தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் அதிகரிக்கும் காலம் இது. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘ஆந்தாலஜி’ தொகுப்பாக வெளியிடும் போக்கு தமிழிலும் வளர்ந்துவருகிறது. ஆனால், தொகுப்பில் இடம்பெறும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமையில் இருக்கும். ஆனால், சமீபத்தில் இசை வெளியீடு நடத்தப்பட்ட ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில் ஆறு குறும்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், ஆறு படங்களும் வெவ்வேறு வகை கிடையாது. இவை, அமானுஷ்யம் என்ற ஒரே வகைமையில் வெவ்வேறு கதைகளையும் களங்களையும் கையாண்டு, ஆறு இயக்குநர்களால் இயக்கப்பட்டிருக்கின்றன.
ஆறு அத்தியாயங்களின் முடிவை வழக்கம்போல அந்தந்தப் படத்தின் முடிவில் சொல்லாமல், படத்தில் இறுதியில் ஆறு க்ளைமாக்ஸ்களையும் வரிசையாகக் காட்டுகிறார்களாம். ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் புதிய நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எக்கச்சக்க இயக்குநர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் இயக்குநர், நடிகர் பார்த்திபனின் பேச்சு ரசிக்கும்படி இருந்தது.
பார்த்திபன் பேசும்போது “மத்திய அரசு செய்ய வேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்குச் செய்யும் மழைக்கு என் நன்றிகள். 2.0 ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை. 6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்தக் கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஷயம் உள்ளவர்களைப் பார்த்தால்தான் சின்ன மிரட்சி ஏற்படும்.
அப்படித்தான் அஜயன் பாலா உள்ளிட்ட இந்த ஆறு இயக்குநர்களைப் பார்த்து மிரட்சி அடைகிறேன். சென்னை, தி நகரில் ஒரிஜினல் நெய்யால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. ‘6 அத்தியாயம்’ அப்படி ஒரு படமாக அமையும் என்று அதைப் பார்த்துவிட்டவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன்” என்றார்.