பகுத்தறிவாளர்களாலேயே சமூக சீர்திருத்தவாதியாகக் கொண்டாடப்படுபவர் ஸ்ரீ ராமானுஜர். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் பார்வையில் எழுதப்பட்ட எழுத்தோவியத்துக்கு, ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த 1000-வது ஆண்டில் ’ஷ்ரத்தா’ குழு காட்சி வடிவம் கொடுக்க... சமீபத்தில் நாரத கான சபாவில் அரங்கேறியது ராமானுஜர் நாடகம்.
நூற்றிருபது ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பப்படும் ராமானுஜரின் வாழ்க்கையில் எத்தனையோ சாதனை பக்கங்கள். ஸ்ரீரங்கம் ஆலயத்தின் நிர்வாகத்தில் சீர்திருத்தம், ஆலயங்களில் நாலாயிரப் பிரபந்தப் பாடல்களை ஒலிக்கவைத்தது, தாழ்த்தப்பட்ட வர்களையும் அரவணைத்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கியது, ஸ்ரீபாஷ்யம் அருளியது, ஏரி, குளங்கள் என நீர்நிலைகளை பாதுகாத்தது போன்ற சமூகப் பணிகள், பெண்களுக்கு உரிய மதிப்பளித்து இறைப் பணியில் அவர்களுக்கான இடத்தை அளித்தது. இப்படி நீண்ட நெடிய சாதனைப் பக்கங்களிலிருந்து சிலவற்றை நேர்மையாகவும் தத்ரூபமாகவும் செதுக்கி செதுக்கி நாடகத்தில் கொடுத்திருந்தார் இயக்குநர் ஜி.கிருஷ்ணமூர்த்தி.
வைணவத்தை ஒருங்கிணைத்தவர் ராமானுஜர். அதற்கான எல்லா பணிகளையும் செய்தார். ராமானுஜர் தன்னைச் சுற்றி இருப்பவைகளில் தகாத விசயங்களை எப்படி தள்ளிவைத்தார். தேவையான விசயங்களை எப்படி மேம்படுத்தினார் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தன நாடகத்தின் காட்சிகள்.
ராமானுஜரை நாடு கடத்தும் யோசனையை மந்திரிகள் அரசனிடம் சொல்லும் போது, “அப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அப்படியே செய்துவிடுங்கள்” என்று அரசன் கூறுவது, அன்றைக்கும் இன்றைக்கும் சமயத்தின் வழிதான் ஆட்சி நடக்கின்றது என்பதைச் சொல்லாமல் சொல்லும் பகடி!
பதினெட்டு முறை முயன்று குருவிடம் உபதேசம் பெற்ற, சொர்க்கத்தை அடைவதற்கான மந்திரத்தை, குருவின் ஆணையையும் மீறி, “நான் ஒருவன் நரகத்துக்குப் போனால் பரவாயில்லை, இதைக் கேட்பவர்கள் சொர்க்கத்துக்குப் போகட்டும்” என்று கோபுரத்தின் உச்சியில் நின்று நாராயண மந்திரத்தை அனைவருக்கும் சொல்லும் இடம் ராமானுஜர் ஒரு சிறந்த மனித நேயர் என்பதை உலகத்துக்குச் சொல்லும் இடம்.
டெல்லி மன்னனின் தங்கை ரஸியாவிடமிருக்கும் உற்சவமூர்த்தியான செல்லபிள்ளையை ராமானுஜர் மீட்டுவரும் காட்சி. அவருடனேயே வரும் ரஸியாதான் பெருமாள் கோயில்களில் வீற்றிருக்கும் துருக்க நாச்சியார் போன்ற விவரங்கள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால் சில சம்பவங்கள் நேரடியாக காட்சியாகும் போது, அதற்கு முன்னதாக அதைக் குறித்த சில விவரங்களை கொடுத்திருந்தால், புதிதாக ராமானுஜரை அணுகுபவர்களுக்கும் அதன் விவரங்கள் புரிந்து, ஈடுபாடு கூடியிருக்கும்.
