காலம் வேகமாக உருண்டோடிவிட்டது. நான் தமிழ் படிக்கத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்கள் இளங்கலை படிப்பில், தமிழைக் கேட்பது, பேசுவது, வாசிப்பது, எழுதுவது போன்ற மொழிப் பயிற்சிகளைத் தவிர்த்து, தமிழ் நாகரிகத்தின் அனைத்து விடயங்கள் சார்ந்தும் ஆய்வு செய்ய ஊக்குவிக்கப்பட்டோம். இதன் காரணமாக, சீனரான நானும் என் சக மாணவர்களும் தமிழ் நாகரிகம், தமிழ்நாடு, தமிழர்கள் குறித்து அதிகம் கற்றுக்கொண்டோம்.
இந்தியாவைத் தாண்டி உலகமே பெருமைகொள்ளும் பல சிறப்பம்சங்களைக் கொண்டதாகத் தமிழ் கலாச்சாரம் உள்ளது என்பதையும் தெரிந்துகொண்டோம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் உலகின் சிறந்த இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. அத்தகு பெருமை கொண்ட தமிழ் கலாச்சாரத்திற்கும் சீன நாகரிகத்திற்கும் இடையிலான ஒற்றுமை - வேறுபாடுகள் குறித்து ஆராயும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
தமிழ் நாகரிகம் சீன நாகரிகத்தைப் போலவே பழமையானது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே பிறந்த மொழி தமிழ். அம்மொழியின் முதல் நூல் தொல்காப்பியம். பிராந்தியம், சாதி, மத எல்லைகளைத் தாண்டி மெய் அழகினை வெளிப்படுத்தும் இனிய மொழியாகத் தமிழ் விளங்குகிறது. தமிழ் இலக்கியம் உலகின் விலைமதிப்பற்ற கலாச்சாரச் செல்வங்களுள் ஒன்று.
திருவள்ளுவரும் கன்பூசியஸும்
சீனாவின் தத்துவச் சிந்தனையாளரான கன்பூசியஸின் சிந்தனைத் தொகுப்பு என்னும் நூலும் திருக்குறளும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. இருபெரும் அறிஞர்களும் எளிய மக்களின் தார்மீக நடத்தையில் அக்கறை கொண்டு நல்லொழுக்கத்தைப் போதித்துள்ளதோடு, பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளனர்.
தென்னிந்தியச் சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தின் செழுமையையும் புரிந்துகொள்ள தமிழ் இலக்கியம் எனக்கு ஒரு சாளரமாக உதவியது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் மூலம் சேர, சோழ, பாண்டிய நாடுகள் குறித்து அறிந்துகொண்டேன். பாரதியாரின் கவிதையைப் படித்தபோது அதில் உள்ள பக்தி எண்ணங்களும் தேசியவாதமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
சிலைகளில் தென்படும் ஒற்றுமை
பண்டைக்காலம் தொட்டுத் தற்போது வரை ஏராளமான தமிழ்க் கலைகள் உலகெங்கிலும் உள்ள அறிஞர்களின் கவனத்திற்கு உரிய மணிக்கற்களாக விளங்கிவருகின்றன. தமிழர்களின் படைப்பாற்றல் வெண்கலச் சிற்பக் கலையில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. சோழர் கால நடராசரின் வெண்கலச் சிலை தென்னிந்திய இந்து சின்னக் கலையின் உச்சம். இது ஒரு நிலையான சிலை என்றாலும், வலுவான இயக்க உணர்வுடன் ஒரு தாள உருவத்தையும் அளிக்கிறது.
உயிர்ப்புடன் கூடிய நடராசரின் வெண்கலச் சிலையைப் பார்க்கும்போதெல்லாம், எனது சொந்த ஊரான தென்மேற்கு சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘மனிதத் தலையுடன் கூடிய வெண்கலப் பறவை’ என்கிற சிலை அடிக்கடி என் நினைவுக்கு வரும். நடராசர் சிலையைப் போலவே, இது பண்டைய ஷு கலாச்சாரத்தின் முக்கிய தெய்வமான ஜுவான்சூ உடன் தொடர்புடைய ஒரு சிலை. இந்த இரண்டு பழம்பெரும் வெண்கலச் சிலைகள் இரண்டு பழங்கால நாகரிகங்களின் சிறப்பைக் காட்டுகின்றன.
மெய்சிலிர்க்க வைக்கும் நாட்டியம்
பரத நாட்டியத்தின் வழி தமிழர்களின் வெளிப்படுத்தும் மகத்தான சக்தியை நானும் உணர்ந்தேன். பரத நாட்டியத்தைப் பார்க்கும்போது நடனக் கலைஞர்கள் தங்கள் கைகளாலேயே பேசுகிறார்களோ என எனக்குத் தோன்றும். நடனக் கலைஞர்கள் தங்களின் உடல் மொழி மூலம் வெளிப்படுத்தும் தாளத்தின் அழகையும் உணர்வுகளின் ஓட்டத்தையும் என்னால் இன்னும் உணர முடியும். தமிழ்க் கோவில்களின் கட்டிடக்கலையைப் பார்த்து ரசிக்கும்போது, நான் எப்போதும் தமிழ் மக்களின் கற்பனையை, அதன் வெளிப்பாட்டின் செழுமையை உணர்ந்து அதிலிருந்து விவரிக்க முடியாத அழகியல் இன்பத்தைப் பெறுகிறேன்.
அனைவரும் சமம்
விருந்தோம்பல் பண்பைப் பெரிதும் போற்றுபவர்களாகத் தமிழர்கள் இருந்துவருகின்றனர். எப்போதும் அனைவரையும் மரியாதையுடன் சமமாக நடத்தியுள்ளனர். ராமானுசர் போன்ற துறவிகள் தாழ்த்தப்பட்ட மக்களைத் தங்கள் சீடர்களாக ஏற்றுக்கொண்டது உணர்த்தும் சேதி இது. கடந்த மூன்றாண்டுகளாகத் தமிழ் படித்ததன் மூலம் நாம் தெரிந்துகொண்ட தமிழ் மக்களின் விருந்தோம்பல், அவர்களின் கலைத்திறன், வளமான கற்பனை ஆகியவற்றால் ஒரு மனிதராக நானும் செம்மையடைந்து இருக்கிறேன். தமிழ் மக்களுடனான தொடர்பு என் வாழ்வுக்குப் புது அர்த்தம் அளித்திருக்கிறது.
கட்டுரையாளர்: ஜின் யூ (Qin Yu),
தமிழ்மொழிக் கல்வி இளங்கலை மாணவர்.
பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்.