சைபர் சிம்மன்
இணையம் ஜனநாயகமயமானது; மையமில்லாத தன்மையும் ஊடாடும் தன்மையும் (interactive) அதன் ஆதார அம்சங்கள். உரையாடும் தன்மையைக் கொண்டிருப்பதுடன், சமூக உணர்வை அளிப்பதும் இணையத்தின் தனித்தன்மையாக இருக்கிறது. இந்த அம்சங்களை முழுவீச்சில் பயன்படுத்தும் வாய்ப்பை அளிக்கும் இணையதளங்கள் புத்தாயிரத்துக்குப் பிறகு பரவலாகத் தொடங்கின.
இந்த இணையதளங்கள் ‘இரண்டாம் வலை’ அல்லது ‘வெப் 2.0’ என்று வழங்கப்படுகின்றன. வெப் 2.0-வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை இல்லை என்றாலும், பங்கேற்புத் தன்மை இதன் முதன்மை அம்சம். இணையவாசிகளுக்குச் செழுமையான அனுபவத்தைத் தருவதாக இது அமைந்திருந்ததுடன், பயனர்களே உள்ளடக்கத்தை உருவாக்கிக்கொள்ளும், அவற்றைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் வசதியை இது வழங்கியது.
‘டாட்காம்’ என்று அழைக்கப்பட்ட இணைய நிறுவனங்களின் வீழ்ச்சிக்குப் பின், இணையத்தில் உண்டான புதிய எழுச்சியைக் குறிக்கும் வகையில் வெப் 2.0 எனும் பதம் பயன்படுத்தப்பட்டது. டிம் ஓ’ரெய்லி என்பவர் இந்தப் பதமும் கருத்தாக்கமும் பிரபலமாகக் காரணமாக இருந்தார்.
புதுப்பிக்கப்பட்ட தகவல்
வெப் 2.0 விவாதத்துக்குரியது என்றாலும், அது சுட்டிக்காட்டிய போக்கும், அதன் ஆதாரத் தளங்களும் இணையத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றன. இணையம் பரவலாகத் தொடங்கிய காலகட்டத்தில், அதன் ஜனநாயகத் தன்மையை உணர்த்தும் வகையில் இந்தத் தளங்களும், புதிய இணைய சேவைகளும் அமைந்திருந்தன.
சமூக வலைப்பின்னல் தளங்கள் முக்கிய அங்கங்களாகவும் வலைப்பதிவு வசதி இதன் ஆதார அம்சமாகவும் அமைந்தன.
இணையதளங்கள் புதுப்பிக்கப்படும் தகவலைப் பயனாளிகள் தங்கள் கணினி அல்லது கருவியிலேயே நேரடியாகப் பெற ‘ரியலி சிம்பிள் சிண்டிகேஷன்’ எனும் ஆர்.எஸ்.எஸ். வசதி வழிசெய்தது. இதை அடிப்படையாகக்கொண்டு ஆடியோ கோப்புகளைத் தரவிறக்கம் செய்து நிகழ்ச்சிகளைக் கேட்க வழிசெய்த புதிய வானொலியான ‘பாட்காஸ்டிங்’ வசதி உள்ளிட்ட சேவைகள் இதன் முக்கிய அங்கங்களாக அமைந்தன.
வாசகர் செய்தித் தேர்வு
இணையதள வரலாறு முதல் வலை மற்றும் இரண்டாம் வலை என்று இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதல் வலைத்தளங்கள், நிலையான உள்ளடக்கத்தைக் கொண்டவை; இரண்டாம் வலை, மாறிக்கொண்டே இருக்கும் துடிப்பான தன்மை கொண்டவை. பயனாளிகளை நுகர்வோராக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களாகவும் இவை மாற்றின.
இணையத்தை இப்படி வேறுபடுத்துவதில் வல்லுநர்கள் பலருக்கு உடன்பாடில்லை. ஆனால், இரண்டாம் வலைதான் இணையத்தைப் பொதுமக்கள் கைகளில் கொண்டுசேர்த்தது; வலை என்பது ஒரு மேடையாக அமைந்து, பயனாளிகளுக்கான படைப்புக்களமாக மாறியது.
இவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக, 2004-ல் அறிமுகமான டிக் (Digg) என்ற தளத்தைக் குறிப்பிடலாம். இணையவாசிகள், இணையத்தில் தாங்கள் கண்டறியும் செய்திகளையும் தகவல்களையும் இணைப்புகளாகப் பகிர்ந்துகொள்ள வழிசெய்த டிக், புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் விதத்தையே மாற்றி அமைத்தது.
அதுவரை இதழாசிரியர்கள் கையில் இருந்த செய்தித் தேர்வை இந்தத் தளம் ஜனநாயகமயப்படுத்தி மக்களிடம் அளித்தது. 2005-ல் அறிமுகமான ரெட்டிட் (Reddit) தளமும் இதே வகையில் அமைந்து, ‘இணையத்தின் முகப்புப் பக்கம்’ என்று இணையவாசிகளால் கொண்டாடப்படுகிறது. ரகசியம் என்று கருதப்பட்ட செய்திகளை அம்பலமாக்க வழிசெய்த ‘விக்கிலீக்ஸ்’ தளத்தையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் ராஜ்ஜியம்
இந்தத் தளங்களுக்கு முன்பாகவே டெலிஷியஸ் (del.icio.us) தளம் இணைய முகவரிகளைப் பகிர்ந்து கொள்ளுதல், கண்டறிதல் ஆகியவற்றைச் சமூகமயமாக்கியது. இதனிடையே வலைப்பதிவுகளுக்கு என்று தனி தேடியந்திரமாக ‘டெக்னோரெட்டி’ உருவாகி வரவேற்பைப் பெற்றது.
இன்னொரு பக்கம், இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டரும், இணையம் மூலம் சிறுதொகை கொடுத்து கொடைத் தன்மையை எல்லோருக்கும் சாத்தியமாக்கிய கிவா-வும் (Kiva) அறிமுகமாயின. இவை எல்லாம் சேர்ந்து, இணையம் எங்கள் ராஜ்ஜியம் என்று இணையவாசிகளைக் கம்பீரமாகச் சொல்ல வைத்துள்ளன.
(நிறைந்தது)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
narasimhan@gmail.com