இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: ‘லியோ’ முதல் தோற்றம்

செய்திப்பிரிவு

பத்து, பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ரொக்கப் பரிசு அளித்த நிகழ்ச்சியின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் விஜயின் 50வது பிறந்த நாள் சேர்ந்துகொள்ள, அதையொட்டி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் ‘லியோ’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கை வெளியிட்டிருக்கிறார்கள். இதையொட்டி சமூக ஊடகங்கள் முழுக்க ‘லியோ’ படத்தின் முதல் தோற்றம் குறித்து நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் அவரது ரசிகர்கள். பதிலுக்கு அவர்களுக்கு முறைவாசல் செய்யும் முயற்சியில் அஜித் ரசிகர்களும் பிஸி.

பழங்குடிகளின் ஆற்றல்!

ஓர் உடலிலிருந்து கூடு விட்டுக் கூடு பாய்ந்து பல நூறு ஆண்டுகள் வாழும் பழங்குடி மக்கள் ஆப்ரிக்காவில் இருப்பதாக நிலவும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘நாயாடி’. அதை, ஆஸ்திரேலியாவில் மெட்ரோ ரயில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் தமிழரான ஆதர்ஷ் மதிகாந்தம் எழுதி, இயக்கி, முக்கியமான வேடத்தில் நடித்தும் இருக்கிறார். “கேரளப் பழங்குடிகளில் அதிக ஆயுளுடன் வாழும் ’நாயாடி’ என்கிற பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுக்கான புதிய உடல்களைத் தேடி அலைகிறார்கள். அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் ஓர் இளம்ஜோடியின் கதையாக ‘நாயாடி’யை முழுநீள ஹாரர் த்ரில்லராக உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார் இயக்குநர்.

விஜய் ஆண்டனி அடுத்து!

விஜய் ஆண்டனி எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்த ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் தெலுங்கு மொழிமாற்றுப் படத்துக்கு, ஆந்திர, தெலங்கானா ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் படம் வெற்றியடைந் திருக்கிறது. இந்த உற்சாகத்தில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வள்ளி மயில்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், ‘புஷ்பா’ படப்புகழ் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு இசை டி. இமான். கிராமியத் தெருக்கூத்து நாடகக் குழு ஒன்றின் பின்னணியில் பழிவாங்கும் கதையாக உருவாகி வருகிறது ‘வள்ளி மயில்’.

SCROLL FOR NEXT