ஆனந்த ஜோதி

அல்லாஹ் ரக்கா ரஹ்மானுடன் சூஃபி இசை அனுபவம்!

முகம்மது ரியாஸ்

“இந்தக் கூட்டத்தைப் பார்த்து மனசு நிறைஞ்சிடுச்சு. சூஃபி இசை நிகழ்ச்சிக்கு ஐநூறு பேர் வந்தாலே அதிகம் என நினைச்சேன். ஆனா, இன்னைக்கு இவ்வளவு கூட்டம்” என்று ஏஆர் ரஹ்மான் சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.03.2023) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர். ரஹ்மானின் சூஃபி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரைத்துறையில் பணிச் சூழலில் பாதுகாப்பு இல்லாமல் நெருக்கடியை எதிர்கொள்ளும் கடைநிலை லைட்மேன் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

அன்பை மையப்படுத்திய இசை: நிகழ்ச்சியின் தலைப்பு ‘விங்க்ஸ் ஆஃப் லவ்'. சினிமா பாடல்களுக்கான நிகழ்ச்சி அல்ல. முற்றிலும் சூஃபி பாடல்களுக்கான நிகழ்ச்சி. இது சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்தும் முதல் சூஃபி இசை நிகழ்ச்சி. அரங்கில் நுழைகிறேன். ஆயிரக்கணக்கான மக்கள். இருக்கைகள் நிரம்பி பலர் நின்று கொண்டிருந்தனர்.

தலைப்பாகை அணிந்து சூஃபி இசைக் கலைஞர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். வெள்ளைச் சட்டையும் வெள்ளைக் கைலியும் அணிந்த இளைஞர்கள், ஊது கட்டையுடன் அரங்கைச் சுற்றிலும் புகை பரப்பினர். ஊதுக் கட்டையின் நறுமணம் ஒட்டுமொத்த அரங்கையே சூஃபி பயணத்துக்கு தயார்படுத்தியது.

யாரும் எதிர்பாராத கணம் அல்லா ரக்கா ரஹ்மான் மேடையில் தோன்றினார். குர்தாவும் சூஃபிகளின் அடையாளங்களில் ஒன்றான வெண்ணிற தலைப்பாகையும் அணிந்திருந்தார்.பணிவும் உளத்தூய்மையும் சூஃபித்துவத்தின் மிக அடிப்படையான பண்புகள். ஏ.ஆர். ரஹ்மானிடம் எப்போதும் இந்தப் பண்புகளைப் பார்க்க முடியும். அன்றைய தினம் அது ரஹ்மானிடம் பேரொளியாக வெளிப்பட்டது.

திரைத்துறை இசையைத் தாண்டி, சமகாலத்தின் உலகின் முதன்மையான சூஃபி இசைக்கலைஞர்களில் ஒருவராக ஏ.ஆர். ரஹ்மான் அறியப்படுகிறார். ‘பிஸா’ படத்தில் ‘பியா ஹாஜி அலி' (Piya Haji Al), ‘ஜோதா அக்பர்’ படத்தில் ‘குவாஜா மேரே குவாஜா' (Khwaja Mere Khwaja), ‘டெல்லி 6' படத்தின் ‘அர்ஷியான்' (Arziyan), ‘ராக் ஸ்டார்' படத்தில் ‘குன் பயா குன்' (Kun Faya Kun) ஆகியவை சூஃபி இசையில் ஏ.ஆர். ரஹ்மான் உச்சம் தொட்ட பாடல்கள்.

இந்தப் பாடல்களும், அவர் தனி ஆல்பமாக வெளியிட்ட ‘ஸிகிர்’ (Zikr) உட்பட சில சூஃபிப் பாடல்களும் இந்நிகழ்ச்சியில் பாடப்பட்டன. புற உலகத்தை மறக்கச் செய்து, தனித்த இசை உலகுக்கு அந்தப் பாடல்கள் பார்வையாளர்களை அழைத்துச் சென்றன.

ஏஆர் ரஹ்மான் மற்றும் ஜாவித் அலியின் குரலும், அவர்கள் பின்னால் அமர்ந்திருந்த சூஃபி இசைக் கலைஞர்களின் சேர்ந்திசையும் சிவமணியின் டிரம்ஸிலிருந்து வெளிப்பட்ட தாளங்களும் மாபெரும் இசை அனுபவத்தை வழங்கின.

நினைவுகளை மீட்டிய இசை: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தந்த அந்த இசை, எனக்கு என் ஊர் நினைவைக் கொண்டுவந்தது. என்னுடைய சொந்த ஊரான கடையநல்லூர் சூஃபித் தன்மை நிறைந்த ஓர் ஊர். அங்கு பரசுராமபுரம் தெருவில் சிராஜும் முனீர் என்று ஒரு மதரஸா உண்டு.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மதரஸாவுக்கு குர்ஆன் பயிலவரும் சிறுவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அத்தனை பேருக்கும் பள்ளிவாசலில் இடம் போதாது என்பதால், அந்தத் தெருவில் உள்ள வீடுகளின் திண்ணைகளில் வைத்து குர்ஆன் சொல்லிக்கொடுக்கப்படும்.

