இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி, தன் படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளைச் சூட்டுவதில் பெயர்போனவர். அவர் நடித்த ‘சைத்தான்’ படத்தின் முதல் பத்து நிமிடக் காட்சிகளை ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் வெளியிட்டு அதையே விளம்பர உத்தியாக மாற்றினார். தற்போது விரைவில் வெளியாகவிருக்கும் தனது அடுத்த படமான ‘அண்ணாதுரை’ படத்தை விளம்பரப்படுத்த மற்றொரு அதிரடியைச் செய்திருக்கிறார். ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கிய, விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை நவம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது. இசையை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் படத்தின் அனைத்துப் பாடல்களையும் ரசிகர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்து அப்படியே செய்துவிட்டார். விஜய் ஆண்டனியின் இந்தப் புதிய விளம்பர உத்திக்கு கோலிவுட்டில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சூர்யா வெளியிட்ட டீஸர்!
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘நாச்சியார்’ படத்தை ஒரே மூச்சில் படமாக்கி முடித்துவிட்டார் இயக்குநர். பின் தயாரிப்பு வேலைகள் முழுவீச்சில் நடந்துவரும் இந்தப் படத்தின் டீஸரை சூர்யா வெளியிட்டிருக்கிறார். அதில் ஜோதிகா பேசும் ஒரு வசவுச்சொல் சர்ச்சை ஆகியிருக்கிறது. இளையராஜா இசை அமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் இசை வெளியீட்டை முடித்து படத்தையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘நாச்சியார்’ ரிலீஸுக்கு முன்பே விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்கும் ‘வர்மா’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் பாலா. தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மறு ஆக்கம் இது.
கிரேஸி மோகனின் வசனம்
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா- அபிராமி நடிப்பில் 2002-ல் வெளியான படம் ‘சார்லி சாப்ளின்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது; ஷக்தி சிதம்பரமே இயக்குகிறார். இரண்டாம் பாகத்தில் பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி, அதா ஷர்மா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சில இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்துள்ள அதா ஷர்மா தமிழில் அறிமுகமாகும் படம் இது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை சௌந்தர் ராஜன் கவனிக்க, அம்ரிஷ் இசை அமைக்கிறார். கிரேஸி மோகன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.
காதலிக்கும் பேய்
‘ஹரஹர மஹா தேவகி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்- இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் கூட்டணி மீண்டும் இணைந்தது.
‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்று தலைப்பிட்டுக் கடந்த அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்கியவர்கள் தாய்லாந்தில் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துத் திரும்பியிருக்கிறார்கள்.
இதில் கௌதம் கார்த்திக் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்திருக்கிறார். ‘சர்வர் சுந்தரம்’, ‘சக்கப்போடு போடு ராஜா’ படங்களின் நாயகி இவர். இவரைத் தவிர சந்த்ரிகா ரவி, யாஷிகா ஆனந்த் என வேறு இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
பேய்ப் படங்களின் ஆதிக்கம் குறைந்திருக்கும் நிலையில் காதல் பேய்ப் படமாக இதை இயக்கிவருகிறாராம் இயக்குநர்.
பாகிஸ்தான் பாடகர்
நகுல் நடிப்பில் ராஜ்பாபு இயக்கிவரும் படம் ‘செய்’. இந்தப் படத்தில் இடம்பெறும் ‘இறைவா...’ என்ற சூபி பாடலைப் பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகர், இசையமைப்பாளர் ஆதிஃப் அலி. ராய் லட்சுமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்துக்கு இசையமைத்துவரும் இவர், பாலிவுட்டில் ஏற்கெனவே பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இருப்பினும் ஒரு பாகிஸ்தான் பாடகர், தமிழில் பாடுவது இதுவே முதல்முறையாம். “நீண்ட காலம் ஒலிக்கப்போகும் பாடலாக இது இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான மன்னுவும் உமேஷும். டிசம்பர் 8 அன்று உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.