சு
சீந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. அதில் நாயகன் சந்தீப்பின் தங்கை, விக்ராந்தின் காதலி என இரு பரிமாணங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஷாதிகா. படத்தின் கதாநாயகியைவிட ஷாதிகா ஏற்றிருக்கும் அனு கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை சுழல்வதால் கோடம்பாக்கத்தின் கவனம் இவர் மீதும் குவிந்திருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
உங்கள் முன்கதைச் சுருக்கம் கொஞ்சம்…
நான் மழலை பேசிக்கொண்டிருந்தபோதே அரிராஜன் சாரின் ‘மங்கை’ தொலைக்காட்சித் தொடரில் இரண்டு வயதுச் சிறுமியாக என்னை நடிக்க வைத்துவிட்டார்கள். சீமான் அண்ணனின் ‘வீர நடை’ படம்தான் சிறுமியாக நான் நடித்த முதல் படம். அதன் பிறகு ‘ரோஜா வனம்’ படத்தில் குட்டி லைலா, ‘குபேரன்’ படத்தில் கெளசல்யாவின் மகள், ‘சமஸ்தானம்’ படத்தில் சரத்தின் மகள், ‘ராமச்சந்திரா’படத்தில் சத்யராஜின் மகள், ‘ஆனந்தம்’ படத்தில் முரளியின் மகள், தமிழ் சினிமா என்னைப் பிரியத்துக்குரிய மகளாக வளர்த்து எடுத்திருக்கிறது. கொஞ்சம் வளர்ந்து பெரிய பெண் ஆனதும் விஜய் அண்ணாவின் ‘குருவி’யில் அவரது தங்கையாகவும் ‘மாசிலாமணி’ படத்தில் சுனைனாவின் தங்கையாவும் பல தங்கை கதாபாத்திரங்களில் நடித்து முப்பது படங்களைக் கடந்து வந்துவிட்டேன்
இதற்கிடையில் ‘சுட்டி’ டிவியில் தொகுப்பாளராக மூன்று வருடம் சூப்பரான அனுபவம். எனது குரலைப் பார்த்துப் பல குழந்தை நட்சத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கும் வாய்ப்பையும் அள்ளிக்கொடுத்துவிட்டார்கள். அதிலும் ஒரு கை பார்த்துவிட்டு நிமிர்ந்தால் குறும்படங்களில் நடிக்க வரிசையாக அழைப்பு. நான் நடித்த ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ பெர்லின் சர்வதேசப் பட விழாவில் திரையிடத் தேர்வானது. நடிகர், இயக்குநர் ரேவதி மேடம் இயக்கத்தில் ‘கயல்விழி’ என்கிற குறும்படத்தில் நான்தான் கயல்விழி.
சுசீந்திரனின் ‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்திருந்ததைச் சொல்ல மறந்துவிட்டீர்களே?
எப்படி மறக்க முடியும்? அந்தப் படம்தான் சினிமாவில் எனக்கு பிரேக். எவ்வளவு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் நான் வளர்ந்தபின் எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாக ‘நான் மகான் அல்ல’ அமைந்துவிட்டது. ரசிகர்கள் என்னை எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டு “ஹாய்” சொல்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் சுசீந்திரன் சார்தான். அவரைப் பொறுத்தவரை சிலரை கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி வைத்திருப்பார். அவர் எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்குக் கிளம்பி விடுவேன். ஏனென்றால், சிறிய கதாபாத்திரம் கொடுத்தாலும் அழுத்தமாகப் பதிந்துவிடும் ஒன்றாக அது இருக்கும். ‘பாயும் புலி’ படத்தில் விஷாலின் தங்கை ,‘மாவீரன் கிட்டு’ வில் ஸ்ரீதிவ்யாவின் தோழி என அவரது இயக்கத்தில் தொடர்ந்து நடிக்கவைத்து வருகிறார். இப்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் என்னைச் சுற்றியே கதை வருகிறது. படம் வெளியானதுமுதல் ஒரே பாராட்டு மழை. இப்போது சுசீந்திரன் சாரின் ‘ஏஞ்சலினா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறேன்.
தங்கைக் கதாபாத்திரங்களில் அதிகமாக வந்துவிட்டால் கதாநாயகி வாய்ப்பு மறுக்கப்படும் என்று நினைக்கவில்லையா?
இது நமது கற்பனை. குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் தங்கை, கதாநாயகி, கனவுக்கன்னி என்று உயர்ந்த நடிகர்களைப் பட்டியல்போட்டு உங்களுக்குக் காட்டட்டுமா? பத்து நிமிடம் வந்துபோகிற கதாபாத்திரமாக இருந்தாலும் மனதில் பதிகிற கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தால் கதாநாயகி வாய்ப்பு கட்டாயம் வரும். சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த, நல்ல குரல்வளம் கொண்ட, நடிக்கத் தெரிந்த தமிழ்ப் பெண்கள் குறைவு. இந்த மூன்று முக்கியமான தகுதிகள் எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். என்னைத் தேடி வந்த வாய்ப்புகளால்தான், நான் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறேன். எனக்கேற்றபடி கதாநாயகி வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். அதற்கு அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
கதாநாயகிகளைப் பாடல் காட்சியில் கவர்ச்சியாகக் காட்டும் போக்கு இருக்கிறதே, அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?
‘2.0’ படத்திலேயே இரண்டு பாடல்கள்தான் என்கிறார்கள். அந்த ட்ரெண்ட் மாறிக்கொண்டு வருகிறது. காரணமில்லாமல் கிளாமர் காட்டச் சொன்னால் அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்.
சிறுவயதுமுதலே நடித்துவருவதால் உங்களால் பள்ளிக்கூடம் போக முடிந்ததா?
நான் ஒரே பெண். அதிக செல்லம்தான். ஆனால், சலுகைகள் படிப்பில் எல்லாம் கிடையாது. படப்பிடிப்பு நாட்கள் போக சனிக்கிழமைகூடப் பள்ளிக்கு அனுப்பிவிடுவார் அம்மா. நானும் படிப்பை ஒரு சுமையாக எடுத்துக்கொண்டதில்லை. ப்ளஸ் டூவில் 90 சதவீத மதிப்பெண்கள் எடுத்தேன். பி.இ. கம்ப்யூடர் சயின்ஸ் முடித்துவிட்டேன். நடித்துக்கொண்டே எம்.பி.ஏ. படிக்கவேண்டும் என்பது திட்டம்.