இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: ஹரீஷின் முதல் ஆக் ஷன்!

செய்திப்பிரிவு

வசீகரமான காதல் கதைகள், பக்கத்து வீட்டுப் பையன் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்து வந்திருப்பவர் ஹரீஷ் கல்யாண். முதல் முறையாக அவர் ஆக் ஷன் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘டீசல்’. தேர்ட் ஐ எண்டர்டெயின்மென்ட் சார்பில் எம்.தேவராஜுலு தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழு வீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் பி.சசிகுமார், கருணாஸ், வினய் ராய், அருண் பாண்டியன், மாரிமுத்து, விவேக் பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் டீசர், இசை வெளியீடு நடக்க இருக்கிறது.

துல்கர் இப்போது தாதா!

கேரள சினிமாவின் ‘சாக்லேட் பாய்’ என்று புகழப்பட்ட துல்கர் சல்மான், அதிலிருந்து முற்றாக வெளியே வர முயன்றுவருகிறார். ஜீ ஸ்டுடியோஸ் - வேஃபாரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘கிங் ஆஃப் கோதா’ அதை அடியோடு மாற்றுகிறது. 80களில் வாழ்ந்த ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், ஸ்டைலான பழைய மெர்சிடிஸ் காரில் தாதாவாக வந்திறங்கும் துல்கர், மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக, இரக்கமற்ற கொடூரனாகத் தோற்றத்தில் மிரட்டுகிறார். அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் இப்படம், 2023 ஓணம் பண்டிகை அன்று உலகம் முழுவதும் நான்கு மொழிகளில் வெளியாகிறது.

கோபமும் ஒரு கலை!

கதாநாயகர்கள் நடிக்கும் படங்களைவிட, குணச்சித்திர நகைச்சுவை நடிகர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் முனீஸ்காந்த் - காளி வெங்கட் கிராமியக் கலைஞர்களாக நடித்துள்ள படம் ‘காடப்புறா கலைக்குழு’. கிராமப்புறக் கோயில் திருவிழாக்களில் வழிபாட்டின் ஓர் அங்கமாகவே இருக்கும் கிராமியக் கலைகள், அங்கேயே புறக்கணிக்கப்படும்போது நடக்கும் விளைவுகள்தான் கதை. தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கும் நிலையில், “கோபமும் ஒரு கலைதான் என்பதைக் காட்டும் கிராமியக் கலைஞர்களின் வாழ்க்கைதான் படம்” என்று கூறியிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் ராஜா குருசாமி.

SCROLL FOR NEXT