காலையில் 6 மணிக்கெல்லாம், ஊரில் உள்ள பள்ளி வயது சிறுவர்கள் தலையில் கருப்பு வெள்ளை நிற தொப்பி அணிந்து மதரஸாவுக்கு குர்ஆன் பயில வந்துவிடுவார்கள்.

வீடுகளின் திண்ணைகள்தான் அவர்களுக்கான வகுப்பறை. குர்ஆன் நன்கு கற்றுக்கொண்ட முன்னாள் மாணவர்கள்தான் ஆசிரியர்கள். காலை நேரத்தில் அந்தத் தெருவில் ஒவ்வொரு வீட்டு திண்ணையிலிருந்தும் வெளிப்படும் சிறுவர்கள் குர்ஆன் ஓதும் ராகம், அந்தத் தெருவையே இசைத்தன்மை கொண்டதாக மாற்றும்.

பரோட்டா கடைகளில், காலை நேரத்தில் “இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன், ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன், இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன், எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்” என நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும்.

தர்கா செல்லும் வழக்கம் உடையவர்களின் வீடுகளில் வியாழக்கிழமை மாலை நேரங்களில் “யா ரப்பி ஸலாம் அலைக்கும்... யாரசூல் ஸலாம் அலைக்கும்...” என மவுலூத் ஓதும் ராகம் கேட்கும். பள்ளிவாசல்களிலிருந்து எழும் பாங்கு ஓசை; குழந்தைகளை உறங்க வைக்க பாடப்படும் “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என என் நினைவு அடுக்குகளில் புதைந்திருந்த கலாச்சாரக் கூறுகளை ரஹ்மானின் அன்றைய இசை உயிர்பெறச் செய்தது.

மதங்களைக் கடந்த இசை: சூஃபிப் பாடல்கள் இஸ்லாத்தை மையப்படுத்தியவை என்றாலும் அதன் ராகமும் இசைமையும் மதம் கடந்த ஆன்மிக அனுபவத்தை வழங்கக்கூடியது. அன்பின் தூய்மையை உணரச்செய்வது. அதனாலேயே, சூஃபிப் பாடல்கள் மதம், மொழி கடந்து கேட்கப்படுகிறது. அன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலானோர் முஸ்லிம் அல்லாதவர்கள்தான்.

ரஹ்மானுக்கும் அவரது தாய்க்கும் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கியவர் சூஃபி ஞானி பீர் கரிமுல்லா ஷா காதிரி. அந்த வயது முதிர்ந்த காதிரி வழியாகவே ரஹ்மானுக்கு சூஃபி இசை அறிமுகம் ஆகிறது.

காதிரி தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியில் கவ்வாலி வாசிப்பது வழக்கம். அதைக் கேட்கையில் ரஹ்மானின் ஆன்மாவில் இனம் புரியாத மாற்றம் நிகழ்கிறது. அந்த அனுபவத்தை “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அறிவியல்” என்று ரஹ்மான் குறிப்பிடுவதுண்டு.

“காதிரி சிறப்பான பாடகர் கிடையாது. ஆனால், அவர் தன் ஆர்மோனிய பெட்டியை எடுத்து கவ்வாலி வாசிக்கையில் அவரை சுற்றிச் பட்டாம்பூச்சிகள் பறப்பதையும் நறுமணம் கமழ்வதையும் ஒருவர் உணர முடியும்” என்பார் ரஹ்மான்.

இறைவனை உணர்வதற்கான பாதையாக பார்க்கப்படும் சூஃபித்துவத்தை தனக்கான வாழ்வியலாக தேர்ந்தெடுத்த ரஹ்மான், “இறைவன் முன்னால் என்னை ஒரு யாசகனாகவே உணர்கிறேன். சூஃபி வழியை நான் தேர்ந்தெடுத்தப் பிறகு என்னுடைய ஆசைகளிலிருந்தும் வெற்றிகளிலிருந்தும் ‘நான்’ என்ற உணர்வை பிரித்து வைக்க கற்றுக்கொண்டேன். அதன் வழியாகவே என் மீது குவியும் பாராட்டுகளிலிருந்தும் நான் விலகி இருக்கிறேன்” என்கிறார்.

சமத்துவத்தையும் சகோதரத்தையும் முன்னிறுத்தி மதம் கடந்த அன்பை பரப்பியது ஏ.ஆர்.ரஹ்மானின் அன்றைய சூஃபி இசை மேடை!

- riyas.ma@hindutamil.co.in

SCROLL FOR NEXT