உடலையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் யோகாசனத்தின் முழுப் பலனை அனுபவிக்க உடலுக்கு ஆற்றலும் மனதுக்கு அமைதியும் தேவை. இதற்குச் சத்தான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
அதற்கு முன்னதாக, யோக ஆசனங்களைக் காலையில் வெறும் வயிற்றில் செய்வது மிகச் சிறந்தது. ஒருவேளை மாலை நேரத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதாக இருந்தால் குறைந்த பட்சம் 2 மணி நேரத்துக்கு முன்பே உணவைச் சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். கூடுதல் செரிமான நேரம் கோரக்கூடிய இறைச்சி உணவாக இருப்பின் 4 மணி நேர இடைவெளி அவசியம்.
ஒருவேளை பசி பொறுக்கவில்லை என்றால், பயிற்சிக்கு 45 நிமிடங்களுக்கு முன் ஒரு வாழைப்பழம் அல்லது ஊறவைத்த சில பாதாம் பருப்புகளைச் சாப்பிடலாம். யோகா செய்து 30 நிமிடங்களுக்குப் பிறகு இளநீர், பழச்சாறு அல்லது எளிதில் செரிக்கக்கூடிய உணவு வகைகளை உட்கொள்ளலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவது அனைவருக்கும் உகந்தது. குறிப்பாக வாழைப்பழம், பப்பாளி முதலான பருவ காலப் பழங்கள், சுரைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
கேழ்வரகு, தினை வகைகள், பழுப்பு அரிசி ஆகிய முழுத் தானியங்கள் உடலுக்கு ஆற்றல் அளிப்பவை. வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகத் தேன், நாட்டுச் சர்க்கரை, பேரீச்சம்பழம் முதலான இயற்கை இனிப்புகளை அளவாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் நீரிழப்பைத் தடுக்க நாள் முழுவதும் போதுமான அளவு நீர் பருக வேண்டும். அதிகக் காரமான, பதப்படுத்தப்பட்ட, எண்ணெய்யில் வறுத்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக, அரை வயிறு உணவு சாப்பிடுதல், கால் வயிறு தண்ணீர் பருகுதல், மீதி கால் பாகத்தை வெற்றிடமாக விடுவதே யோக நெறிமுறை.