ஜூலை 17: பாரதிராஜா பிறந்ததினம்
”என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் …" இந்த அறிமுக வார்த்தைகளுக்குக் கிடைக்கும் கரவொலி 35 வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பதே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனைகளுக்குச் சான்று. நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு வாழ்த்தைச் சொல்லி, அவரது சாதனைகளை விவரிக்கிறேன். அவர் இயக்கியவை 43 படங்கள். அவற்றில் 32 நேரடித் தமிழ்ப் படங்கள், எஞ்சியவை பிற மொழிப் படங்கள் (தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில்). இந்தக் கட்டுரைக்காக எனக்குப் பிடித்த 11 படங்களைத் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளேன்.
16 வயதினிலே (1977):
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தடத்தையே மாற்றியவர் பாரதிராஜா. முழுக்க முழுக்க அச்சு அசலான கிராமத்திலும் ஸ்டூடியோ இல்லாமலும் எடுக்க முடியும் என்பதை நிரூபித்தது 16 வயதினிலே. கிராமங்களில் உள்ள மனிதர்களைத் திரையில் உலவவிட்ட இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்று பல படங்கள் கிராமங்களில் எடுக்கப்படுவதற்கு இந்தப் படத்தின் வெற்றியே காரணம். சப்பாணியையும் மயிலையும் பரட்டையையும் 35 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மக்கள் மறக்கவில்லை. ஹிந்தி, தெலுங்கில் மறு ஆக்கமான இந்தப் படம், அவருக்குத் தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருதையும் வாங்கித் தந்தது.
சிகப்பு ரோஜாக்கள் (1978):
கிராமத்துப் பின்னணிப் படங்களைப் போல் எல்லாவிதப் படைப்புகளையும் தர முடியும் என்று அதிரடியாக இப்படத்தின் மூலம் காட்டியவர் பாரதிராஜா. ஹாலிவுட் படங்களுக்கு இணையான இயக்கத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட கொலைகாரனின் வாழ்க்கையை, திரில்லான திரைக்கதை மூலம் சொல்லி, நம்மைப் பரபரப்பில் ஆழ்த்தினார் பாரதிராஜா. ஹிந்தியில் மறு ஆக்கம் அவராலேயே செய்யப்பட்டு, சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபேர் விருதையும் அவருக்கு வாங்கித் தந்த படம் இது.
அலைகள் ஓய்வதில்லை (1981):
காதலுக்கு ஜாதி, மதம் என்ற தடை இருக்க முடியாது என்று ஆணித்தரமாகச் சொன்னது இப்படம். தெலுங்கு, ஹிந்தியில் மறு ஆக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசின் 8 விருதுகளையும் பெற்று வசூலில் பெரும் சாதனை புரிந்தது.
ஒரு கதையின் டைரி (1985):
பாரதிராஜாவின் மகத்தான வசூல் சாதனைப் படங்களில் இதுவும் ஒன்று. பழி வாங்கும் படங்களில், புத்திசாலித்தனத்தையும் இணைத்து முன் உதாரணமாக அமைந்த படம். கமல ஹாசனின் அற்புதமான இரட்டை வேட நடிப்பு, ரேவதி மற்றும் ராதாவின் சிறந்த நடிப்பில் இப்படம் மின்னியது. இந்தியில், பாரதிராஜாவின் சிஷ்யர் கே. பாக்யராஜால் எடுக்கப்பட்ட இப்படம், அங்கேயும் பெரும் வெற்றியைச் சந்தித்தது.
முதல் மரியாதை (1985):
நடிப்பு மேதை சிவாஜி கணேசனுடன் பாரதிராஜா இணைந்து அற்புதமான இப்படத்தைத் தந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்தினார். சிவாஜி, இப்படத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார். குயிலுடன் (ராதா) வயதான அவரின் காதல், தமிழ் சினிமா கண்டிராதது. சரித்திரம் படைத்த இப்படம், இரண்டு தேசிய விருதுகளையும், இரண்டு மாநில அரசு விருதுகளையும் வென்று சாதித்தது.
வேதம் புதிது (1987):
எம்.ஜி.ஆர் பார்த்துப் பாராட்டிய கடைசிப் படம் என்ற பெருமையுடன் வந்த இப்படம், அவரின் மறைவால் சில நாட்கள் தள்ளி வெளியானது. நம் சமுதாயத்தில் புரையோடிப்போன ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரானது. சத்யராஜின் புடம் போட்ட நடிப்பில், இரண்டு தேசிய விருதுகளையும், பிலிம்ஃபேரின் இரண்டு விருதுகளையும் பெற்றுத் தன் கருத்தை ஆழமாகப் பதிவு செய்தது.
