“ஒரு படம் முடிந்தவுடன் தான், மற்றொரு தயாரிப்பாளர் வாங்கி விநியோகம் செய்வார். ஆனால், 'சலீம்' படத்தின் கதையைக் கேள்விப்பட்டு இப்படத்தை மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முதல் முறை நடக்கும் அதிசயம் இது. இதுவே எனக்குக் கிடைத்த வெற்றிதான்” என்று சந்தோஷத்தோடு கை குலுக்கி வரவேற்றார் இயக்குநர் நிர்மல் குமார். அவரிடம் பேசியதிலிருந்து..
‘சலீம்' படத்தைப் பற்றி சொல்லுங்கள்
இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கு இதைச்செய், இப்படிச்செய் என்று நாம் அடுத்தவர்களை வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படி ஏன் நான் வாழ வேண்டும், ஒரு நாளாவது நான் நானாக வாழக் கூடாதா என்று ஒருவன் முடிவெடுக்கிறான். அப்படி முடிவெடுப்பதால் என்ன நடக்கிறது என்பதுதான் ‘சலீம்'.
‘நான்' படத்தில் இருந்து விஜய் ஆண்டனியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் படமாக ‘சலீம்' இருக்கும். அப்படத்தில் இருந்து வேறுபட்டு ஒரு ஆக் ஷன் த்ரில்லர். 'நான்' படம் ரொம்ப அமைதியான சுபாவத்தைப் பற்றி இருக்கும். இப்படத்தில் அப்படியே வேறுவிதமாக இருக்கும்.
‘நான் 2' தான் ‘சலீம்' என்று பேச்சு நிலவுகிறதே?
கண்டிப்பாக இல்லை. படத்தைப் பார்ப்பதற்கு முன்பே சொல்வது தவறு. படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
‘சலீம்' உண்மை சம்பவங்களின் தொகுப்பா?
இக்கதை உண்மைச் சம்பவம்தான். தேவையற்ற கட்டாயங்களைத் தகர்த்து எறிந்துவிட்டு வாழும் ஒரு மனிதனின் கதை. இப்படத்தைப் பார்க்கும் அனைத்து மக்களின் பிரதிபலிப்பு படத்தில் இருக்கும். ஒரு சாதாரண மனிதன் கோபப்பட்டால் என்னவாகும் என்பதை ரொம்ப சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறேன்.
ஆக் ஷன் த்ரில்லர் வகை என்கிறீர்கள். ஏன் நாயகனாக விஜய் ஆண்டனி?
'நான்' படத்தைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு அவர் கதை கேட்டுக்கொண்டிருப்பதாக என் நண்பர் நாகராஜ் மூலமாக அறிந்தேன். உடனே 'சலீம்' கதையைத் தயார் செய்து கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஆரம்பித்தோம். விஜய் ஆண்டனிக்காக உருவாக்கப் பட்ட கதைதான் 'சலீம்'. படம் பார்க்கும்போது நாயகனாக அவர் தெரிய மாட்டார். சாதாரண ஆளாகத்தான் தெரிவார். அதுதான் விஜய் ஆண்டனி ஸ்பெஷல்.
உதவி இயக்குநராக நீண்ட காலமாகத் திரையுலகில் பயணம் பண்ணியிருக்கிறீர்களே?
எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குநராக 'ரசிகன்', 'தேவா', 'விஷ்ணு', 'மாண்புமிகு மாணவன்' படங்களில் பணியாற்றினேன். சுமார் 150 விளம்பரப் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். பிறகு இயக்குனர் பாரதிராஜாவிடம் 'ஈர நிலம்', 'கண்களால் கைது செய்', 'பொம்மலாட்டம்'ஆகிய படங்க ளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன். இருவரிடமும் பணியாற்றியதில் இருவேறு துருவங்களையும் கற்றுக் கொண்டேன். இரண்டை யும் நீங்கள் சலீமில் பார்க்கலாம்.
ரொம்ப அமைதியான பையன். இவனுக்குப் பெண்களே பிடிக்காது என்று இசை வெளியீட்டு விழாவில் கூறினார் பாரதிராஜா. எப்படிக் காதல் காட்சிகள் எல்லாம் காட்சிப்படுத்தினீர்கள்?
தொழில் செய்யும் இடத்தில் தொழில்தானே செய்ய முடியும். தொழில் செய்யுற இடத்தில் பெண்களிடம் கடலை போட்டால், நான் தொழில் கற்றுக்கொள்ளவே முடியாது இல்லையா? எனக்குக் காதல் செய்வதற்கு என் மனைவி வீட்டில் இருக்கிறார்.
அங்கு காதல் செய்வேன். பசங்களோடு விளையாடுவேன். காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்வேன். அதை மீறி யாருடனும் எதையும் பேசுவதில்லை. நான் சந்தோஷமாக இருப்பதில்லை என்பதைத்தான் இயக்குநர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அடுத்த படத்தில் உங்கள் குருவை இயக்கப் போவதாகக் கேள்விப்பட்டோமே?
ஆம். என் அடுத்த படத்தில் இயக்குநர் பாரதிராஜாவே நடித்து, தயாரிக்க இருக்கிறார். இப்படம் முடிந்தவுடன் அதற்கான பணிகளை ஆரம்பிப்பேன்.