ஆறாம் அறிவு

சீனாவில் தமிழ் அடையாளங்கள்

செய்திப்பிரிவு

சீன - தமிழ் மக்களுக்கு இடையிலான பரிமாற்றத்திற்கு 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. இந்த நீண்ட காலப் பரிமாற்றத்தின் வாயிலாகத் தமிழ் அடையாளத்துடன் கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள், எழுத்துகள், நடனம், உணவுப் பண்பாடு எனப் பலவும் சீனாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவை இரு நாடுகளுக்கிடையிலான பரிமாற்றங்களின் சின்னங்களாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல், தமிழ்க் கலாச்சாரம் உலக அளவில் வரவேற்கப்படுவதற்குரிய ஆதாரங்களாகவும் விளங்குகின்றன. அனைவருக்கும் தெரிந்த ட்சுவன்சோ சிற்பக்கலை நீங்கலாக, சீனாவில் வேறு எத்தகைய தமிழ் அடையாளங்கள் இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையின்வழி பார்க்கலாம்.

தமிழ் வெண்கலச் சிற்பக்கலை

பெய்ஜிங்கில் உள்ள உலகப் பூங்காவில் நடராஜர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதே பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தாஜ்மகாலுடன் சேர்த்து அச்சிலையானது இந்திய நாகரிகத்தின் சின்னமாக சீனப் பார்வையாளர்களுக்குக் காட்டப்படுகிறது. பெய்ஜிங் உலகப் பூங்கா திறக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான சீனர்கள், தமிழர்களின் வெண்கலச் சிற்பக் கலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்ந நடராஜர் சிலையைப் பார்த்து ரசித்துள்ளனர்.

தமிழ் உணவு

பெய்ஜிங், ஷாங்காய், செங்தூ முதலிய சீனாவின் முக்கிய நகரங்களில் தென்னிந்திய உணவு வகைகள் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றன. இத்தகு உணவுக்கென பல இந்திய உணவகங்கள் உள்ளன. அவற்றுள் இந்தியன் கிச்சன் என்னும் உணவகம் மிகவும் பிரபலமானது. இது பெய்ஜிங், ஷாங்காய் உள்படப் பல நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த உணவகத்தில் மெட்ராஸ் கோழிக்கறியும், தோசையும் மிகவும் புகழ்பெற்றவை. “தோசை சீன நாணிற்கு (சீன நாண் 馕, கோதுமை நாண் போன்ற ஒரு சீன பாரம்பரிய முக்கிய உணவு) பதிலாகக் கறியுடன் சாப்பிடத் தகுந்த சிறந்த உணவு என இணையதளத்தில் சில வாடிக்கையாளர்கள் கருத்துகளைத் தெரிவித்துப் பாராட்டியுள்ளனர்.

பரத நாட்டியம்

பரத நாட்டியம், இந்தியாவின் மிக முக்கிய நடனக் கலைகளுள் ஒன்றாகவும், பெருமைப்படத்தக்க தமிழ்க் கலையாகவும் திகழ்கின்றது. சீன பரத நாட்டியக் கலைஞர் ஜின் ஷன்ஷன் இளம் வயதிலேயே பரத நாட்டியத்தைக் கற்றுக்கொண்டவர். இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற நடனக் கலைஞர்களுள் ஒருவரான லீலா சாம்சனிடம் நடனம் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான்கு முறை இந்தியா பயணித்துள்ளார். சீனாவுக்குத் திரும்பிய பிறகு, சீன மக்களிடையே இந்த இந்தியப் பாரம்பரிய நடனத்தை ஊக்குவிக்கும் பணியில் உறுதியுடன் ஈடுபட்டு வருகின்றார்.

