இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியவில்லை என்றால், விரட்டி விரட்டி பிடித்து போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாண்டா என்ற நகரில் ஹெல்மெட் அணிந்துகொண்டு வர வேண்டாம் என்று அரசு உயர் அதிகாரிகள் கெஞ்சும் காட்சி அரங்கேறியிருக்கிறது. ஹெல்மெட் அணிந்துகொண்டு வர வேண்டாம் என்று அதிகாரிகள் கெஞ்சியது, மின்சார வாரிய அலுவகத்துக்குள்!
பாண்டா நகர மின் வாரிய அலுவலக மேற்கூரை இப்ப விழுமோ எப்ப விழுமோ என்று தெரியாத அளவுக்கு ‘டஞ்சன்’ ஆகிவிட்டது. அதை ரிப்பேர் செய்யும்படி ஊழியர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டுவிட்டார்கள். ஆனால், அதிகாரிகளோ காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. கோரிக்கை விடுத்து ஓய்ந்துபோன ஊழியர்கள், மேற்கூரை இடிந்து விழுந்தால், தலைக்கு சேதாரம் ஆகிவிடும் என்று அஞ்சி அலுவலகத்துக்குள் ஹெல்மெட் அணிந்து வரத் தொடங்கினார்கள்.
காலை முதல் மாலைவரை அலுவலகத்துக்குள் ஹெல்மெட் அணிந்தபடியே வேலைகளை செய்ய தொடங்கினார்கள். அந்த அலுவலகத்துக்கு வந்த ஒருவர், இந்த விநோத காட்சியை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் உலவவிட்டார்.
விளைவு, அந்த ஒளிப்படம் கண்டபடி வைரல் ஆகிவிட்டது. இத்தனை நாளாக கண்டுகொள்ளாதவர்கள், ஒளிப்படம் வைரல் ஆனதால், பிரச்சினையைத் தீர்க்க ஓடோடி வந்துள்ளார்களாம்.
ஹெல்மெட் தலையை மட்டுமல்ல, கட்டிடத்தையும் காத்திருக்கிறது!