கத்தோலிக்கப் பெருமதத்திலும், கிழக்கு மரபுவழி கிறிஸ்தவம் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் அன்னை மரியாளுக்கு இயேசு கிறிஸ்துவுக்கு இணையான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ‘கன்னி மரியாள்’ எனும் புனிதத் தன்மையே அவரை எல்லா வகையிலும் பெண்களுக்குள் புனிதமானவராகக் கொண்டாட வைக்கிறது. அப்படிப்பட்ட மரியாவின் அமல உற்பவப் பெரு விழா என்பது, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அது என்ன அமல உற்பவம் என்கிறீர்களா? மரியா தனது கருப்பையில் பாவமின்றி இறைமகன் இயேசுவைக் கருத்தாங்கியதைக் கொண்டாடும் விழா ஆகும். ‘பிறப்புநிலைப் பாவம் இன்றி இவ்வுலகுக்கு இறைமகன் வந்தார். அதற்கு தேர்ந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதப் புனிதைதான் மரியா’ என்னும் இறைவனின் ஏற்பாட்டை மையப்படுத்தும் விழாவாக அமைந்துள்ளது.
இவ்விழாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, புனித விவிலியத்தின் புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தைப் புரட்டி, மரியாளுக்கு இறைச் செய்தி வந்த நாளுக்குச் செல்வோம் வாருங்கள்: அதில் லூக்கா எழுதிய நற்செய்தி அதிகாரம் 1: வசனங்கள் 26-38 வரையிலான வசனங்கள் இவை:
“ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ‘அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ‘மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது’ என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!’ என்றார். வானதூதர் அவரிடம், ‘தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்றார். பின்னர் மரியா, தன் முன்பாகத் தோன்றிய இறை தூதரின் வாக்கினை ஏற்றுக் கொண்டவராய்.. ‘நான் கடவுளின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.”
மரியாளின் துணிவும் பணிவும்
யூத மதம் பழமைவாதங்களின் மொத்த உருவமாக இருந்த கால கட்டம் அது. கணவன் இல்லாமல் ஒரு பெண் கருத்தாங்கினால், ஊரும் உலகமும் ஒரு பெண்ணை எத்தனை வசையுடன் பேசும் என்பது அன்றைய யூத சமுதாயத்துக்கும் பொருந்தக் கூடியதே. அதுபோன்ற அவச்சொல் வரக்கூடும் என்பது தெரிந்தே, கடவுளின் சித்தத்தை மனமுவந்து ஏற்ற மரியாவின் துணிவு, அவரது இறை பக்தியின் நம்பிக்கையின் மீதான துணிவைக் காட்டுகிறது. அதேபோல், மனித இனத்துக்கு துணிவு எத்தனை தேவையோ, அதேபோல், பணிவும் மூத்தோர் முன் தேவைப்படுகிறது. குறிப்பாக உலகத்தைப் படைத்து காத்துவரும் கடவுளின் முன்னால் பணிய வேண்டியது ஆன்மிகத்தின் அடிப்படையான தத்துவம். நமது பணிவையும் வேண்டலையுமே இறைவன் முதல் ‘பலி’யாக எதிர்பார்க்கிறார். அது அன்னை மரியாளின் அணிகலனாக இருந்தது.
மரியாளின் இந்தத் துணிவும் பணிவும்தான் அவரை இன்று அமல உற்பவ அன்னையாக உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வழிபட காரணமாக அமைந்துள்ளது. மரியாளின் வழியாக தங்களது தேவைகளையும் வேண்டுதல்களையும் ஆரோக்கியத்தையும் இறைவனிடம் கொண்டு சேர்க்கிறார்கள் உலக மக்கள். தனது தேவையையும் தனது பிரசன்னத்தையும் உணர்ந்தே அன்னை மரியா, விண்ணுலகு எடுத்துகொள்ளப்பட்ட பின்னரும் பூமியில் பல இடங்களில் காட்சியருளினார். அதில் 1500 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் கிராமம் ஒன்றில் அருளிய காட்சி அவரது ‘அமல உற்பவப்’ பெருமைக்கு சாட்சியாக இருக்கிறது.
லூர்து அன்னையின் காட்சி
அது 1858ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 25 ஆம் நாள். பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பெர்னதெத் என்கிற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து எனும் சிறு கிராமத்தில் (இன்று அது மாபெரும் நகரம்) உள்ள மசபேல் குகைக்கருகில் தனது ஆடுகளை மேய்த்துகொண்டுக்கொண்டிருந்தாள். அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், “அம்மா உங்களுடைய பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், “நாமே அமல உற்பவம்” என்று பதிலளித்தார்.
