கு
ழந்தைகளைத் தூங்கச் செய்வதற்காகச் சொல்லப்படும் வினோதங்கள் நிறைந்த கதை. அதில் விண்வெளி ஆராய்ச்சி, பனிப்போர் பின்னணி, உருக்கும் காதல், திகிலடிக்கும் மர்மம் எல்லாம் கலந்துகட்டிய ஹாலிவுட் திரைப்படம் ‘த ஷேப் ஆஃப் வாட்டர்’. டிசம்பர் 8 அன்று வெளியாக உள்ளது.
அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் உச்சத்தில் இருந்த அறுபதுகளில் கதை நடக்கிறது. சிறுவயதிலேயே பேசும் திறனை இழந்த இளம்பெண்ணுக்குத் தனிமையே தோழன். அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்றின் ரகசிய பரிசோதனைக் கூடத்தில் இரவு நேரப் பணிப் பெண்ணாக அவரது இயந்திரமயமான வாழ்க்கை கழிகிறது. ஒருநாள் நீரிலும் நிலத்திலும் வசிக்கும் மனிதனை ஒத்த வினோத உயிரினம் ஒன்று ஆய்வுக்காகப் பரிசோதனைக் கூடத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. அந்த விசித்திரனைப் பராமரிக்கும் பொறுப்பு அவளது வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது.
நீர்த் தொட்டியில் அடைத்து வைக்கப்பட்ட அவனைப் பரிவுடன் அணுகுகிறாள். உணவு, இசை, உணர்வு எனப் பழக்குகிறாள். ஒரு கட்டத்தில் சூழும் ஆபத்திலிருந்து அவனை விடுவிக்கக் கடுமையாக முயல்கிறாள். அந்த விசித்திரன் மீது விண்வெளி ஆராய்ச்சிக்கான விபரீத பரிசோதனையைத் தொடங்கும் அதிகாரிகள், தலையிடும் ரஷ்ய உளவாளிகள் ஆகியோருக்கு இடையே நீர் மனிதனை நேசிக்கத் தொடங்கும் அப்பெண், அவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஜெயித்தாளா, அவளது நிலைமை என்னவாயிற்று என்பதை, திரில்லர் பாணியிலான திரைக்கதை மூலம் உருவாக்கியிருக்கிறார்களாம்.
பணிப்பெண்ணாக இங்கிலாந்து நடிகை சாலி ஹாக்கின்ஸின் மொழியற்ற நடிப்பு விமர்சகர்களால் பேசப்படுகிறது. வினோத உயிரினமாக டக் ஜோன்ஸ் மிரட்ட, படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் கில்லர்மோ டெல் தோரோ(Guillermo del Toro). நடப்பாண்டின் வெனிஸ் திரைவிழாவின் சிறந்த படத்துக்கான ‘தங்கச் சிங்கம்’ உட்படப் பல விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. ‘புளூ ஜாஸ்மின்’ படத்துக்காக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட சாலி ஹாக்கின்ஸ், மீண்டும் அந்த வாய்ப்பைப் பெறுவார் என்ற விமர்சன வரவேற்பும் படத்துக்குக் கவனம் சேர்த்திருக்கிறது.