ஆறாம் அறிவு

அறிவியல் அலமாரி - காட்சிவழி கற்கலாம்: அனைவருக்கும் கல்வி

செய்திப்பிரிவு

கல்வியை அனைவருக்கும் இலவசமாக கொண்டுசேர்க்கும் நோக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் சல்மான் கான் தொடங்கிய யூடியூப் அலைவரிசை ‘கான் அகாடெமி’. 2006-ல் தொடங்கப்பட்ட இது, கல்விக்கான தன்னார்வ அமைப்பாக தற்போது செயல்படுகிறது.

கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல், வரலாறு, பொருளாதாரம், நிதியியல், இலக்கணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த அலைவரிசையில் காணொலிகள் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர்களுக்கும் உதவக்கூடிய காணொலிகள் இதில் உண்டு. இந்த அலை வரிசையின் ஒரு பகுதியாக ‘கான் அகாடெமி இந்தியா’ என்ற சிறப்பு அலைவரிசை இந்திய மாணவர்களுக்காகச் செயல்படுகிறது.

- கனி

அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/KhanIndia

நுட்பத் தீர்வு: பேசியே தட்டச்சலாம்!

மொபைலில் தமிழில் பேசி தட்டச்சும் வசதி உள்ளது. முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஜிபோர்டு செயலியை செல்பேசியில் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர், செல்பேசியின் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள அடிஷனல் செட்டிங்ஸ் பிரிவுக்குச் சென்று language & input-ஐத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் ஜிபோர்டுக்குச் செல்லுங்கள். அதன் செட்டிங்கில் languages என்பதில் சென்று ஆங்கிலத்துடன் தமிழ் (இந்தியா) என்னும் மொழியையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள்ளுங்கள்.

அதிலேயே கீழே voice typing என்னும் பிரிவுக்குச் சென்று அதில் ஆங்கிலம் இருந்தால் அதைத் தவிர்த்துவிட்டு, தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசி தமிழில் தட்டச்சலாம். தமிழில் பேசும் முன்பு microphone அமைப்பை ஆன் செய்துகொள்ள மறக்காதீர்கள்.

- ரிஷி

செயலி புதிது: Calm - Meditate, Sleep, Relax

காலைத் தூக்கத்திலிருந்து எழுந்ததும், இரவு தூங்கச் செல்லும் முன்பும் கைபேசியைப் பார்ப்பதை நம்மில் பெரும்பாலோர் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறோம். இரண்டுமே கண்களுக்கு கேடு என்றாலும், நம் வாழ்க்கை முறை கைபேசியை மையப்படுத்தியே அமைந்துவிட்டது. இந்நிலையில் இரவு நேரகைபேசிப் பயன்பாட்டை பயனுள்ளதாக மாற்றுவதற்கு Calm செயலி உதவுகிறது.

அன்றைய பணி இறுக்கம், அமைதி இன்மை, மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து கதை சொல்லல், மூச்சுப் பயிற்சி, மனதை இலகுவாக்கும் இசை ஆகியவற்றோடு நம்மைத் தூங்கச் செய்ய வழிசெய்கிறது இந்தச் செயலி. தொடக்க நிலையில் உள்ளோருக்கும் தியானம் கற்றுக் கொடுக்கும் இச்செயலியை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். http://bit.ly/AppCalm

- அபி

SCROLL FOR NEXT