இந்து டாக்கீஸ்

கால அட்டவணை கொடுத்த ‘கடவுளின் குழந்தை’

திரை பாரதி

குறைந்த விலையில் சிறந்த நூல்களை வெளியிட்டு புரட்சி செய்தவர், ‘தமிழ்ப் பண்ணை’ சின்ன அண்ணாமலை. அவரது பதிப்புலகச் செயல்பாடுகளுக்கு முன்னர், 14 வயதில் தொடங்கி விடுதலைப் போராட்ட வீரராக, இந்திய தேசிய காங்கிரஸின் இளம் தளகர்த்தராக அவரது பங்களிப்பு மகத்தானது. நாடு விடுதலை அடைந்த பிறகு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நடந்த வடக்கெல்லைப் போராட்டத்தில் மா.பொ.சிக்கு துணை நின்றவர். அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னர், பதிப்புலகிலும் திரையுலகிலும் மேலும் கவனத்தைக் குவித்தார் சின்ன அண்ணாமலை.

‘தங்கமலை ரகசியம்’, ‘நான் யார் தெரியுமா?’, ‘தர்மராஜா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்குக் கதாசிரியர் சின்ன அண்ணாமலைதான். வெற்றிவேல் பிலிம்ஸ் என்கிற பெயரில் பட நிறுவனம் தொடங்கி, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ‘ஆயிரம் ரூபாய்’, ‘ஜெனரல் சக்ரவர்த்தி’, ‘தர்மராஜா’, ‘கடவுளின் குழந்தை’ உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான படங்களைத் தயாரித்தவர். அவற்றில் தனிச் சிறப்பு கொண்ட சிறார், குடும்பச் சித்திரம், 1960, ஜூலை மாதம் வெளியான ‘கடவுளின் குழந்தை’.

கல்யாண்குமார், ஜமுனா, நடிகவேள் எம்.ஆர்.ராதா, அவ்வை டி.கே.சண்முகம், ஜாவர் சீதாரமன், நாகேஷ். எஸ்.எஸ்.நடராஜன் எனப் பல முன்னணி நடிகர்களைக் கொண்டு ‘கடவுளின் குழந்தை’ படத்தைத் தயாரித்தார். ‘நோபடீஸ் சைல்ட்’ என்கிற ஆங்கிலப் படத்தின் பாதிப்பில் தாதா மிராசி எழுதிய கதையை, அன்றைய தமிழகச் சூழலுக்கு ஏற்ப மாற்றித் திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்த சின்ன அண்ணாமலை, தாதா மிராசியையே இயக்குநராக நியமித்தார். ‘கடவுளின் குழந்தை’க்குப் போட்டியாக, அதே ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவி, ஏ.வி.எம். தயாரிப்பில் இரண்டு வாரங்கள் கழித்து வெளிவந்தது ‘களத்தூர் கண்ணம்மா’. இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.

பெரியாரைப் போல் திரைப்படங்கள் பார்க்க விரும்பாத ராஜாஜி, சின்ன அண்ணாமலையின் அழைப்பை ஏற்று ‘கடவுளின் குழந்தை’ திரைப்படத்தைப் பார்த்தார். வசனத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். ராஜாஜியுடன் இணைந்து படம் பார்த்த கல்கி, சதாசிவம் இருவரும் “இது சிறந்த குழந்தைகள் திரைப்படமும்தான் அவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமும்தான்” என்று பாராட்டினர். விளம்பர விற்பன்னராக விளங்கிய சதாசிவமோ பல யோசனைகளைக் கொடுத்தார். அவரே வியக்கும் வண்ணம், எந்தப் பாட வேளையில், என்ன பாடம் என்பதை மாணவ, மாணவிகள் குறித்து வைத்துக் கொள்ளும் ‘டைம் டேபி’ளைப் படத்தின் விவரங்களுடன் சேர்த்து ஒரு லட்சம் பிரதிகள் அச்சடித்தார் சின்ன அண்ணாமலை. அவற்றைப் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுவர் சிறுமியருக்குப் படம் வெளியாகியிருந்த முக்கிய நகரங்களில் விநியோகித்தார்.

நிராதரவாகச் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் ஒரு குழந்தை, பள்ளி ஆசிரியர் ஒருவரின் அரவணைப்பில் வளர்ந்து, இறுதியில் தன் பெற்றோரைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் கதை. தொழிலாளர் முன்னேற்றம், தொழிற்கல்வியின் அவசியம், ஏற்றத்தாழ்வை போக்குதல் போன்ற சமூக முன்னேற்றச் சிந்தனைகளை குழந்தைகளுக்கும் புரியும் எளிய பேச்சுத் தமிழில் இலக்கிய ரசனையுடன் வசனமாக எழுதியிருந்தார் சின்ன அண்ணாமலை.

பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு சமூகச் சீர்திருத்தம் வலியுறுத்திப் பல எழுச்சிப் பாடல்களை எழுதிப் புகழ்பெற்றவர் நாமக்கல் வே.ராமலிங்கம். அவர் எழுதியவற்றில், ‘கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்’, ‘தமிழனென்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா...’ ஆகிய இரண்டு புகழ்பெற்ற பாடல்களை ‘கடவுளின் குழந்தை’ படத்தில் ஜி.ராமநாதனின் அற்புதமான இசையில் முதல் முறையாக இடம்பெறச் செய்தார் சின்ன அண்ணாமலை.

SCROLL FOR NEXT