கர்னாடக இசைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கும் ஆளுமைகளைப் பற்றி மிகவும் குறைந்த பதிவுகளே நம்மிடம் இருக்கின்றன. அந்தக் குறையைத் தன்னளவில் போக்குவதற்கான பெருமுயற்சியைக் கடந்த இருபதாண்டுகளாகச் செய்துவருபவர் லலிதாராம். வெகுஜனப் பத்திரிகைகளில்தான் எழுதுவேன் என்றில்லாமல், இணையப் பத்திரிகைகள், கலாபூர்வமான சிற்றிதழ்கள், கருத்தரங்குகளில் உரை எனப் பல வடிவங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இசை ஆளுமைகளைப் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், உரைகளின் தொகுப்பு இந்நூல்.
ஒருவரின் இசையைப் பற்றி எழுதுவதைவிட, அந்த இசை ஆளுமையைப் பற்றி எழுதுவது மிகவும் சவாலான விஷயம். நூலில் இடம் பெற்றிருக்கும் கருத்துகளைப் படிக்கும்போது மீண்டும் மீண்டும் தோன்றும் எண்ண அலைகளைத் தவிர்க்கமுடியவில்லை. இந்த உணர்வு நூலாசிரியருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதை நூலுக்கான அவரின் தலைப்பே சொல்கிறது.
கர்னாடக இசை உலகில் பெரிதும் மதிக்கப்படும் பலருக்கும் நன்கு அறிமுகமான எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜி.என்.பி., அரியக்குடி, மதுரை சோமு, எஸ்.ராஜம், டி.கே.பட்டம்மாள் உள்ளிட்ட கலைஞர்களோடு, வயலின் மேதை மைசூர் சௌடையா, நாதயோகி பழனி சுப்ரமணிய பிள்ளை, தவில் மேதை யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, கர்னாடக இசையை முதன் முதலாக கிதாரில் வாசித்த சுகுமார் பிரசாத், தம்புரா கணேசன், கர்னாடக இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக ஆண்டுதோறும் ஜப்பானிலிருந்து வரும் ரசிகர், ஒளிப்படக் கலைஞர் அகிரா ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளின் வாயிலாக இசை உலகின் பல பரிமாணங்களில் நமக்குத் தரிசனம் கிடைக்கிறது.
நாகசுரங்களை உருவாக்குவதில் பெரிய சாதனைகளைப் படைத்த ரங்கநாத ஆசாரி, மிருதங்கம் உருவாக்கத்தில் தன்னிகரற்ற திறமை களோடு ஜொலித்த பர்லாந்து, செல்வம் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள், கர்னாடக இசையின் வளர்ச்சிக்குப் பாட்டாளி மக்களின் உழைப்பையும் நன்றியோடு நினைத்துப் பார்க்க வைக்கிறது.
மகா வைத்தியநாத சிவன் 72 மேளகர்த்தா ராகங்களில் ப்ரணதார்திஹரரின் மீது ஒரு பாடலைப் பாடியது பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கான உந்துதலை அவருக்கு ஏற்படுத்திய நிகழ்ச்சி பலருக்குத் தெரியாது. அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர்.
கணினி சார்ந்த அறிவு, கிரிக்கெட்டில் இருக்கும் ஆர்வம் எல்லாமும் அவரின் எழுத்து நடையில் தகுந்த இடங்களில் சுவாரசியமாகவும் ரசனையுடனும் வெளிப் பட்டிருப்பது சிறப்பு. உதாரணத்துக்கு, எம்.எஸ்.ஸின் கச்சேரி குறித்து நூலாசிரியர் எழுதியிருக்கும் வர்ணனை: டெஸ்ட் மேட்ச் போன்ற `ஓ ரங்க சாயிக்கும்', ஒரு நாள் போட்டி போன்ற, ஒரு களையில் அமைந்த `திருவடி சரணத்திற்கும்' இடையில் எம்.எஸ். காட்டும் வேறுபாட்டை அவரது கச்சேரிகளில் தெளிவாகக் காணலாம்.”
லலிதாராமின் மென் ஷட்ஜமத்தின் வழியாக இசையின் தெய்விகம் மனத்தில் பரவுகிறது.
பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்
லலிதாராம்
மலர் புக்ஸ், சென்னை. அலைபேசி:
93828 53646.