எதிர்காலம், விண்வெளித் தேடல் உள்ளிட்ட தலைப்புகளில் சுவாரசியமான அறிவியல் காணொலிகளை ‘சயின்ஸ் அண்ட் பியூச்சரிசம் வித் ஐசக் ஆர்தர்’ (SFIA) என்ற யூடியூப் அலைவரிசை வெளியிட்டுவருகிறது. 2014-லிருந்து இயங்கிவரும் இந்த அலைவரிசையை அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் தொடர்பியலாளரான ஐசக் ஆர்தர் நிர்வகித்துவருகிறார். விண்வெளிக் குடியேற்றம், விண்மீன் பயணம் ஆகியவை குறித்து விரிவாக அலசும் காணொலிகளைக் கொண்டுள்ள இந்த அலைவரிசையை, அறிவியல் புனைவில் விருப்பமுள்ளவர்கள் பின்தொடரலாம்.
அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/IsaacAruthur
- கனி
நுட்பத் தீர்வு: பாப் அப் விளம்பரத்தைத் தடுக்கலாம்
கணினியில் கூகுள் குரோம் பிரௌசரைப் பயன்படுத்தும்போது, வலது மூலையின் கீழே பாப் அப் விளம்பரம் அடிக்கடி தலைகாட்டித் தொல்லை தருகிறதா? அதைத் தடுக்க கூகுள் பிரௌசரின் செட்டிங்கில் சென்று Advanced Settingsஐச் சொடுக்குங்கள்.
வரும் பக்கத்தில் Privacy & Security என்னும் தலைப்பின் கீழ் site setting இருக்கும். அதைச் சொடுக்கினால், வரும் பக்கத்தில் notifications என்பதைத் தேர்ந்தெடுத்துச் செல்லுங்கள். இப்போது தென்படும் பக்கத்தில் நோட்டிபிகேஷனை அணைத்துவிட்டால் போதும். இனி, பாப் அப் விளம்பரங்கள் தொல்லை கொடுக்காது.
- ரிஷி
செயலி புதிது: LastPass
கணினியில் இருந்து வங்கிப்பரிவர்த்தனைகள் வரை இணையச் செயல்பாடுகள் அனைத்துக்கும் லாகின் ஐடி, கடவுச்சொல் தேவைப்படுகிறது. பல கடவுச்சொற்களை நினைவு வைத்துக் கொள்ள இந்தச் செயலி பயன்படுகிறது.
கடவுச்சொற்களை மாற்ற வேண்டிவரும்போது, மற்றவர்களால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியாத வகையில் பரிந்துரைகளை வழங்குவது இந்தச் செயலியின் தனிச் சிறப்பு.
அனைத்துக் கடவுச்சொற்களையும் உங்களுக்காகக் குறித்து வைத்துக்கொள்ளும் இந்தச் செயலியில் நுழைவதற்கென்று ஒரு கடவுச் சொல் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதை நீங்கள் நினைவு வைத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
- நந்து