பிரசாத்
ஆளுமை
ஐன்ஸ்டீன் சி.பி. ஸ்நோ (தமிழாக்கம்: நா. தர்மராஜன்)
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகப் போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-ஐப் பற்றி புகழ்பெற்ற பிரிட்டிஷ் நாவலாசிரியர் சி.பி. ஸ்நோ, 1967 மார்ச் ‘காமெண்டரி மேகஸின்’ இதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இந்தச் சிறு நூல். அரசியல், வரலாறு, இலக்கியம், சமூகம் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை மொழிபெயர்த்தவரும் சோவியத் ரஷ்யாவின் ‘மாஸ்கோ பதிப்பக’ நூல்களைத் தமிழாக்கம் செய்த குழுவில் பங்காற்றியவருமான நா. தர்மராஜன் இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார். 1979-ல் அன்னம் பதிப்பக வெளியீடாக தமிழில் வெளியான இந்நூல், ஐன்ஸ்டைன் எழுதிய ‘சோஷலிசம் ஏன்?’ கட்டுரையோடு வாசல் வெளியீடாக இப்போது வெளியாகி இருக்கிறது.
வாசல், தொடர்புக்கு: 98421 02133
அறிவியல் அடிப்படை
பொழுதுபோக்கு இயற்பியல் (பாகம் 1)
யா. பெரல்மான் (மொழிபெயர்ப்பாளர்: சோ. வேங்கடசுப்பிரமணியன்)
கணிதம், இயங்கியல், வடிவவியல், வானியல் உள்ளிட்ட துறைகள் சார்ந்து முக்கியமான நூல்களை எழுதிய அறிவியல் எழுத்தாளர் யா. பெரல்மானின் புகழ்பெற்ற நூலான ‘பொழுதுபோக்கு இயற்பியல்’ 1913-ல் ரஷ்ய மொழியில் வெளியானது. இயற்பியலின் அடிப்படைகளை சுவாரசியமான எடுத்துக்காட்டுகளுடன் எளிமையான மொழியில் தெளிவான படங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த நூல் எண்பதுகளில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு தலைமுறையின் அறிவியல் தாகத்துக்குத் தீனி போட்டது. நீண்ட நாள் பதிப்பில் இல்லாமல் இருந்த இந்த நூல், பாரதி புத்தகாலய வெளியீடாக கடந்த ஆண்டு வெளியாகி இருக்கிறது. அறிவியலின் அடிப்படைகளை அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் நல்ல ஒரு வழிகாட்டி.
பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044 2433 2924
பொறியியல்
எஞ்சின்கள்: ஓர் எளிய அறிமுகம்
ஹாலாஸ்யன்
மனிதர்களின் வாழ்க்கைமுறையை இன்றைய நிலைக்கு மேம்படுத்தியதில் எஞ்சின்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சாலைகளில் ஓடும் வாகனங்கள்; தண்டவாளங்களில் செல்லும் ரயில்கள்; ஆகாயத்தில் செல்லும் விமானங்கள், செயற்கைக்கோள்கள் என பல்வேறு இடங்களில் எஞ்சின்கள்தான் அடிப்படைக் கட்டமைப்பாக இருக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எஞ்சின்களின் அறிவியலை எளிமையான படங்கள் மூலம் ஹாலாஸ்யன் இந்த நூலில் விளக்கியுள்ளார்.
யாவரும் பப்ளிஷர்ஸ், தொடர்புக்கு: 90424 61472
தொழில்நுட்பம்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
சைபர் சிம்மன்
‘மோஜோ’ என்று சுருக்கமாக வழங்கப்படும் மொபைல் ஜர்னலிசம் (செல்பேசி மூலம் இதழியல்) இன்றைக்கு இதழியல் உலகில் வேகமாக மேலெழுந்துவருகிறது. செல்பேசியை மட்டுமே கொண்டு செய்தி சேகரித்தல், நிகழ்வுகளைப் படம் பிடித்தல், எடிட் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்தும் ‘மோஜோ’ மூலம் சாத்தியம். உலகம் முழுவதும் உள்ள ஊடக நிறுவனங்கள் ‘மோஜோ’வுக்கு வேகமாக மாறிவருகின்றன. ‘மோஜோ’வின் போக்கையும், அதன் இதழியல் சாத்தியங்களையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது; ஆச்சரியம் கொள்ளச் செய்யும் உதாரணங்களுடன் ‘மோஜோ’ முன்னோடிகளையும் இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்துகிறது.
கிழக்கு பதிப்பகம், தொடர்புக்கு: 044 4200 9603
அறிவியல் புனைவு
அரூ அறிவியல் சிறுகதைகள் - 2019
கனவுருப்புனைவு (Science fiction & fantasy) சார்ந்த படைப்புகளை வெளியிடும் தமிழ் மின்னிதழ் ‘அரூ’. ‘அரூ என்பது ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். தெரிந்த வடிவங்களின் எல்லைகளுக்குள் பயணிப்பதன் ஊடாக அரூபத்தின் தரிசனத்துக்கான தேடல் இந்த அரூ’ என்ற அறிவிப்போடு காலாண்டிதழாக அக்டோபர் 2018 முதல் வெளிவருகிறது. சிறுகதைகள், குறுங்கதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், சித்திரக்கதை உள்ளிட்டவை சார்ந்த படைப்புகளை இந்த மின்னிதழ் வெளியிடுகிறது. கடந்த ஆண்டு நடத்திய அரூ நடத்திய அறிவியல் புனைவு போட்டியில் தேர்வான சிறுகதைகள் சமீபத்தில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ. 10000/- பரிசு வழங்கப்படும். வெற்றிபெறும் கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளும் அரூவின் ஏப்ரல் இதழில் வெளியாகும்.
மேலும் விவரங்களுக்கு: http://bit.ly/ArooStory
வம்சி பதிப்பகம், தொடர்புக்கு: 914175 238826