடனம், சண்டை உள்ளிட்டவை கற்றுக்கொள்வது மட்டும்

நடிப்பு அல்ல. நடிப்புப் பயிற்சி வகுப்புக்காக நாசர் சாரிடம் இரண்டு வருடங்களாக பேசிப் பேசி இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தால் சரியாக இருக்கும் எனப் பயிற்சியை வடிவமைத்திருக்கிறோம். இங்கே ஸ்டார்களை உருவாக்க விரும்பவில்லை, நடிகர்களை உருவாக்கவே விரும்புகிறோம்.

சினிமா துறை மீது தற்போது இளைஞர்களுக்கு அதீத ஆர்வம் வர என்ன காரணம்?

சினிமா ஒரு கலை. அதனுடைய உடனடி விளைவு லாபத்தைவிடப் புகழ். புகழை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு வந்தால் பிரச்சினைதான். கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தால் தொடர்ச்சியாக விளையாடுகிறீர்கள். நீங்கள் சச்சினாகவில்லை என்றால் கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாட்டா என்று விமர்சித்தால் எப்படியிருக்கும்? வெற்றி, தோல்வி நமது கைகளில் கிடையாது. நல்ல படங்களில் நாம் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மைதான் முதலில் வேண்டும். அந்த எண்ணத்தோடு இதற்குள் நுழைய வேண்டும். அதுதான் முக்கியம்.

சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தாக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதைக் கவனிக்கிறீர்களா?

இப்போதுதான் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கிறேன். சோஷியல் மீடியா என்பது தகவல் தொடர்பு யுகத்தின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத புரட்சி. இதை நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிதாக ஒரு மீடியம் உருவாகும். முன்பு திரையரங்குகளுக்குப் போய் சினிமா பார்க்காமல் அதைத் தொலைக்காட்சியில் பார்ப்பது எப்படிச் சரியாக இருக்கும் என்று திட்டியவர்கள் உண்டு. இன்று பலரும் தொலைக்காட்சியில்தான் படமே பார்க்கிறார்கள். காலம் மாறிவிட்டது. இன்னும் மாறும்.

SCROLL FOR NEXT