கார்த்திக் அத்வைத் 
இந்து டாக்கீஸ்

இயக்குநரின் குரல்: ஓர் அபூர்வக் கதாபாத்திரம்!

ஆர்.சி.ஜெயந்தன்

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு வகைக் கதைக் களம் கச்சிதமாகப் பொருந்திவிடும். ஆக் ஷன் த்ரில்லர் கதைக் களம் என்றாலே விக்ரம் பிரபு அடித்து துவம்சம் செய்வார். தற்போது அவர், கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ முழு நீள ஆக் ஷன் த்ரில்லராக வெளியாகிறது. படத்தை எழுதி, இயக்கியுள்ள கார்த்திக் அத்வைதுடன் படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

இந்தத் தலைப்பு உண்மையிலேயே கதைக்கு நியாயம் செய்கிறதா?

நூறு சதவீதம்! பாரதியின் புகழ்பெற்ற கவிதை வரியை ஏனோதானோ என்று பயன்படுத்திவிட முடியாது இல்லையா? கதாநாயகனின் கதாபாத்திரம், அவரது கண் பார்வையுடன் தொடர்புடைய பிரச்சினையை இதைவிட வேறு எந்தத் தலைப்பும் பிரதிபலிக்க முடியாது. பாரதியார் இந்தக் கதைக்காகவே பாடிய வரிபோல் அவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது.

கதாநாயகனுக்கு என்னப் பிரச்சினை, யார் எதிரிகள்?

அரவிந்த் என்கிற காமன்மேனாக வருகிறார் விக்ரம் பிரபு. பிறவியி லிருந்தே இயல்பான வெளிச்சத்தில் அவருக்குக் கண்கள் தெரியாது. இயல்புக்கு மாறான அதிக வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவரது கரு விழிகள் விரிந்து வேலை செய்யும். அப்படியொரு சிக்கலான பிரச்சினையைக் கொண்டவர் நாயகன். அவரது கடந்த கால வாழ்க்கையின் தொடர்ச்சி நிகழ்காலத்துடன் மோதுகிறது. அவருடைய எதிரிகள், அவரை மிச்சமிருக்கும் எச்சம்போல் ஏளனமாக நினைத்து அவரை நெருங்குகிறார்கள். அப்போது அவருக்கு ஒளியைப் பாய்ச்சுவது யார், அதில் நாயகன் தனது வலிமையை உணர்ந்து என்ன செய்தார் என்பதுதான் கதை. நாயகனுடைய பிரச்சினை இல்லாமல் வேறொரு சமூகப் பிரச்சினையும் படத்தில் உண்டு. அதில் நாயகன் எப்படிச் சம்பந்தப்படுகிறார் என்பது திரைக்கதையின் முக்கிய அம்சமாக இருக்கும். அரவிந்த் ஒரு அபூர்வக் கதாபாத்திரமாக இருக்கும்.

கார்த்திக் அத்வைத்

மற்ற நடிகர்கள் பற்றிக் கூறுங்கள்..

வாணி போஜன் கதாநாயகி. பாடலுக்கு முன்பும் பின்பும் வந்து போகிற கதாநாயகி அல்ல; கதாநாய கனுடன் கடைசிவரை வருகிறார். ஆண்களின் உலகில் அவர்களுக்குப் பின்புலமாக, சமமான பலமாக எல்லாக் காலத்திலும் பெண்களே இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். கதாநாயகனுக்கு ‘பாயும் ஒளி’யாக இவர் எப்படி, எந்தச் சூழ்நிலையில் மாறுகிறார் என்பது கதையின் நகர்வில் ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு மாற்றும். வில்லனாக ‘புஷ்பா’ புகழ் தனஞ்ஜெயா நடித்திருக்கிறார். வில்லனுக்கென்று ஒரு வாழ்க்கைப் பயணம் இருக்கிறது. அது படத்தில் முழுமையாக இருக்கும். அவருடன் மோதி அரவிந்த் மீள முடியுமா என்கிற மன அழுத்தம் ரசிகர்களுக்கு உருவாகும்.

வேல.ராமமூர்த்தி இதுவரை நடித்துள்ள கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்டு, தன் வயதில் பின்னோக்கிச் சென்று ஒரு கடலோடித் தலைவர் கதாபாத்திரம் செய்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத் திரமும் தனக்கு வரும் பிரச்சினையைத் தங்கள் வழியில் எப்படி ‘டீல்’ செய்கின்றன என்கிற அடிப்படையில் இதை கதாநாயகனின் கதையாக மட்டும் சொல்லாமல் கதாபாத்திரங்களின் கதையாகச் சொல்லியிருக்கிறேன்.

முதல் படம் வெளிவரும் முன்பே இரண்டாவது படத்தை இயக்கிக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தனவே?

ஆமாம்! கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். நான் முதுகலையில் பிலிம் மேக்கிங் படித்தேன். சினிமா குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். எனது தாய் மாமா கோட்டரி வெங்கடேஸ்வர ராவுகாரு ‘பாகுபலி’ படத்தின் எடிட்டர். தமிழில்தான் முதல் படம் இயக்கி இருக்கிறேன். ஏனென்றால் தமிழ் சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். எனது இரண்டாவது படம் கன்னடம். மூன்றாவதாகத் தாய்மொழியில் இயக்குவேன். பிறகு மீண்டும் தமிழ்.

SCROLL FOR NEXT