உதாரணமாக, மறவன் உறங்காவில்லி அவனுடைய மனைவியின் அழகிய கண்களுக்கு ஒப்புமை இல்லை என்று நினைத்திருக்கிறார். அவருக்கு அரங்கனின் கண்களைக் காட்டி, அவனை அரங்கனுக்கு அடிமைப்படுத்துகிறார் ராமானுஜர். இதில் உறங்காவில்லி அவருடைய மனைவி பொன்னாச்சி குறித்து முன்னோட்டமாக சில அறிமுக வரிகள் வசனமாகவோ, காட்சியாகவோ காண்பித்துவிட்டு இந்த சம்பவத்தை காட்சிப்படுத்தியிருக்கலாம்.
எளிமையான அரங்க அமைப்பிலேயே காட்சிக்குரிய நம்பகத் தன்மையை அளித்திருந்தார் கலை இயக்குநர் ஜி.ரமேஷ். மேடைக்கு மேல் இருந்த இன்னொரு படிகள் அமைந்த மேடையே அரசு தர்பாராகவும், கானகத்தின் மலைக் குன்றுகளாகவும் மாறி வியப்பளித்தன.
நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை ஆலயங்களில் ஒலிக்கச் செய்தவர் ராமானுஜர். நாடகத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரபந்தப் பாடல்களையும், பாசுரங்களையும் நாடகத்தின் சூழலுக்கு ஏற்ப புகுத்தியிருப்பதில் ஆன்மிகம், இசை குறித்த இந்திரா பார்த்தசாரதியின் ஆழமான பார்வை வெளிப்பட்டது.
முழுக்க முழுக்க இசைக் கலைஞர்களைக் கொண்டே மேடையில் பின்னணி இசையையும் பாடல்களையும் பாடியிருந்தது சிறப்பு. முதல் காட்சியில் ஆளவந்தார் அவருடைய கடைசி நாழிகளில் இருப்பார். அப்போது `சூழ்விசும்பு’ பாடுங்கள் என்பார். திருநாடு எய்தவர்களுக்கு நம்மாழ்வார் எழுதிய அந்தப் பாசுரத்தை, சீடர்களில் ஒருவராக வரும் வி.பாலசுப்ரமணியன் உருகிப் பாடும்போது, பார்வையாளர்களையும் ஒரு பரிதவிப்பான சோக நிலை சூழ்ந்து கொள்கிறது. பாடலின் இறுதியில் மெள்ள தலை சரிந்து ஆளவந்தார் உயிர்விடும்போது, மேடையில் வந்து நிற்கும் ஸ்ரீ ராமானுஜரோடு சேர்ந்து நாமும் உறைந்து போகிறோம்.
கனமான மஞ்சள் விளக்கொலியில், தூய தமிழில் பாத்திரங்கள் பாவனை காட்ட... அதே மேடையின் ஓரத்தில் அரையிருட்டில் அமர்ந்தபடி பின்னணிப் பாடலையும், இசையையும் சௌமியா, ஜனனி, `ஜஸ்’ டிரம்ஸ் முரளி, பூர்ணிமா (புல்லாங்குழல்) ஆகியோர், கார்த்திகேய மூர்த்தியின் ஒருங்கிணைப்பில் வழங்கியது தனி அனுபவமாக இருந்தது.
ஸ்ரீ ராமானுஜரின் நீண்ட, அரிய வரலாற்றை அவருடைய அற்புதமான தத்துவங்களையும் நெர்த்தியாகச் சேர்த்து, குறுகிய நேரத்தில் நாடகமாகத் தருவதென்பது மிகப் பெரிய சவால். அதில், பேரளவு வென்றிருக்கிறது ‘ஷ்ரத்தா’ குழு.