ஆனந்த ஜோதி

ஹெல்மெட் அணிந்த நவீன ‘சாண்டா கிளாஸ்’

சி.பிரதாப்

கிறிஸ்துமஸ் தாத்தா புகைக்கூண்டு (Chimney) வழியாக வருவார், சாக்லேட் தருவார் என்று குழந்தைகள் காத்திருந்த காலம் மலையேறிவிட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சாண்டா கிளாஸ் பனிச்சறுக்கு வாகனத்தில் வருவதில்லை.

அவர் கையில் ஜிபிஎஸ் வைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கிறார். ஆம், இன்றைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் திரைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான கதாநாயகர்கள், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களும், ஆன்லைன் கூரியர் ஊழியர்களும்தான்.

தூரம் குறைக்கும் தொழில்நுட்பம்: வேலை நிமித்தமாக வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் பிள்ளைகளால், தங்கள் பெற்றோருடன் பண்டிகையைக் கொண்டாட முடிவதில்லை. ஆனால், அவர்கள் ஆர்டர் செய்யும் 'பிளம் கேக்'கையும், புத்தாடைகளையும் சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்ப்பது இந்த நவீன சாண்டாக்கள்தான். இணையம் வழியாக வெறும் பொருட்கள் பரிமாறப்படவில்லை. அன்பும், நினைவுகளும்தான் பார்சல்களாக பயணிக்கின்றன.

கதவைத் தட்டும் மகிழ்ச்சி: நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, போக்குவரத்து நெரிசலைத் தாண்டி, சரியான நேரத்துக்கு கேக்கை கொண்டு வந்து சேர்க்கும் டெலிவரி ஊழியரின் முகத்தில் தெரிவது, கடமை உணர்வு மட்டுமல்ல. பிறர் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் மனிதாபிமானமும் கூட.

இந்த ஊழியர்களிடம், பார்சலை வாங்கும்போது ஒரு புன்னகையுடன் ‘ஹேப்பி கிறிஸ்துமஸ்’ என்று சொல்லிப் பாருங்கள். அல்லது அவர்களுக்குச் சிறிய தொகையை அன்பளிப்பாகக் கொடுங்கள். அதுவே இந்த கிறிஸ்துமஸில் நாம் அவர்களுக்கு தரும் மிகச் சிறந்த பரிசாகும்.

உறவுகளை இணைக்கும் பிளம் கேக்: கிறிஸ்துமஸ் பண்டிகையின் வருகையை காலண்டர் தேதிகளை விட, சமையலறையில் இருந்து வரும் அந்த பிரத்யேக நறுமணமே முதலில் அறிவித்துவிடுகிறது. டிசம்பர் பிறந்துவிட்டாலே, பல வீடுகளில் 'பேக்கிங்'(Baking) கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது. உண்மையான கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு என்பது பண்டிகை நாளுக்கு பல வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிடும் ஒரு கலை.

முந்திரி, திராட்சை, டூட்டி ப்ரூட்டி, செர்ரி போன்ற உலர் பழங்களை தேன் அல்லது திராட்சை ரசத்தில் ஊறவைத்து, பக்குவமாகத் தயாரிக்கும் இந்த முறை ஒரு பாரம்பரியச் சடங்கு போன்றது. வீட்டின் பெரியவர்கள் பக்குவம் சொல்ல, இளையவர்கள் மாவு பிசைய, அந்த இடமே கலகலப்பாக மாறிவிடும். ஓவனில் (Oven) கேக் தயாராகும்போது எழும் அந்த வாசனை, தெருவையே திரும்பிப் பார்க்க வைக்கும் வசீகரம் கொண்டது.

தித்திக்கும் உறவுகள்: கேக் செய்வது ஒரு மகிழ்ச்சி எனில், அதைத் துண்டு, துண்டுகளாக போட்டு உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் விநியோகிப்பது அதைவிடப் பெரிய கொண்டாட்டம். சாதி, மத பேதங்களைக் கடந்து, பக்கத்து வீட்டுக்காரர் தட்டில் ஒரு துண்டு பிளம் கேக்கையும், முறுக்கையும் வைத்து ‘ஹேப்பி கிறிஸ்துமஸ்’ என்று பரிமாறிக் கொள்ளும்போது, அங்கே வெறும் இனிப்பு மட்டும் பகிரப்படுவதில்லை; சிநேகிதமும் புதுப்பிக்கப்படுகிறது.

செல்போனில் வாழ்த்து சொல்வதைவிட நேரில் சென்று ஒரு துண்டு கேக்கை ஊட்டிவிடுவதில் தான் பண்டிகையின் முழுமையான அர்த்தம் அடங்கியுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் பகிரப்படும் ஒவ்வொரு கேக் துண்டும் அன்பின் உயர் வடிவமாகும்.

SCROLL FOR NEXT