விகாஸ் பஹல் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2014-ல் வெளியாகி சக்கைபோடு போட்ட இந்திப் படம் ‘குயின்’. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக கங்கனா ரனாவத் பெற்றார். இந்தப் படத்தைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தனித்தனியே மறு ஆக்கம் செய்ய, அதன் தென்னிந்திய ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருந்தார். தற்போது தமிழ் மறு ஆக்கத்தில் காஜல் அகர்வாலும் கன்னட மறு ஆக்கத்தில் பாருல் யாதவும் கங்கனாவின் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்.
டைட்டில் ரோலில் நடிக்க தெலுங்கு, மலையாளத்தில் பல கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. முதலில் தமிழ் மறு ஆக்கத்தில் நடிப்பதாக இருந்த தமன்னா, தற்போது தெலுங்கு மறு ஆக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மலையாளத்தில் குயினாக நடிக்க மஞ்சிமா மோகன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ் மறுஆக்கத்துக்கு தமிழச்சி தங்கபாண்டியன் வசனம் எழுத, ரமேஷ் அர்விந்த் இயக்கவிருக்கிறார். தெலுங்கு மறுஆக்கத்தை இயக்க நீலகண்ட ரெட்டியுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. கங்கனாவின் நடிப்பை இந்த நான்கு கதாநாயகிகளில் யார் மிஞ்சப்போகிறார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.