ஆறாம் அறிவு

சென்னை ஐஐடி பேராசிரியருக்கு சர்வதேச விருது

நிஷா

சவூதி அரேபியாவின் மறைந்த இளவரசர் சுல்தான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் சுற்றுச்சூழலின் மீது மிகுந்த ஆர்வம்கொண்டவர். அந்த ஆரவத்தின் காரணமாக, 2002ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, சர்வதேச அறிவியல் விருதை அவர் வழங்கத் தொடங்கினார்.

ஆக்கபூர்வமான, பயனுள்ள வழிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க உதவும் அறிவியலாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் வழங்கப்படும் உயரிய அங்கீகாரமாக இந்த விருது கருதப்படுகிறது.

இந்த விருது ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சுமார் 2 கோடி ரூபாய், தங்கப் பதக்கம், கோப்பை, சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. சிறப்பு மிக்க அந்த விருது, இந்த ஆண்டு சென்னை ஐஐடி பேராசிரியருக்கு வழங்கப்படுகிறது.

சென்னை ஐ.ஐ டி-யில் பேராசிரியராகப் பணிபுரியும் தலப்பில் பிரதீப் தன்னுடைய குழுவுடன் இணைந்து தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். அந்தப் புதிய தொழில்நுட்பம் குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவில் அகற்ற உதவும். அதற்காக அவர்கள் மலிவு விலையில் உருவாக்கியிருக்கும் ‘வாட்டர் பாசிட்டிவ்’ எனும் நானோ அளவிலான பொருள் சுற்றுச்சூழலுக்கு உகுந்ததாகவும் இருக்கிறது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்காகவும், மலிவு விலையில் நானோ அளவில் பொருட்களை உருவாக்கியதற்காகவும் பேராசியர் பிரதீப்புக்கும் அவருடைய குழுவுக்கும் 'இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் விருது' வழங்கப்பட உள்ளது.

வருகிற செப்டம்பர் 12ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில், பேராசிரியர் தலப்பில் பிரதீப், அவருடைய குழு உறுப்பினர்களான அவுலா அனில் குமார், சென்னு சுதாகர், ஸ்ரீதாமா முகர்ஜி, அன்ஷூப், மோகன் உதயசங்கர் ஆகியோருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே பேராசிரியர் பிரதீப், பத்மஸ்ரீ, நிக்கேய் ஆசிய விருதுகளைப் பெற்றவர். இவர் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மூலம் 1 கோடியே 20 லட்சம் மக்களுக்குச் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT