கிரிக்கெட், கபடி, கூடைப்பந்து, கால் பந்து, ஓட்டப்பந்தயம் என்று விளையாட்டுகளை மையமாக வைத்து ஒரு வட்டம் அடித்துவிட்டது கோலிவுட். இப்போது குத்துச் சண்டைக்கும் வடசென்னைக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே எம்.குமரன் சன்ஆஃப் மகாலட்சுமியில் குத்துச்சண்டை வீரராக நடித்த ஜெயம் ரவி, தற்போது பூலோகம் படத்திலும் குத்துச் சண்டை வீரராக நடித்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை வடசென்னை பகுதியிலிருந்துதான் குத்துச்சண்டை வீரர்கள் உருவாகி வருகிறார்கள். பூலோகம் படத்திலும் ஜெயம் ரவி வடசென்னை இளைஞராகவே நடிக்கிறார்.
இதற்கிடையில் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து முடித்திருக்கும் ‘ஐ’ படத்தில் அவரது கதாபாத்திரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார்கள். தற்போது அந்த ரகசியம் கசிந்திருக்கிறது.
‘ஐ’ படத்தில் விக்ரமும் வடசென்னையைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரராகவே நடித்திருக்கிறாராம். தனது காதலிக்காகவே ஒரு சாமன்ய இளைஞன் குத்துச் சண்டை சாம்பியன் ஆகிக்காட்டுவதுதான் படத்தின் கதை என்கிறார்கள். இந்த இரண்டு படங்களையுமே தயாரித்திருப்பவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.