திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகேயுள்ள திருப்பூவனூரில் அருள் பாலிக்கும் சிவபெருமான் சதுரங்க வல்லபநாதர் என்னும் திருப்பெயரால் வணங்கப்படுகிறார். இந்த ஆலயத்தின் இறைவனுக்கு அமைந்த பெயர், அவர் சதுரங்க விளையாட்டில் எவராலும் வெற்றி கொள்ள முடியாத அரசனின் மகளும் பார்வதி தேவியின் அம்சமான ராஜேஸ்வரியை வெற்றி கொண்டு, அதன் பயனாக அவரை கைத்தளம் பற்றிய திருவிளையாடலின் பயனாக அமைந்தது.
சர்வதேச செஸ் போட்டியைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி தன்னுடைய உரையில் சதுரங்க வல்லபநாதர் குறித்தும் பன்னெடுங் காலத்துக்கு முன்பாகவே இந்தியாவில் செஸ் ஆடப்பட்டு வந்த செய்திகளையும் பகிர்ந்து கொண்டது, உலக அளவில் பேசுபொருளானது. சர்வதேச செஸ் ஒலிம்பியாடின் மூலம் உலகின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியிருக்கின்றது. இந்தியாவின் பாதைகள் அனைத்தும் தமிழகத்தின் மாமல்லபுரத்தை நோக்கித் திரும்பி, அங்கு நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்தன.
இந்தியாவில் விளையாடப்பட்ட விளையாட்டே, சில மாறுதல்களுடன் தற்போதுள்ள செஸ் விளையாட்டாக ஆடப்படுகிறது என்பதை நிபுணர்கள் உறுதியாகச் சொல்கின்றனர். ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பே போர்க்களத்தின் வியூகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு ஆடப்பட்டதற்கான சரித்திரச் சான்றுகள் கிடைத்துள்ளன. இந்தத் தருணத்தில் புராண ரீதியாக செஸ் விளையாட்டுக்கும் நம் மண்ணுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்கின்ற திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதரைக் குறித்தும் அவர் பார்வதியின் அம்சமான ராஜேஸ்வரியை மணமுடித்த வைபவத்தைப் பற்றியும் டிகேஆர் மியூசிக் அறக்கட்டளையின் யூடியூப் தளத்தில் தெய்வாம்சத்துடன் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
டிகேஆர் மியூசிக் அகாடமியின் நிறுவனர் திருவலம்பொழில் கே.ராம்குமார் `சதுரங்க வல்லபநாதன் சதாசிவன்' என்னும் பாடலை எழுத, அதற்கு இசையமைத்து இனிமையாகப் பாடியிருக்கிறார் கர்னாடக இசைக் கலைஞர் சிக்கில் குருசரண். சாயி ரக்ஷித்தின் வயலினும் கிஷோர் ரமேஷின் மிருதங்கமும் பாடலோடு இதமாக கைகோத்திருக்கின்றன.
சதுரங்கத்தின் 64 கட்டங்களையும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் பாட்டின் வரிகளில் ஒப்புமைப்படுத்தி வியக்கவைக்கிறார் பாடலை எழுதியிருக்கும் கே.ராம்குமார். நான்கு பக்கத்தை குறிப்பால் உணர்த்தும் சதுரங்க வல்லபநாதரைப் பற்றிய பாடலுக்கான இசையை (ஐந்தெழுத்து `நமசிவாய' நினைவுகூரும் வகையில்) ஐந்து ஸ்வரங்களைக் கொண்ட வலஜி என்னும் ராகத்தில் அமைத்து உருக்கமாகப் பாடியிருக்கிறார் சிக்கில் குருசரண்.
பாடலைக் கேட்டு நீங்களும் உருக: https://www.youtube.com/watch?v=D1e3RVAYLSQ