“காப்பி தெரியும், அதென்ன ஃபிளாப்பி?” என்கிற வார்த்தைகளை எதிர்கொண்ட தருணங் களின் பின்னே, ‘இப்போ உங்க வயசு என்ன?’ என்கிற கேள்வி ஒளிந்து நிற்கிறது.
இன்றைய ‘ஏஐ’ தலைமுறையினருக்கு, ‘ஃபிளாப்பி’ (floppy) உட்படக் கணினி சம்பந்தப்பட்ட அனைத்தையும் பவ்யத்துடன் முந்தைய தலைமுறை பயன்படுத்தியது விநோதமாகத்தான் இருக்கும்.
2000களில் கம்ப்யூட்டர் கீபோர்டை தொடுவதற்கே ஆயிரம் முறை யோசித்தவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கான கோப்பு
களைச் சேமிப்பதற்கு வழியமைத்த ‘ஃபிளாப்பி’யை ஒரு பூவைப் போலவே கையாண்டனர்.
சிறியதாக இருக்கும் ‘ஃபிளாப்பி ட்ரைவ்’ உள்ளே, 'நெகிழ்வட்டு' என்றழைக்கப்படும் ஃபிளாப்பியைத் தள்ளிவிடும்போது, விசிஆரில் கேசட் சிக்கிக்கொண்டதெல்லாம் நினைவுக்கு வரும்.
சில நிமிடங்கள் ஆன பிறகும் திரையில் ஃபிளாப்பி’ உள்ளடக்கம் தெரியாவிட்டால் மனம் பதற்றமடையும். அதே நேரத்தில், உடனே ‘எஜெக்ட்’ பொத்தானை அழுத்தி அதனை வெளியே எடுப்பதற்கும் பயமாக இருக்கும் (’க்ராஷ் ஆயிடுமோ’ என்கிற எண்ணம் இன்றைக்கும் பொதுதான்).
ஃபிளாப்பியில் பெரும்பாலும் நோட்பேடு அல்லது வேர்ட்பேடு கோப்புகள், குறைவான தரத்தில் அமைந்த படங்கள் போன்றவை மட்டுமே இருக்கும்; ஏனென்றால், அதன் மொத்தத் திறனே 1.44 எம்பி தான். அவற்றைக் கணினியில் திறந்து ‘காப்பி & பேஸ்ட்’ செய்வதே பெரும் போராட்டமாக இருக்கும்.
பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் அமைந்த ஃபிளாப்பிகள் மத்தியில் ‘பளிச்’ வண்ணங் களில் அமைந்தவை பொறாமையைக் கிளப்பும். அதெல்லாமே மேற்பூச்சுதான் என்பது புரிந்தபோது, அதன் வசீகரம் வடிந்து போயிருந்தது.
மேல்பகுதியிலிருக்கும் அலுமினியத் தகட்டினை நகர்த்தினால், உள்ளே ஒரு ‘பிலிம்’ போன்றிருக்கும். ஃபிளாப்பியை உடைத்து அதன் உள்ளே நோக்கினால், நடுவிலிருக்கும் பொத்தானைச் சுற்றி ஒரு கனமான பிளாஸ்டிக் தாள் வட்ட வடிவிலிருப்பது போன்றிருக்கும்.
அதில்தான் அத்தனை தகவல்களும் சேமிக்கப்பட்டி ருக்கும். மிகச் சில ஆண்டுகளிலேயே சிடி, டிவிடிகளால் ஏற்பட்ட ‘போட்டா போட்டி’யில் ‘ஃபிளாப்பி டிரைவ்’வுக்கான இடம் பறிக்கப் பட்டது.
பிறகு பென் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க், கிளவுட் சேமிப்பு எனப் பல வழிகள் வந்துவிட்டாலும் 2000களில் கணினியோடு காதல் புரிந்தவர்களிடையே ‘ஃபிளாப்பி’யின் தடங்கள் மங்காமல் இருக்கும்.
’ஃபிளாப்பி’ பயணம்
ஐபிஎம் நிறுவனத்தால் 1971இல் ‘ஃபிளாப்பி’ வணிகரீதியில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆலன் ஷுகார்ட் தலைமையிலான குழு இதனை வடிவமைத்
திருந்தது. இது 8 அங்குல அளவில், ஏறக் குறைய 100 கிலோபைட் தகவல்களைக் கையாள்கிற விதத்தில் இருந்தது.
1976இல் 5 1/4 அங்குல அளவில் ஃபிளாப்பிகள் வடிவமைக்கப்பட்டன. எண்பதுகளில் 3.5 அங்குல அளவிலான ஃபிளாப்பிகள் பயன்படுத்தப்பட்டன. 2011இல் சோனி நிறுவனம் இதன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவித்தது.
இன்றும் போயிங் 747 – 400 விமானங்களில் தரவுகள் பயன்பாட்டுக்காக ‘ஃபிளாப்பி’யே பயன்படுத்தப்படுகிறது.
அவற்றை நவீனத் தொழில்நுட்பத்துக்கு மாற்றுவதற்கான செலவு கோடிகளில் இருப்பதுவே இதற்குக் காரணம். பழமையான சிடி, அல்ட்ரா ஸ்கேன் கருவிகள் கொண்ட மருத்துவமனைகளிலும் பழமையான இசைக்கோவைகளைக் கையாள்கிற மியூசிக் ஸ்டூடியோக்களிலும் சில நாடுகளில் பாதுகாப்பு அமைப்பு தொடர்பாகக்கணினிகளைக் கையாள்வதிலும் ‘ஃபிளாப்பி’ கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.