கிழக்கு சீமையிலே (1993):
பாரதிராஜா, கதாசிரியர் ரத்னகுமாருடன் இணைந்து, இன்னுமொரு பாசமலரைத் தந்து, பெரும் வெற்றியைப் பெற்றார். விஜயகுமாரும் ராதிகாவும் அசல் அண்ணன் தங்கையாக வாழ்ந்து இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பதற்குப் பாரதிராஜாவின் இயக்கமே காரணம். ஏ.ஆர்.ரகுமானுடன் முதல் முறையாக அவர் இணைந்து ஒரு இசைக் காவியத்தைத் தந்தார்.
கருத்தம்மா(1994):
பாரதிராஜா-கதாசிரியர் ரத்னகுமார்-ஏ.ஆர். ரகுமான் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து அழுத்தமான, மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்கிய படம் இது. பெண் சிசுக் கொலைகளுக்கு எதிராக உருவான பல சட்டங்களுக்கு இப்படமும் ஒரு முக்கியக் காரணம். மூன்று தேசிய விருதுகளையும், மூன்று தமிழக அரசின் விருதுகளையும் பெற்ற படம் இது.
அந்தி மந்தாரை (1996):
வெகுஜன, யதார்த்தத் திரைப்படங்களுடன், தன்னால் ஒரு மாற்று சினிமாவையும் தர முடியும் என இப்படத்தின் மூலம் பாரதிராஜா நிரூபித்தார். ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி, நவீன உலகில் படும் அல்லலை, இதை விடச் சரியாக யாரும் சொன்னதில்லை. விஜயகுமார் மற்றும் ஜெயசுதாவின் யதார்த்த நடிப்பில் இப்படம், தேசிய விருதைப் பெற்று, பாரதிராஜாவுக்கு மகுடம் தரித்தது.
கடல் பூக்கள் (2001):
முதன் முறையாகப் பாரதிராஜாவுக்கு, சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற தேசிய விருதைப் பெற்றுத் தந்த படம். கடல் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையை ஆழமாகவும், அழுத்தமாகவும், "பெண்ணுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் கற்பு வேண்டும்" என்ற புதிய கருத்தையும் சொல்லி, ஆச்சரியப்படுத்திய படம். மறைந்த முரளியின் உன்னதமான நடிப்பு அவருக்குத் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதையும் பெற்றுத் தந்தது.
பொம்மலாட்டம் (2008):
நானா படேகர் என்ற சிறந்த இந்தி நடிகரைத் தமிழில் அறிமுகப்படுத்தி, ஒரு நேர்த்தியான, பரபரப்பான, புலனாய்வுப் படத்தை பாரதிராஜா தந்தார். அவரின் மாஸ்டர் பீஸ் எனப் பலராலும் சொல்லப்பட்ட இப்படம், பாரதிராஜாவின் பார்வையிலும், அவரின் சிறந்த படங்களில் ஒன்று. 30 வருடங்களுக்குப் பிறகும், தான் ஒரு தேர்ந்த, முதன்மை இயக்குநர் என்று பாரதிராஜா நிரூபித்த படம்.
கே.பாக்யராஜ், மணிவண்ணன், கே.ரங்கராஜ், மனோபாலா போன்ற பல தேர்ந்த இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் உருவாகக் காரணமானவர் பாரதிராஜா. அத்துடன் வைரமுத்து போன்ற பாடலாசிரியர்கள், பல தொழில்நுட்பக் கலைஞர்களையும், கார்த்திக் போன்ற பல நடிகர்களையும் ராதிகா, ராதா, ரேவதி போன்ற பல நடிகைகளையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திச் சாதனை புரிந்தார்.
தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் மட்டுமல்ல, நல்ல நடிகரும் என்று சமீபத்தில் பாண்டிய நாடு மூலம் நிரூபித்துப் பல விருதுகளை அதற்காகப் பெற்று வரும் பாரதிராஜா, விரைவில் உலகத் தரத்தில் ஒரு சினிமா பயிற்சிப் பள்ளியைச் சென்னையில் தொடங்க இருப்பதாக வரும் செய்திகள் காதுக்கு இனிமை தருகின்றன. பல சாதனைகள் புரிந்து, தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட, இந்த மாபெரும் கலைஞன், மேலும் பல பெருமைகளைப் பெற இந்த நேரத்தில் வாழ்த்துவோம்.