ஆறாம் அறிவு

நோய்த்தொற்று அறிவியல்: எப்படிப் பாதிக்கிறது கரோனா?

செய்திப்பிரிவு

முகமது ஹுசைன்

ஆறு வகையான கரோனா வைரஸ்கள் மனிதர்களைப் பாதிக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது. சிலவற்றால், பொதுவான சளித் தொந்தரவு ஏற்படுகிறது, இரண்டு வகை வைரஸ்கள் சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இப்போது வேகமாகப் பரவிவரும் கோவிட்-19, கரோனா குடும்பத்தின் ஏழாம் வைரஸ்.

1. சுற்றிலும் கூர்முனைகள்

கிரீடம் போன்ற கூர்முனைகள், இதன் மேற்பரப்பிலிருந்து வெளியேறுவதால், இதற்கு கரோனா என்று பெயரிடப்பட்டது.கொழுப்பு எண்ணெய் மூலக்கூறுகளான குமிழியால், இந்த வைரஸ் சூழப்பட்டுள்ளது. சோப்புடன் தொடர்பு ஏற்படும்போது, கொழுப்புக் குமிழிலிருந்து இந்த வைரஸ் தனியே உதிர்ந்துவிடும்.

2. பாதிக்கப்படக்கூடிய செல்லுக்குள் நுழைதல்

மூக்கு, வாய், கண்கள் ஆகியவற்றின் வழியாகவே இந்த வைரஸ் மனிதர்களின் உடலினுள் நுழைந்து, காற்றுப்பாதைகளில் உள்ள ACE2 எனப்படும் புரதத்தை உருவாக்கும் செல்களுடன் தன்னை இணைத்துக்கொள்கிறது. இந்த வைரஸ், வௌவால்களிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. அங்கும் இந்த ACE2-ஐஒத்த புரதத்துடன் அது தன்னை இணைத்திருக்கலாம்.

3. ஆர்.என்.ஏவை வெளியிடும் கரோனா

கொழுப்பு எண்ணெய் மூலக்கூறுகளான குமிழியைச் செல்லின் சவ்வுடன் இணைப்பதன் மூலம் இந்த வைரஸ் நமது உடலில் உள்ள செல்லைப் பாதிக்கிறது. செல்லுக்குள் நுழைந்ததும், ஆர்.என்.ஏ. எனப்படும் மரபணுப் பொருளின் துணுக்கை கரோனா வைரஸ் வெளியிடுகிறது.

4. களவாடப்படும் செல்கள்

நம்முடைய மரபுத்தொகை (Genome), 30 லட்சத்துக்கும் அதிகமான மரபணு எழுத்துக்களைக் கொண்டது. ஆனால், கரோனா வைரஸின் மரபுத்தொகையோ 30,000-க்கும்குறைவான மரபணு எழுத்துக்களையே கொண்டுள்ளது. நமது உடலின் பாதிக்கப்பட்ட செல், இந்த வைரஸின் ஆர்.என்.ஏ.வைப் படித்து, புரதங்களைத் தயாரிக்கத் தொடங்குகிறது. இந்தப் புரதம், நோயெதிர்ப்பு மண்டலத்தின் கண்களில் மண்ணைத் தூவி, வைரஸின் புதிய நகல்களை ஒன்றுதிரட்ட உதவுகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotic) பாக்டீரியாவை மட்டுமே கொல்லும். அவை வைரஸ்களுக்கு எந்த இடையூறையும் ஏற்படுத்தாது. வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படாது. இந்த வைரஸ் புரதங்களுக்கு இடையூறு விளைவித்து, நோய்த்தொற்றை நிறுத்தக்கூடிய வைரஸ் தடுப்பு மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது பரிசோதித்துவருகின்றனர்.

5. புரதங்களை உருவாக்கும் வைரஸ்

நோய்த்தொற்று வீரியமடையும்போது, அதன் செல்கள், புதிய கூர்முனைகளையும் புரதங்களையும் வெளியேற்றத் தொடங்குகின்றன. இவை கரோனா வைரஸின் கூடுதல் நகல்களை வேகமாக உருவாக்குகின்றன.

6. ஒன்று திரட்டப்படும் நகல்கள்

வைரஸின் புதிய நகல்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, செல்லின் வெளி விளிம்புகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

7. பரவும் தொற்று

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு செல்லும் இறப்பதற்கு முன்பாக சீர்குலைந்து, வைரஸின் லட்சக்கணக்கான நகல்களை வெளியேற்ற முடியும். இந்த வைரஸ்கள் அருகிலுள்ள செல்களைப் பாதிக்கலாம். அல்லது நுரையீரலிலிருந்து தப்பித்துக் காற்றுப் பாதை வழி வெளியேறும் நீர்த்துளிகள் மூலம் பரவலாம்.

8. நோயெதிர்ப்பு அமைப்பின் எதிர்வினை

இந்த வைரஸை அழிக்க மனிதர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு போராடுவதால், பெரும்பாலான கோவிட்-19 நோய்த்தொற்றுகள் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. தாக்குதல் தீவிரமடையும்போது, நோயெதிர்ப்பு அமைப்பு மிகையாக எதிர்வினையாற்றி, நுரையீரல் செல்களையே தாக்கத் தொடங்குகின்றன. சளியாலும், இறக்கும் செல்களாலும் நுரையீரலில் அடைப்பு ஏற்படுவதால், சுவாசிப்பது கடினமாகிறது. ஒரு சிறிய சதவீத நோய்த்தொற்றுகள், கடும் சுவாசக் குறைபாட்டை (acute respiratory distress syndrome) ஏற்படுத்தி, மரணத்துக்கு வழிவகுக்கின்றன.

9. உடலை விட்டு வெளியேறுதல்

இருமும்போதும் தும்மும்போதும், வைரஸ் நிறைந்த நீர்த்துளிகள் அருகிலுள்ள மனிதர்கள் மீதும், பொருட்கள் மீதும் படலாம். பொருட்களின் மேற்பரப்பில் படிந்திருக்கும் இந்த வைரஸ், பல மணி முதல் பல நாட்கள்வரை உயிருடன் இருக்கும். முகக்கவசத்தை அணிவதன் மூலம் மட்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் இந்த வைரஸ் பரவுவதைத் தவிர்க்க முடியும். வைரஸால் பாதிக்கப்படாதவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. வைரஸ் தாக்குதல் அடைந்தவர்களும் அவர்களைக் கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்களும் முகமூடி அணிய வேண்டியது அவசியம்.

10. சாத்தியமான தடுப்பூசி

வருங்காலத்தில் உருவாக்கப்படும் தடுப்பூசிகள், SARS-CoV-2 வைரஸைக் குறிவைக்கும் ஆன்டிபாடிகளை உற்பத்திசெய்யவும் மனித செல்களைப் பாதிக்காமல் தடுக்கவும் உதவும். ஃபுளு காய்ச்சலுக்குப் போடப்படும் தடுப்பூசியும் இவ்வாறே செயல்படுகிறது. ஆனால், ஃபுளு காய்ச்சல் தடுப்பூசியிலிருந்து உருவாகும் ஆன்டிபாடிகள் கரோனா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாக்காது.

நன்றி: தி நியூ யார்க் டைம்ஸ்

SCROLL FOR NEXT