அறிவியல் நுணுக்கங்களை ஆழ்ந்து நோக்க விரும்புபவர்களுக்கு ‘டீப் லுக்’ (Deep Look) யூடியூப் அலைவரிசை ஒரு சிறந்த அறிவுப் பெட்டகமாகச் செயல்படுகிறது. அறிவியல் தலைப்புகளை எவ்வளவு நுண்ணிய பார்வையில் சென்று விளக்க முடியுமோ, அவ்வளவு நுண்ணிய பார்வையில் இந்த அலைவரிசை விளக்குகிறது.
‘மேக்ரோ’ ஒளிப்படக்கலை, நுண்ணோக்கி ஆகிய இரண்டையும் பயன்படுத்தி இயற்கை, அறிவியல் நுட்பங்களைச்சுவாரசியமான காட்சிகளுடன் இந்த அலைவரிசையின் காணொலிகள் விளக்குகின்றன. அறிவியலில் ஆழங்கால்பட நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி. பிரபல பி.பி.எஸ். டிஜிட்டல் ஸ்டுடியோஸ் இந்த அலைவரிசையை 2014-லிருந்து நிர்வகித்துவருகிறது.
- கனி
அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/PBSDLook
நுட்பத் தீர்வு: பாடல்போதும் காட்சி வேண்டாம்
ஒரு பாடலில் சில வரிகளை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக ஒலிக்கவிட விரும்புகிறீர்கள்; ஆனால், அந்தக் காட்சிகள் வேண்டாம் என நினைக்கிறீர்கள். என்ன செய்வீர்கள்? அதற்கொரு வழி இருக்கிறது. நீங்கள் விரும்பிய பாடலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு ஸ்டேட்டஸ் பக்கத்தின் வலப் புற மூலையில் தென்படும் ஐகான்களில் எடிட் ஐகானைத் தொட்டீர்கள் என்றால் கலர் குச்சி ஒன்று தென்படும்.
அதில் உங்களுக்குப் பிடித்த ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, வீடியோவை ஓரிரு நொடிகள் தொடர்ந்து தொட்டால் வீடியோ முழுவதும் அந்த நிறத்துக்கு மாறிவிடும். இப்போது பாடல் மட்டும் ஒலிக்கும், வீடியோ காட்சிகள் தெரியாது.
- ரிஷி
செயலி புதிது: Feedly Smarter News Reader
தகவல்கள், செய்திகள் என அனைத்தையும் இன்றைக்கு ஸ்மார்ட்போன்களிலேயே அறிந்துகொள்ளத் தொடங்கிவிட்டோம். உங்களுக்குப் பிடித்த அல்லது தேவையான பத்திரிகைகள், இணைய இதழ்கள், வலைப்பக்கங்கள், யூடியூப் அலைவரிசைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேகரித்து வைத்து, தேவைப்படும்போது எடுத்துப் படித்துக்கொள்ள ‘ஃபீட்லி’ உதவுகிறது.
நாமாகவே தேர்ந்தெடுக்கும் இணையதளங்கள், வலைப்பக்கங்கள் ஆகியவற்றை இதில் சேகரிப்பதோடு, குறிப்பிட்ட தலைப்பில் செய்திகளை, தகவல்களை இந்தச் செயலியியே பரிந்துரைக்கவும் செய்கிறது.
- நந்து