களஞ்சியம்

இணையத்தில் வாசனையைப் பரப்பலாமா?

செய்திப்பிரிவு

ஒரு கோப்பை காபியை ஒளிப்படமெடுத்த சில விநாடிகளில் திறன்பேசி வழியே எதிர்முனையில் இருப்பவருக்கு அனுப்பிவிடலாம். ஆனால், அந்த நபரால் அந்த காபியின் மணத்தை உணர முடியுமா?

‘அது சாத்தியம்தான்’ எனும்வகையில் ‘Scentronic’ என்கிற புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையம் வழியாகப் ஒளிப்படங்கள், காணொளிகளைப் அனுப்புவதுபோல வாசனையையும் பகிர்ந்து கொள்ள முடியும்!

சென்றடையும் மணம்

அமெரிக்காவின் ஓஹையோ மாகாணப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ‘Scentronic’ தொழில்நுட்பத்தை உருவாக்கி யுள்ளனர். இதனைப் பயன்படுத்தி, காபியின் வாசனையை ஒருவர் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார் என வைத்துக்கொள் வோம்.

முதலில், அனுப்புநரிடம் உள்ள மின்னணு மூக்கு (Electronic Nose) என்கிற கருவி, காபியின் வாசனைக்குக் காரணமான வேதிப்பொருள்களைக் கண்டறிகிறது. பின்னர், இயந்திரக் கற்றல் (Machine Learning) மாதிரி மூலமாக அந்த வாசனை குறித்த தகவல் உரு வாக்கப்பட்டு, இணையம் வழியாகப் பெறுநருக்கு அனுப்பப்படுகிறது.

பெறுநரிடம் உள்ள வாசனைக் கருவி, அந்தத் தகவலுக்கு ஏற்ற வாசனையை மீண்டும் உருவாக்குகிறது; அப்படியாக, காபியின் மணம் பெறுநரைச் சென்றடைகிறது.

இதில் கவனிக்கப்பட வேண் டிய விஷயம் என்னவென்றால் வாசனை மூலக்கூறுகள் திறன்பேசி வழியாகப் பயணிப்ப தில்லை. வாசனை குறித்த தகவல் மட்டுமே அனுப்பப் படுகிறது. அதுவும் வாசனைக் கருவியின் வழியே சென்றடைகிறது.

தற்போது, காபி, பீர், கேக், ஆரஞ்சு, சிவப்பு ஒயின் என ஐந்து வகையான வாசனைகளை மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தால் அடையாளம் காண முடிகிறது. இயந்திரக் கற்றல் மாதிரிக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சில சவால்கள்

வாசனைத் திரவியங்களை இணையவழியில் வாங்குவதற்கு முன்பே, அவற்றின் மணத்தை உணர்ந்து தேர்வுசெய்ய இந்தத் தொழில்நுட்பம் உதவலாம். அதேபோல், மெய்நிகர் விளை யாட்டுகளில் காடு, கடற்கரை போன்ற இடங் களுக்குப் பயணிக்கும்போது அந்தந்தப் பகுதியின் வாசனைகளை உணர முடியும்.

இந்த வாசனைத் தொழில்நுட்பம் தற்போது ஆராய்ச்சிக் கட்டத்தில் மட்டுமே உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான வாசனைகளையே இதனால் அடையாளம் கண்டு மீண்டும் உருவாக்க முடிகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாசனைகள் கலந்திருந்தால் துல்லியமாக அவற்றை அடை யாளம் காண்பதிலும், அதே மணத்தை மீண்டும் உருவாக்குவதிலும் சவால்கள் உள்ளன.

மேலும், இதற்கான கருவியின் விலை, பராமரிப்பு, பயன்படுத்தப்படும் வாசனைத் திரவங்களின் நம்பகத்தன்மை, பயனர் பாதுகாப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவைப்படும்; ஆதலால், இந்த ‘Scentronic’ தொழில்நுட்பப் பயன்பாட்டின் முழுமையான விரிவாக்கத்துக்காக இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT