நாடகம் வளர்த்த மதுரை, பல சிறந்த கலைஞர்களைத் தமிழ்த் திரைக்கு அளித்திருக்கிறது. அவர்களில் அழகே உருவான நடிகர், ஸ்ரீராம் என்று அழைக்கப்பட்ட மதுரை ஸ்ரீராமுலு நாயுடு. பக்ஷிராஜா ஸ்டுடியோவை கோவையில் நிறுவிப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த அதன் முதலாளியின் பெயரும் ஸ்ரீராமுலு நாயுடுவாக இருந்தது. இதனால் நடிகர் ஸ்ரீராமுலு நாயுடு தனது பெயரை ஸ்ரீராம் என மாற்றிக்கொண்டார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ஆர், எஸ்.எஸ்.ஆர் என்று புகழ்பெற்று விளங்கிய கதாநாயகர்களுக்கு மத்தியில், தனது தனித்த, உயரமான, அழகான தோற்றத்தால் 50-களின் இறுதியில் கவனம் பெறத் தொடங்கினார் ஸ்ரீராம். ‘பார்க்க மட்டுமல்ல, பழகுவதிலும் உதவி என்று வருபவர்களுக்குக் கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பதிலும் இவர் ‘ஹேண்ட்சம் ஹீரோ’ எனப் பாராட்டி எழுதியிருக்கின்றன அன்றைய பத்திரிகைகள்.
மதுரையில் பிறந்து வளர்ந்த பட்டதாரியான ஸ்ரீராம், ஜெமினி ஸ்டுடியோவின் படங்களால் ஈர்க்கப்பட்டார். எப்படியாவது ஜெமினியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தார். ஆனால், ஜெமினி ஸ்டுடியோவில் தன்னைப் போலவே நூற்றுக்கணக்கான ‘ஜெமினி பாய்ஸும் கேர்ள்ஸும்’ இருப்பதைக் கண்டு திகைத்துப்போனார். ஆனால் தனது தோற்றம், இதர திறமைகள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஒருநாள் ஜெமினி தயாரிக்கும் படத்தில் தனக்கு நல்ல வேடம் கிடைக்கும் எனக் காத்திருந்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. பின்னால் ஜெமினிக்குப் புகழ் சேர்த்த படங்களில் ஒன்றாக மாறிய ‘சம்சாரம்’ படத்தில் ஸ்ரீராமுக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் அவருக்கு அங்கே வசனம் இல்லாத ‘கூட்டத்தில் ஒருவன்’ வேடங்களே கிடைத்தன. அவற்றில் ஒன்று ஜெமினியின் பிரம்மாண்ட காவியமாகிய ‘சந்திரலேகா’வில் குதிரை வீரனாக அவர் நடித்தது.
ஆனால், ‘சந்திரலேகா’ தயாரிப்பில் இருக்கும்போதே எழுத்தாளர், இயக்குநர் கே.வேம்புவின் கண்களில் பட்டார் ஸ்ரீராம். ‘சந்திரலேகா’ வெளியான அதே ஆண்டில் வேம்பு, கதை, வசனம் எழுதி இயக்க, மெட்ராஸ் டாக்கீஸ் சௌந்தரராஜன் தயாரித்து வெளியிட்ட ‘மதனமாலா’(1948) படத்தில் ஓர் அழகிய ராஜகுமாரனாக குதிரையேறிவந்தார். அரசனுக்குப் பயப்படாமல் அரசவை நாட்டியக்காரி மதனமாலாவை காதலித்துக் கரம்பற்றினார். விக்கிரமனாக அந்தப் படத்தில் ஸ்ரீராம் வரும் காட்சிகளுக்குத் திரையரங்கில் விசில் பறந்தது.இளம் ரசிகைகளின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
அரச உடையில் சரி, சாதாரண குடும்பத்துப் பையனாக ஸ்ரீராம் எப்படி இருப்பார் என்பதை அடுத்த ஆண்டே வெளியான ‘நவஜீவனம்’ காட்டியது. ஸ்ரீராமைச் சுற்றித்தான் ‘நவஜீவனம்’ படம் நகர்ந்தது. எளிய தொழிலாளி நாகையா. அவருடைய மனைவி கண்ணாம்பா. பெற்றோரை இழந்ததால் தனது தம்பி ஸ்ரீராமைச் சிறுவனாகத் தன் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுகிறார் நாகையா. கண்ணாம்பாவும் ஸ்ரீராமைத் தன் மகனாகவே ஏற்றுக்கொள்கிறார். வளர்ந்து கல்லூரி மாணவன் ஆகும் ஸ்ரீராம் சக மாணவி வரலட்மியைக் காதலிக்கிறார்.
