உலகில் இருக்கும் தாய்மொழிகள் ஒவ்வொன்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை; போற்றுதலுக்குரியவை. ஆனால், பிப்ரவரி 21ஆம் நாள் சர்வதேசத் தாய்மொழிகள் நாளாகக் கொண்டாடப்படுவதற்கு நாம் அனைவரும் வங்கதேச மொழிப் போர் தியாகிகளுக்குத்தான் நன்றி கூற வேண்டும். தமது தாய்மொழியைக் காப்பதற்கான அவர்களின் தியாகங்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்.
1947இல் இந்தியாவிலிருந்து பிரிக்கப் பட்டுத் தனிநாடாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் களும் கிழக்குப் பகுதியில் வங்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அதிக எண்ணிக்கையில் வசித்துவந்தனர். அதனால் இப்போதுள்ள வங்கதேசம், பாகிஸ்தானின் அங்கமாக இருந்தபோது கிழக்குப் பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது. 1948இல் பாகிஸ்தானின் தேசிய மொழி உருது என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கிழக்குப் பாகிஸ்தானில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. வங்க மொழியும் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கை. இந்தப் போராட்டங்களை பாகிஸ்தான் அரசு கடுமையாக ஒடுக்கியது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்களால் மக்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் 1952 பிப்ரவரி 21 அன்று காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் ஐவர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1971இல் இந்தியாவின் ராணுவத் தலையீட்டில் வங்கதேசம் தனிநாடாக ஆனது. வங்க தேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 1998இல் கனடாவில் வசித்து வந்த வங்கதேசிகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஐ சர்வதேசத் தாய்மொழிகள் நாளாக அறிவிப்பதன் மூலம் உலக மொழிகளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்க வேண்டி அன்றைய ஐநா பொதுச் செயலாளர் கோஃபி அன்னானுக்குக் கடிதம் எழுதினர். இந்தக் கடிதம் வங்கதேச நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சர்வதேசத் தாய்மொழிகள் நாளுக்கான முன்மொழிவு வங்கதேச அரசின் சார்பில் ஐநா கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்புக்கு (யுனெஸ்கோ) அனுப்பப்பட்டது. இந்த முன்மொழிவின் அடிப்படையில் 1999 நவம்பர் 17 அன்று ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21, உலகம் முழுவதும் சர்வதேசத் தாய்மொழிகள் நாளாகக் கொண்டாடு வதற்கான தீர்மானம் யுனெஸ்கோ பொது அவையில் நிறைவேறியது. 2000 பிப்ரவரி 21 முதன்முறையாக சர்வதேசத் தாய்மொழிகள் நாள் கொண்டாடப்பட்டது.
2002இலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேசத் தாய்மொழிகள் நாளை யுனெஸ்கோ கொண்டாடுகிறது. 2023ஆம் ஆண்டு தாய்மொழி நாளுக்கான கருப் பொருள் ‘பன்மொழிக் கல்வி: கல்வியை உருமாற்று வதற்கான கட்டாயத் தேவை' (Multilingual Education: A necessity to transform education).
- கோபால்