அவரின் அயராத முயற்சியினால் அதிகமான சீனர்கள் படிப்படியாகப் பரத நாட்டியத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். “இன்றைய நிகழ்ச்சி இந்திய நடனத்தைப் பற்றிய பொதுவான புரிதலை முற்றிலும் மாற்றிவிட்டது. உண்மையான இந்திய நடனம் இவ்வளவு மென்மையாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று அவரின் பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்த்த ஒருவர் கருத்து தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டில், ஜின் ஷன்ஷன் பெய்ஜிங்கில் இந்திய நடனக் கலை மையத்தை நிறுவி, பல சீனக் குழந்தைகளுக்குப் பரத நாட்டியத்தைக் கற்றுக்கொடுத்து வருகின்றார். “எங்களுக்கு இந்த நடனம் மிகவும் பிடித்துள்ளது. மேலும், நடனமாடும்போது ஒரு அற்புதமான உலகத்திற்குள் நுழைவதாக உணர்கிறோம்” என்று பரத நாட்டியத்தைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் குறிப்பிடுகின்றார்கள்.

தற்போதுவரை அவரது பாரத நாட்டியப் பள்ளியில் நூற்றுக்கணக்கான சீனக் குழந்தைகள் தமிழ்ப் பாரம்பரிய நடனத்தைக் கற்றுக்கொண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போதும், முக்கியப் பண்பாட்டு நிகழ்வின் போதும் ஜின் ஷன்ஷன்னும் அவரின் மாணவர்களும் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் ஈடுபட்டுத் தமிழ்ப் பண்பாட்டைச் சீன ரசிகர்களுக்குக் காட்டுகின்றனர்.

தமிழ் பேசும் சீனர்கள்

சீன வானொலி நிலையமானது 1963ஆம் ஆண்டில் தமிழ் ஒலிபரப்பினைத் தொடங்கியது. கடந்த 58 ஆண்டுகளில் சீன வானொலியானது நூற்றுக்கணக்கான மிகச் சிறந்த வானொலி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது. அதோடு, ‘சீன மற்றும் இந்தியச் சந்திப்பு’, TEA TIME TALK உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. தமிழ்ப் பிரிவின் புகழ்பெற்ற தொகுப்பாளர்கள் அவர்களின் தூய தமிழின் காரணமாகப் பெரும்பான்மையான தமிழர்களால் விரும்பப்படுகிறார்கள். அவர்களுள் நிலானி என்னும் தொகுப்பாளருக்குப் பத்து லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ்ச் சிற்பங்கள்

நிறைவாக, அனைவருக்கும் தெரிந்த சீனாவின் ஃபூஜியன் மாகாணத்தின் ட்சுவன்சோ நகரில் உள்ள தமிழ்ச் சிற்பங்கள் குறித்துப் பார்க்கலாம். ட்சுவன்சோ வெளிநாட்டுப் போக்குவரத்து வரலாற்று அருங்காட்சியகத்தில் விஷ்ணுவின் சிலை, இந்து தெய்வம் லட்சுமியின் சிற்பம், யானை, லிங்க வடிவிலான சிற்பங்கள், தமிழ் மொழிக் கல்வெட்டுகள் முதலியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள கையுவான் கோவிலில் இந்துக் கடவுளுடன் கூடிய கல் தூண்களும் காணப்படுகின்றன.

இவற்றைத் தவிர, போதி தர்மர், யுவாங்சுவாங் ஆகியோர் சீன-தமிழ் பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இன்று தமிழ் கற்ற சீனர்களான நாங்கள், சீன-தமிழ்த் தொடர்பினை வர்த்தகம், பண்பாடு, கல்வி என மேலதிகத் துறைகள் சார்ந்து வளர்த்தெடுக்க விரும்புகிறோம். வரும் நாட்களில், சீனாவில் மேலதிக மாணவர்கள் தமிழ் மொழி, நடனம், பண்பாடு முதலியவற்றைக் கற்றுக்கொள்ள ஆர்வமுடன் முன்வருவார்கள் என்றும் நம்புகிறேன்.

கட்டுரையாளர்: வாங் யுன்சியென் (Wang Yunxian),

பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்.

SCROLL FOR NEXT