இந்து டாக்கீஸ்

ஓடிடி உலகம்: சுதந்திரத்தின் சுவை!

திரை பாரதி

விதவிதமான தகவல் தொடர்புச் சாதனங்களால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. அதனால் என்ன? பெரும்பாலான பெண்களுக்கு வீடுதான் உலகம் என்று கற்பித்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சிறையாக அதை வைத்திருக்கிறார்கள் ஆண்கள். அதைத் தான் பொட்டில் அறைந்து, ஆனால், கலகலப்பாகச் சொல்கிறது அமேசன் பிரைம் வீடியோவில் ஒரிஜினல் உள்ளடக்கமாக நேற்று வெளி யாகியிருக்கும் ‘ஸ்வீட் காரம் காபி’.

8 எபிசோட்களில் முடிவடையும் இந்த இணையத் தொடர், சென்னையில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பாட்டி, மருமகள், பேத்தியாக இருக்கும் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் ஒரு கட்டுடைப்புப் பயணத்தைப் பெரும் கொண்டாட்ட மாகவும் தேடலாகவும் விரித்திருக்கிறது.

ராஜரத்னம்தான் குடும்பத்தின் தலைவர். எப்போதும் பயணம் செய்யும் படியான வேலை அவருக்கு. அவர் தனது படித்த மனைவியை (மதுபாலா) கட்டுப்பெட்டியாகப் பார்க்கும் அமைதியான ஆணாதிக்கவாதி. அப்பா இறந்து ஒரு வருடம் முடிந்திருக்கும் நிலையில், அப்பாவின் வழியில் தனது அம்மா சுந்தரியை (லட்சுமி) பொத்திப் பொத்தியே வைக்க நினைக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவரது மகள் நிவேதிதா கிரிக்கெட் வீராங்கனையாக இருக்கிறார்.

நிவேதிதாவின் காதலனும் ஒரு வளர்ந்துவரும் கிரிக்கெட்டர்தான். ஆனால், நிவேதிதாவை ஒரே உறைக்குள் இரண்டு கத்தியாக நினைக்கிறான். அவள் கிரிக்கெட் விளையாடுவதைத் தனது நவீனக் கட்டுப்பெட்டிக் குடும்பத்திடமிருந்து மறைக்க விரும்புகிறான். அவனைப் பொறுத்தவரை, “பெண்கள் கிரிக்கெட்டை யார் காசுகொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கிறார்கள்?” என்று ஆணாக அங்கீகரிக்க மறுக்கிறான்.

அப்போதே நிவேதிதா தணலாகக் கொதித்தாலும் அமைதியாகக் காத்திருக்கிறாள். ஒரு சூழ்நிலையில், குடும்பமாகச் சுற்றுலா போகலாம் என்கிற மனைவி காவேரியின் தவிப்புக்கு அணைபோட்டு வைக்கிறார் ராஜரத்னம். அதிலிருந்து உடைத்துக்கொண்டு பிரவாகமாகப் புறப்படும் அந்தக் குடும்பத்தின் மூன்று பெண்கள், நடு ராத்திரியில் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ரோட் ட்ரிப் கிளம்புகிறார்கள். அந்தப் பயணத்தில் அந்த மூவரும் சந்தித்த மனிதர்கள் யார், கிடைத்த தரிசனங்கள் என்னென்ன, அவர்கள் மீட்டுக்கொண்ட பெண்ணுலகம் எப்படிப்பட்டது? என்பதுதான் கதை.

மூன்று பெண்களும் ரோட் ட்ரிப்புக்கு ரகசியமாகத் திட்டமிடும் விதமே செம சாதூர்யம்! சுந்தரி மருமகளுக்கும் பேத்திக்கும் விதிக்கும் முக்கிய ‘டிஜிட்டல்’ நிபந்தனை அட்டகாசம்!

“என்னோட பாஸ் புக்ல எல்லா பக்கமும் காலியாக இருக்குங்க. நீங்க உலகத்தைச் சுத்திட்டு வந்திருக்கீங்க... ஓவ்வொரு முறை ட்ரிப் முடிஞ்சு வரும்போதும் மறக்காம ஒவ்வொரு நாட்டிலேர்ந்தும் எனக்கொரு சென்ட் பாட்டில் வாங்கிட்டு வந்திருக்கீங்க. அதை வச்சு நான் என்ன குளிக்கவா முடியும்?” என்று கணவரைப் பார்த்து காவேரியாகக் கேட்கும்போது மதுபாலா கலங்க வைக்கிறார்.

“வெளியுலகம் தெரியாம வளர்ந்துட்ட.. ஒன்னையெல்லாம் தனியா விட்டா ஒருநாள் தாங்க மாட்டே” என்கிற குரல், ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தின் ஆழ்மனதில் அழியாமல் பாதுகாக்கப்படுவதை ராஜரத்னம் கதாபாத்திரம் ஒற்றைப் பிரதிநிதியாக இருந்து எடுத்துக் காட்டியிருக்கிறது.

“கண்ணை மூடி கண்ணைத் தொறக்கிறதுக்குள்ள காலம் மாறிடும்... கைநிறைய பொறுப்புகள் வந்து விழுந் துடும்... அப்புறம் நாம நெனச்ச மாதிரி ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாது” என்று தான் தவறவிட்ட வாழ்வை நினைத்து ஏங்கும் சுந்தரி கதாபாத்திரத்தில் லட்சுமியின் நடிப்பு உயர்தரம்! தனக்குச் சிறகுகள் கிடைத்ததும் அதில் தன் நடிப்பாற்றலை அடுத்தடுத்த எபிசோட்களில் இன்னும் உயரப் பறக்க விட்டிருக் கிறார். “உன்னுடைய கிரிக்கெட்டா, இல்லை நானா என்று முடிவு செய்” என்று நெருக்கடி கொடுக்கும் காதலனாக நடித்துள்ள வம்சி கிருஷ்ணா, ராஜரத்ன மாக நடித்திருப்பவர் எனத் துணைக் கதாபாத்திர நடிகர்கள் தேர்வு சிறப்பு.

வனிதா மாதவன், ஸ்வாதி ரகுராமன் திரைக்கதையாக்கத்தில் சிவா ஆனந்தின் வசனங்கள் யதார்த்தம்! ஆண்களின் உலகில் முடங்கும் மூன்று பெண்களின் சிறகடிப்பை உணர்வுகளின் மத்தாப்பாகச் சிதறவிட்டிருக்கிறார் தொடரை இயக்கியிருக்கும் பிஜாய் நம்பியார். ஆண்களின் வறட்டு ‘அனுமதி’ மீது ரகளையான பெண்ணிய மோதலை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது ‘ஸ்வீட்.. காரம்.. காஃபி’.

SCROLL FOR NEXT