பாலிவுட்டைப் பொறுத்தவரை சல்மான் கான் நாயகன் என்றால் கதையே தேவையில்லை என்ற அளவில் வெற்றி மீது வெற்றி பெற்றுவருகிறார். சாதாரண மசாலா கதையைக்கூட ஹாலிவுட் திரைப்படம் போல் தொழில்நுட்ப நேர்த்தியுடன் படமாக்கிப் பிரமாதமான அழகிகளை நாயகியாக்கிப் படைக்கும் அறுசுவை விருந்துதான் சல்மான் கான் படங்களின் பார்முலா.
சல்மான் கான் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் கிக் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது இந்திய நடிகர்கள் நடித்த ஆங்கிலப் படம் போல நேர்த்தியாக உள்ளது. சல்மான் கான் சூப்பர் மேனாக ரயில்களையும், பேருந்துகளையும் பைக்கிலும் சைக்கிளிலும் சாதாரணமாகச் சின்னக்காயம் கூட இல்லாமல் தாண்டுகிறார்; தப்பிக்கிறார்.
கிக் படத்தின் சண்டைக் காட்சிகளைப் படம் பிடிப்பதற்கு முதல் முறையாக ஆளற்ற விமானங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் விமானங்கள் ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன. போலந்தில் நடக்கும் சண்டைக் காட்சிகளை இயக்குநர் சாஜி நாதிய வாலாவின் படப்பிடிப்புக் குழுவினர் ஆளற்ற விமானங்களை வைத்துப் படம்பிடித்துள்ளனர்.
தெலுங்கில் ‘கிக்’ என்ற பெயரிலேயே வெளியாகி வெற்றிபெற்று, தமிழில் தில்லாலங்கடியாக ஆன படம்தான் சல்மான் கானுக்காக சூப்பர்மேன் திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான சாஜி நாதியா வாலா இயக்கும் முதல் படமான இந்தி ‘கிக்’ ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பும் திகிலும் இல்லாத எந்தச் சாதாரணக் காரியத்திலும் ஈடுபட விரும்பாத நாயகனாக சல்மான் கானும், வசதியான வீட்டுப் பெண்ணான ஜாக்குலின் பெர்னாண்டசும் சந்தித்துக் காதல் கொள்கிறார்கள். நாயகனின் பொறுப்பற்ற தனத்தைப் பார்த்து நாயகி வெறுப்படைய இருவரும் பிரிகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு போலீஸ் அதிகாரியுடன் திருமணம் நிச்சயமாக அவர் தனது முந்தைய காதலர் குறித்து அவரிடம் மனம் விட்டுப் பேசுகிறார். அப்போதுதான் தெரிகிறது, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களிடம் பெரிய கொள்ளையை நிகழ்த்திய திருடன்தான் சல்மான் கான் என்று.
அப்புறம் என்ன? தனது முன்னாள் காதலன்மீது முதலில் கோபப்படும் நாயகி, தனது காதலனின் செயலுக்குப் பின்னால் இருக்கும் நியாயத்தைத் தெரிந்துகொண்ட பிறகு காப்பாற்றுகிறாள். அப்புறம் என்ன? நாயகனும் நாயகியும் இணைகிறார்கள்.
2009-ல் தெலுங்கில் வெற்றி பெற்றதிலிருந்து இந்தப் படத்தை இந்தியில் எடுக்கப் பல முயற்சிகள் நடந்தன. முதலில் இந்தி ரீமேக்கிலும் ரவி தேஜாவே நடிப்பதாகத்தான் இருந்தது. அப்புறம் இப்படத்தின் தயாரிப்பாளரான சாஜி நாதியத்வாலா, இப்படத்தின் இயக்குநராக ஏ.ஆர்.முருகதாஸை ஒப்பந்தம் செய்தார். அவருக்கு முடியாமல் போக, சிரீஷ் குந்தர் என்பவர் இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு தயாரிப்பாளரே இயக்குநராக மாறி இப்போது படமும் ரிலீஸாகப் போகிறது.
தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா, சோனாக்ஷி சின்ஹா, பிரியங்கா சோப்ரா எனப் பல நட்சத்திரங்கள் பரிசீலனை செய்யப்பட்டுக் கடைசியில் சல்மான் கானுக்கு ஜோடி சேர்ந்திருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். போதாக்குறைக்கு பிரிட்டிஷ் அழகி நர்கிஸ் ஃபாக்ரி ஒரு பாடல் நாயகியாக அசத்தியுள்ளார்.
இந்தப் படத்திற்குத் திரைக்கதையில் பங்காற்றியிருப்பவர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத். ஆக் ஷன் காமெடி த்ரில்லர் படமான கிக் படத்தின் டிரைலரில் சல்மான் கானை எல்லாரும் ‘டெவில்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.
பாக்ஸ் ஆபீசை மீண்டும் சுக்கு நூறாக்குமா சல்மான் என்னும் இந்த வசூல் பிசாசு?
ஈத் பெருநாள் வெளியீடாகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியிருக்கும் இப்படம் முதல் நாள் இந்தியா முழுவதும் 30 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.