வரலட்சுமி நூல் மில் முதலாளியின் மகள். பணக்கார சம்பந்தம் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு ஆகாது என்று அண்ணனும் அண்ணியும் எச்சரிக்கிறார்கள். ஆனால், வளர்த்தவர்கள் சொல் கேளாமல் வரலட்சுமியைக் கல்யாணம் செய்து கொள்ளும் ஸ்ரீராம், மாமனாரின் திடீர் மரணத்துக்குப் பின் முதலாளி ஆகிறார்.
அண்ணன், அண்ணியைத் தன்னுடன் வற்புறுத்தித் தங்கவைத்துக்கொள்ளும் அவர், தான் ஒரு தொழிலாளியின் தம்பி என்பதை மறந்து ஆடம்பரத்தில் மூழ்கித் திளைக்கிறார். மனைவியைக் கடிந்துகொள்ளும் அண்ணியை அடித்தும்விடுகிறார். அண்ணனும் அண்ணியும் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, ஸ்ரீராமுக்கு வாழ்க்கை புரிந்துவிடுகிறது. பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது. கண்ணாம்பா தயாரித்து நடித்த இந்தப் படத்தில் நாகையா, கண்ணம்பாவுக்கு சற்றும் சளைக்காத நடிப்பைக் கொடுத்துப் பாராட்டு பெற்றார் ஸ்ரீராம்.
முதன்முறையாகத் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்தபோது 1949-ல் சிறந்த திரைப்படமாக ‘நவஜீவனம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அன்றைய கல்லூரி மாணவ, மாணவியர் ரசித்துப் பார்க்கும் நாயகனாக ஸ்ரீராம் மாறினார். இதைப் பயன்படுத்திக்கொள்ளும்விதமாக ஜெமினி நிறுவனம் அடுத்து தயாரித்த ‘சம்சாரம்’ படத்தில் அவருக்கு முக்கிய வேடம் அளித்தது. கிராமத்துப் பட்டிக்காட்டானாக இருந்து, பின் நவநாகரிக இளைஞனாக மாறும் இருபரிமாணக் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கிய ஸ்ரீராமுக்கு உயர்தரமான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு கைவந்த கலையாக இருந்தது.
வெறும் 23 படங்களே நடித்திருக்கும் ஸ்ரீராமின் சிறப்பு, கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் தொடர்ந்து நடித்தது. இரண்டாவது கதாநாயகன், வில்லன், பாசமான தம்பி, பாசமான அண்ணன், பட்டிக்காட்டான், கோடீஸ்வரன், வீரம் செறிந்த இளவரசன் என பல வண்ணத் துணைக் கதாபாத்திரங்களில் தன் நடிப்புத் திறமையை நிறைவாகப் பளிச்சிடச் செய்திருக்கிறார். பிசிறு தட்டாத கணீர் குரல், நாடகத்தனம் குறைந்த ஸ்டைலான நடிப்பு, எம்.ஜி.ஆர்., ரஞ்சன் ஆகிய நடிகர்களுக்கு இணையாக வாள் சுழற்றும் திறன், சிறந்த குதிரையேற்ற வீரர், நல்ல காரோட்டி எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ரீராம். சொந்தப் படம் தயாரித்ததால் அதிக நஷ்டத்தைச் சந்தித்த நடிகர்களில் ஒருவராக ஆனார். ‘மலைக்கள்ளன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகவும் ‘பழனி’ படத்தில் சிவாஜிக்குத் தம்பியாகவும் நடித்த ஸ்ரீராம், இந்திப் படவுலகில் நுழைந்திருந்தால் வெற்றியை ஈட்டியிருக்கலாம்.
கடைசியாக அவர் தயாரித்து நடித்த படம் ‘மர்மவீரன்’. அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லியின் (Johnston McCulley) புகழ்பெற்ற ‘ஸோரோ’ வரிசை நாவல்களின் சாகசக் கதாபாத்திரமான டான் டியாகோவை நினைவூட்டும் வேடத்தில் மகேந்திரனாகவும் பரம்வீர் ஆகவும் ‘மர்ம வீரனில்’ இரண்டு பரிமாணங்களில் ஸ்ரீராம் வழங்கிய நடிப்பு சாகசமும் சவால்களும் நிறைந்தது. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர். எஸ்.வி.ஆர், வி.கே.ஆர், ஆர்.நாகேஷ்வரராவ் என அன்று திரையில் ஒளிர்ந்த அத்தனை ஜாம்பவான் நடிகர்களும் ஸ்ரீராமின் நட்புக்காக ‘மர்மவீர’னில் நடித்துக் கொடுத்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ‘எலெக்ட்ரிக்’ வாள் சண்டை என்ற புதுமையைப் புகுத்திய ஸ்ரீராம் ரசிகர்களுக்குப் பல்சுவை விருந்தளித்தார். பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம், நான்கு வாரங்களுக்குமேல் ஓடாததால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தவர், சாதனைகள் படைக்கு முன்பே மறைந்தார்.
படங்கள் உதவி: ஞானம்