காட்சிவழி கற்கலாம்
பிரபஞ்சம் எப்படிப்பட்டது?
கொலம்பியா பல்கலைக் கழகத்தின் வானியல் துறைப் பேராசிரியர் டேவிட் கிப்பிங் நடத்தும் யூடியூப் அலைவரிசை ‘கூல் வேர்ல்ட்ஸ்’. 2016-ல் தொடங்கப்பட்ட இந்த அலைவரிசையில் வானியல், புறக்கோள்கள், வான்-பொறியியல், வேற்றுகிரக வாழ்க்கை, விண்மீனிடைப் பயணம் குறித்த கருத்தாக்கங்களை 30 நிமிட வீடியோக்களில் டேவிட் கிப்பிங் விவரிக்கிறார்.
‘பூமியைப் போன்று எத்தனைக் கோள்கள் இருக்கின்றன?’, ‘பிரபஞ்சத்தின் முடிவுவரை ஒரு பயணம்’, ‘செயற்கை ஈர்ப்புவிசை’, ‘நட்சத்திரங்களின் வாழ்வும் மரணமும்’ உள்ளிட்ட சுவாரசியமான தலைப்புகள் இந்த அலைவரிசையில் பார்க்கக் கிடைக்கின்றன. கூல் வேர்ல்ட்ஸ்: http://bit.ly/CoolWorlds
- கனி
நுட்பத் தீர்வு
கைப்பேசி எங்கே?
சைலன்ட்டில் உள்ள ஆண்ட்ராய்ட் கைபேசியை எங்காவது மறந்து வைத்துவிட்டால் கண்டடைய ஒரு எளிய வழி. கணினியை இயக்குங்கள். உங்களுடைய ஜிமெயில் கணக்கைத் திறங்கள். வலது மூலையில் நடுவில் உள்ள ஐகான், கூகுள் ஆப்ஸ் எனக் காட்டும். அதைச் சொடுக்குங்கள், வரும் சிறிய ஜன்னலில் அக்கவுண்ட் என்ற ஐகானைச் சொடுக்குங்கள். இப்போது, இடது ஓரத்தில் வரிசையாக உள்ள பிரிவுகளில் செக்யூரிட்டி என்பதைச் சொடுக்குங்கள்.
வரும் விண்டோவில் தேடினால் ‘ஃபைண்ட் யுவர் டிவைஸ்’ என்னும் வாக்கியம் இடம்பெற்றிருக்கும். இதில் மவுஸை வைத்துச் சொடுக்குங்கள். மீண்டும் ஒருமுறை லாக் இன் பக்கம் வரும். லாக் இன் செய்து உள்ளே சென்றால் உங்கள் கைபேசியின் பெயருடன் அருகே ரிங் எனும் கட்டளை தென்படும். அதில் மவுஸை வைத்துச் சொடுக்குங்கள். இப்போது உங்கள் கைபேசி ஒலிக்கும்.
- ரிஷி
செயலி புதிது
அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே இடத்தில்
அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே இடத்தில் அலுவலகப் பயன்பாடு, தனிப்பட்ட பயன்பாடு ஆகியவை சார்ந்து குறைந்தபட்சம் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துகிறோம். புளூ மெயில் (Email Blue Mail – Calendar and Tasks) என்ற இலவச செயலி பல மின்னஞ்சல் முகவரிகளை ஒரே இடத்தில் பார்ப்பதற்கு வழிசெய்கிறது.
இந்தச் செயலியைத் தரவிறக்கி அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் இதில் பதிவுசெய்த பிறகு, எந்த முகவரிக்கு மின்னஞ்சல் வந்தாலும் உடனடியாகத் தெரியப்படுத்தும்.
குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல் குறித்த தகவல் வேண்டாம் என்றால், அதைத் தடுத்து வைக்கும் வசதிகளும் உண்டு. குழுக்களுக்கு மின்னஞ்சல் அனுப்புதல், சமூக வலைத்தள நண்பர்களிடம் மின்னஞ்சல்களைப் பகிர்ந்துகொள்தல் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
- நந்து