நாடறிந்த நட்சத்திரக் காதல்
1. இந்து ஆலய நுழைவுப் போராட்டத்தைக் கதைக்கருவாகக் கொண்டு 1947-ல் வெளியான படம் ‘தியாகி’. இந்தப் படத்துக்கு பாபநாசம் ராஜகோபால அய்யர், எஸ்.வி.வெங்கடராமன், டி.ஆர். ராமநாதன் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்தனர். பாபநாசம் சிவனின் அண்ணன்தான் பாபநாசம் ராஜகோபால அய்யர். இவரது மகள்தான் பின்னர் வி.என்.ஜானகி ராமச்சந்திரன் என்று அறியப்பட்டு, தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராகவும் ஆனார். வி.என்.ஜானகியின் நடிப்பு இந்தப் படத்திற்காகப் பேசப்பட்டது. இவர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம் ‘ராஜமுக்தி’. இதற்குப் பிறகுதான் எம்.ஜி.ஆரை மணந்து, ஜானகி ராமச்சந்திரன் ஆனார். திருமணத்துக்குப் பின்னர் இந்த நட்சத்திரஜோடி நடித்து வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் எது?
மறக்க முடியாத மாண்டேஜ்!
2. கொடுமைக்கார மேலதிகாரிகளுக்கு எதிராக ரஷ்யக் கப்பல் படைவீரர்கள் கிளர்ந்தெழுந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 1925-ல் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’. ரஷ்ய இயக்குநர் ஐசன்ஸ்டீன் உருவாக்கிய இந்த மவுனப்படம், சினிமா மாணவர்களுக்கான உலகளாவியப் பாடப்புத்தகமாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது. எடிட்டிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சினிமாவைப் புரிந்துகொள்வதற்கும் உருவாக்குவதற்குமான ‘மாண்டேஜ்’ முறை சித்தரிப்பு, இந்தப்படத்தின் மூலமாகவே புகழ்பெற்றது. அதிகாரிகளுக்கு எதிராக போர்க்கப்பலில் இருக்கும் புரட்சியாளர்கள் சிவப்புக் கொடியை ஒரு காட்சியில் காட்டவேண்டும். ஆனால் அப்போது இருந்த கருப்புவெள்ளை படச்சுருளில் சிவப்பைக் கொடியைக் காட்டினால் கருப்பாகத் தெரியும். இதனால் படப்பிடிப்பில் வெள்ளைக்கொடி பயன்படுத்தப்பட்டது. பின்னர் இயக்குநர் ஐசன்ஸ்டினே அமர்ந்து 108 பிரேம்களுக்கு சிவப்பு வண்ணம் நிரப்பினார். அந்தக் காட்சி அப்போது ரஷ்யாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1917 ரஷ்யப்புரட்சிக்குக் காரணமாக இருந்த ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’ கலகம் நடந்த ஆண்டு எது?
இந்திய எழுத்தாளரின் ஆங்கிலப் படம்
3. தேவ் ஆனந்த், வஹீதா ரஹ்மான் ஜோடியின் நடிப்பில் 1965-ல் வெளியான படம் ‘கைட்’. ஆர்.கே.நாராயண் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தி மொழிப்படமாக இதை இயக்கினார் விஜய் ஆனந்த். எழுத்தாளர் ஆர்.கே. நாராயணால் வெறுக்கப்பட்ட இத்திரைப்படம், இந்திய சினிமா தந்த மாபெரும் படைப்புகளில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது. எஸ்.டி.பர்மன் இப்படத்துக்கு அளித்த பாடல்கள் இன்றும் ரசித்துக் கேட்கப்படுபவை. ‘கைட்’ ஆங்கிலத்திலும் எடுக்கப்பட்டது. ஆங்கில வடிவத்தை இயக்கியவர் டாட் டேனியலெவ்ஸ்கி. ஆனால் இந்தப் படம் 42 ஆண்டுகள் கழித்து 2007-ல் தான் திரையைக் கண்டது. இதற்கு ஆங்கிலத் திரைக்கதை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் யார்?
அவசியப்படாத அனுபவம்
4. இத்தாலிய நியோரியலிசத் திரைப்படங்களின் பாதிப்பில் மலையாளத்தில் உருவான முதல் யதார்த்தப்படம் ‘நியூஸ்பேப்பர் பாய்’. 1950-களில் கேரளத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் நடக்கும் கதை இது. திரைக்கதை, நடிப்பு, தயாரிப்பு வரை முற்றிலும் முன் அனுபவம் இல்லாத மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய முதல் திரைப்படம் இது. இதற்குத் திரைக்கதை எழுதி இயக்கியவர் ராமதாஸ். ஆதர்ஸ் கலாமந்திர் என்ற குழுவாக மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் செலவில் உருவான இப்படம், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. இதன் உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படத்தின் பெயர் என்ன?
ஓய்வறியா உளவாளி!
5. எழுத்தாளர் ஐயன் ப்ளெமிங்கால் உருவாக்கப்பட்டு இன்றும் குழந்தைகளாலும் பெரியவர்களாலும் மறக்கமுடியாத கதாபாத்திரமாக இருக்கும் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட், சினிமாவில் தோன்றிய ஆண்டு 1963. திரைப்படம் ‘டாக்டர் நோ’. கற்பனையில் மனச்சித்திரமாக இருந்த ஜேம்ஸ்பாண்ட் ரத்தமும் சதையுமாக இந்தப் படத்தின் மூலமே உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகமானார். ஜேம்ஸ் பாண்டுக்கு முதலில் உயிர்கொடுத்த நடிகர் சீன் கானரி. இதுவரை வெவ்வேறு நடிகர்கள் நடித்து வெளிவந்திருக்கும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் 26. இதுவரை ஜேம்ஸ்பாண்ட் கதாபத்திரத்தை ஏற்ற நடிகர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடைகளைச் சரிபார்த்து உங்கள் திரைப்பட வரலாற்று அறிவை மதிப்பிடத் தயாரா?
இதோ விடைகள்
1.மோகினி(1948) 2. 1905-ம் ஆண்டு 3. பேர்ல் எஸ்.பக்
4. ஒரு நியோரியலிஸ்டிக் ஸ்வப்னம் 5. ஒன்பது