ஆனந்த ஜோதி

திஸ்ரத்தில் மலர்ந்த `செண்டை அலங்காரி'!

வா.ரவிக்குமார்

`இந்தக் காலத்து இளைஞர்களிடம் பக்தி சிஞ்சிற்றும் இல்லை' என்று சதா குறைப்பட்டுக்கொள்ளும் மூத்த தலைமுறையினரையும், "பரவாயில்லையே சின்னப் பசங்க இந்தளவுக்கு பக்தியா பாடறாங்களே.." என்று மனம் திறந்து பாராட்ட வைத்தது அண்மையில் அல்கெமி ஸ்டுடியோவில் நடந்த `திஸ்ரம்' குழுவினரின் இசை நிகழ்ச்சி.

புதிய பாணியில் இசையமைத்து இவர்கள் பாடி யூடியூபில் வெளியிட்டிருக்கும் `ராம ராம' ஸ்லோகம் இந்தக் குழுவினரின் திறமைக்கு ஒரு சோறு பதம். அன்றைக்கு நாம் பார்த்த நிகழ்ச்சியிலோ ஒரு பானை சோறும் பதமாக இருந்தன. பெண்ணின் பெருமைகளைப் போற்றும் பாடல், தாய்நாட்டின் பெருமையைப் போற்றும் பாடல் என இவர்களின் சுயாதீனப் பாடல்களின் திறமையும் அன்றைக்குப் பளிச்சிட்டது.

`திஸ்ரம்' இசைக் குழுவில் மூன்று பாடகிகள். பல தாள வாத்தியங்களை வாசிக்கும் ஒரு கலைஞர், ஒரு கீபோர்ட் கலைஞர், தாளங்களை தம் குரலின் வழியாகவே ஒலிக்கும் பீட்பாக்ஸர் என ஆறு பேர் இருக்கின்றனர். மதி ஜெகன், பார்கவி மனோனா, ஆதித்யா, சிவரஞ்சனி சந்திரமவுலி, அக்ஷரா சதீந்திரன், ஸ்ரீவத்ஸன் கணேஷ் ஆகிய இந்த ஆறு பேரின் இசைப் பங்களிப்பில், மக்களிசை மற்றும் கர்னாடக இசையின் ஒத்திசைவோடு புதிய பாணியில் இவர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

2019இல் சர்கம் என்னும் பெயரில் தொடங்கிய குழு பின் 2020இல் `திஸ்ரம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. "தென்னிந்தியாவின் இசையை உலக அளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே `திஸ்ரமின்' கொள்கை என்கின்றனர் ஆறு நண்பர்களும் ஒத்திசைவோடு.

பல போட்டிகளிலும் பங்கேற்று வென்றுள்ள திஸ்ரமின் அன்றைய நிகழ்ச்சியில் செண்டை அலங்காரி என்னும் தாளமாலிகை, காளியின் பல பண்புகளை பல்வேறு தாளங்களின் மூலமாகவே ரசிகர்களுக்கு கடத்தியது. பார்ப்பவர்களை பக்திப் பரசவத்தில் ஆழ்த்தியது.

பல போட்டிகளிலும் பங்கேற்று வென்றுள்ள திஸ்ரமின் அன்றைய நிகழ்ச்சியில் அம்மன் மீது பாடப்பட்ட ஓர் உக்கிரமான பாட்டும் அடக்கம். பா.விஜய் எழுதி கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து `மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் ஒலித்த பாடல் அது.

அந்தப் பாடல் ரேவதி ராகத்தில் சதுஸ்ர கதியில் அமைந்திருக்கும். திஸ்ரம் குழுவினர் அந்த `செண்டை அலங்காரி' பாடலை தங்களின் அபரிமிதமான கற்பனையோடு வித்தியாசமான தாளகதியில் அமைத்தனர். காளியின் பல பண்புகளை பல்வேறு தாளங்களின் மூலமாகவே ரசிகர்களுக்கு கடத்தியது. பார்ப்பவர்களை பக்திப் பரசவத்தில் ஆழ்த்தியது.

- வா.ரவிக்குமார் | ravikumar.cv@hindutamil.co.in

SCROLL FOR NEXT