மரியாளின் இந்தக் காட்சி நிகழ்வு நடைபெறுவதற்கு 7 நூற்றாண்டுகளுக்கு முன்பு கீழைத் திருச்சபையில் ‘மரியாளின் உற்பவம்’ (The Conception of Mary) என்கிற விழாவினைக் கொண்டாடி மரியாளைப் பெருமைப்படுத்ஹி வந்தார்கள். இவ்விழா மரியாளின் பிறப்பையும் அவரிடம் விளங்கிய நல்ல பண்புகளையும் பக்தர்களுக்கு எடுத்துக் காட்டுவதாக விளங்கி வந்தது. படிப்படியாக இவ்விழா மேலைநாட்டுத் திருச்சபைகளுக்கும் பரவியது.
மரியாள் லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்துவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 1854 ஆம் ஆண்டு வாடிகன் திருத்தந்தை ஒன்பதாம் பத்தி நாதர் ‘மரியாள் கருவிலே பாவக்கறை இன்றி தோன்றியவர்’ என்கிற விசுவாசப் பிரகடனத்தை அறிக்கையிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறே வழங்கப்பட்டு வருகின்றது. நாமும் இனி இக்கட்டுரையில் மரியாளை ‘அமலோற்ப அன்னை’ என்றே அழைப்போம். மானுட குலத்துக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழும் அமலோற்பவ அன்னையைப் போல் இன்றைய மனிதர்களால் வாழ முடியுமா என்று எண்ணிப் பார்ப்போம். அவரைப் போன்று நம்மால் வாழ் முடியாவிட்டாலும், அவரது முன்மாதிரியை வாழ்க்கையில் பயிற்சி செய்ய நாம் இரண்டு குணங்களை பின்பற்றலாம்.
தூய்மையும் வாய்மையும்
அதில் முதலாவது தூய்மை. இறந்த இயேசுவைத் தன் மடியில் ஏந்திய அன்னையைச் சிலையாக வடித்தவர் உலகப் பெரும் சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ. உலகப் புகழ்பெற்ற அந்தச் சிலைக்கு பியத்தா என்று பெயர். அவரது வேலைப்பாட்டினைப் பாராட்டிய ஒருவர் ஒரு குறையாகச் சுட்டிக்காட்ட விரும்பி, ‘ஐயா, மரியாவின் முகத்தை நீர் செதுக்கிய விதத்தைக் காணும் போது, அது 33 வயது மகனுக்குத் தாயாக இருக்கக்கூடிய முதிய தோற்றம் இல்லாது, மிகவும் இளமையாக, சிறுபெண்ணின் முகம் போல் உள்ளதே?” என்றாராம். அதற்கு மைக்கேல் ஆஞ்சலோ சொன்ன பதில் என்ன தெரியுமா? “பாவமும் பாவச் சிந்தனையும் உள்ளவர்களுக்குத்தான் மூப்பின் தன்மை வெளிப்படும், அன்னை மரியாவோ பாவ மாசற்றவள். பாவச் சிந்தனையற்று அதன் நிழல்கூட தன்னை தீண்டாமல் வாழ்ந்தவள். எனவே அவள் எப்பொழுதும் இளமையாகத்தான் இருப்பாள்” எத்தனை ஆழமான, தீர்க்கமான வார்த்தைகள். அமலோற்பவ அன்னையிடமிருந்து போல் மனத் தூய்மை எனும் சிறந்த முன்மாதிரியை நாம் பின்பற்றலாம். அதேபோல்
மனித குலத்தின் முதல் தாயான ஏவாளின் கீழ்ப்படியாமையால் விண்ணகக் கதவு நமக்கு அடைக்கப்பட்டது. தன் பாவத்தால் கடவுளோடு நமக்குள்ள அருள்நிலையை இழந்து தண்டனையையும் சாபத்தையும் மனுக்குலத்தின் மீது கொண்டு வந்தாள். அமலோற்ப அன்னையான நம் புனித மரியாளோ, இறைவனின் முடிவில்லா திட்டத்தில் அருள் மிகப் பெற்றவராய் இருந்தார். தன் கீழ்ப்படிதலால் அருள் நிறைந்தவரானார். கடவுளின் திட்டமே உண்மையானது என நம்பினார். உண்மையின் பக்கம் அவர் நின்றதால் அமல உற்பவி ஆனாள். தாம் கருத்தாங்கிய இறைமகன் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பால் இந்த உலகம் மீட்புபெரும் என்கிற வாய்மைக்கு கீழ்படிந்தார். நாமும் அமலோற்பவ அன்னையின் கீழ்ப்படிதலாலும் விசுவாசத்தாலும் நிறை அருளைப் பெற அன்னையிடம் பிரார்த்திப்போம்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in